2008-ல் அமெரிக்க அதிபராக ஒபாமா வென்றது வலதுசாரிகளுக்கு விழுந்த அடி. 9/11 தாக்குதல், ஆப்கானிஸ்தான் போர், ஈராக் பிரச்னை, சதாம் உசேன், இறுதியாகப் பொருளாதார வீழ்ச்சி என ஜார்ஜ் புஷ் அரசின் மீதான அதிருப்தியைக் குடியரசு கட்சியே நன்கு உணர்ந்திருந்தது. அதனாலேயே 2008 அதிபர் போட்டியில் குடியரசு கட்சி சார்பில் நின்ற ஜான் மேக்மேன், கடந்த எட்டாண்டு புஷ் அரசின் செயல்பாட்டைப் பற்றி பேச மறுத்தார்.
மறுபுறம் ஜனநாயக கட்சியோ வெளியுறவு செயல்பாடு போன்ற அமெரிக்க அரசியல் சாரத்தை எதிர்த்து களத்தில் நின்றது. ஈராக் போரை வெளிப்படையாக எதிர்த்து பிரசாரம் செய்தார் ஒபாமா. பொருளாதார நெருக்கடியைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ஜனநாயக கட்சி, போர், ராணுவம் போன்ற விளம்பர அரசியலைத் தவிர்த்து மருத்துவம், கல்வி, வரி ஒழுங்குமுறை என்று வளர்ச்சி கோஷத்தை மையப்படுத்திய பிரசாரத்தை முடுக்கியது. ஆட்சி அல்லாமல் அமைப்பு மாற்றம் வேண்டும், வாஷிங்டன் புதிய உதயமாகட்டும் என்ற ஒபாமாவின் வெற்றி அமெரிக்க அரசியலின் மைல்கல்லாக அமைந்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தேசிய தூய்மைவாதம் அதிகமுள்ள அமெரிக்காவில் முதன்முதலில் வென்ற ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஒபாமா. இந்த அடையாளமே தாராளவாத வலதுசாரிகளுக்கு விழுந்த முதல் அடி. அப்படியிருக்கையில், அமைப்பை மேலும் வலுப்படுத்தி தம்மை மறுபரிசோதனைக்கு உட்படுத்தி தீவிர கள அரசியலில் இறங்க வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஒபாமாவும் இடதுசாரியில்லை என்றாலும் பன்னாட்டு மருத்துவ காப்பீடு, அரசின் செலவிலான உதவி திட்டங்கள், பெருநிறுவனங்களுக்களுக்கான வரி உயர்வு போன்ற செயல்பாடுகள் குடியரசு கட்சியினருக்குக் கோபத்தை மூட்டியது. நாட்டில் அரசு நிர்வாகத்தையே விரும்பாத தனியார்மய ஆதரவாளர்கள் ஒபாமா என்றில்லாமல், புதிய அமைப்புக்கான பிரசாரத்தை ஆரம்பித்தனர். 2009-ம் ஆண்டு உருவான டீ பார்ட்டி இயக்கம் தொடங்கிப் பல எதிர்ப்பியக்கங்கள் தீவிர வலதுசாரி பாப்புலிச பிரசாரத்தைப் பரவலாக்கியது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஒரு சந்திப்பு!
ஸ்டீவ் பேனோன் (Steve Bannon) குடியரசு கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர், குறிப்பாக வலதுசாரிய சினிமா தயாரிப்பாளர். தம் சினிமா தயாரிப்பு வேலைகளில், முக்கியமாக கிளிண்டன் எதிர்ப்பு சினிமாக்களை எடுப்பதில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தவர். அப்போது பேனோனுக்கு டேவிட் போஸியிடமிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு வருகிறது. டேவிட் போஸி (David Bossie) பழைமைவாத செயற்பாட்டாளர் மற்றும் குடியரசு கட்சியின் மூத்த புலனாய்வாளர். கடந்த 20 வருடங்களில் பில் மற்றும் ஹிலாரி கிளிண்டன் முறைகேடுகளின் ஆய்வை மேற்கொண்டவர்.
"நீங்கள் என்னோடு நியூயார்க்கிற்கு வரமுடியுமா?" என்கிறார் போஸி.
"எதற்காக?" என்கிறார் பேனோன்.
"டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்க வேண்டும்."
"என்ன விஷயம்?"
"ட்ரம்ப் அதிபராக விரும்புகிறார்."
"எந்த நாட்டிற்கு?" என நக்கலடிக்கிறார் பேனோன்.

"காமெடி இல்லை... உண்மைதான். நீங்கள் நிச்சயம் வர வேண்டும்" என வற்புறுத்தி அழைக்கிறார் போஸி. ஒருவழியாக இருவரும் நியூயார்க்கில் உள்ள ட்ரம்ப் டவரில் ட்ரம்பை சந்திக்கின்றனர். இந்தச் சந்திப்பு நடைபெற்றது 2010-ம் ஆண்டு. சரியாக ட்ரம்ப் அதிபராவதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு.
"முதலில் உங்களை நீங்கள் குடியரசு கட்சியின் முதன்மையானோர்கள் பட்டியலில் இடம்பெறச் செய்யவேண்டும், அதன்பிறகு ஒபாமாவை எதிர்த்து நிற்பதற்கான தகுதியை உருவாக்க வேண்டும்" போன்ற அடிப்படை விதிகளை ட்ரம்ப்பிடம் விளக்குகிறார் போஸி. "இன்றைய நிலைக்கு மக்கள் மத்தியில் உங்களை எவ்வாறு வெளிப்படுத்துகிறீர்கள், மக்களுக்கு நீங்கள் யார் என்ற விளம்பரம் அவசியம். அதற்கு நீங்கள் 'டீ பார்ட்டி இயக்கத்தை' அறிந்திருக்க வேண்டும். இந்த இயக்கம் மேல்தட்டினரை எதிர்ப்பதுபோல் காட்டிக்கொள்ளும், பொது ஜனத்தில் ஒருவனின் குரலைப் போல் போராட்டத்தை வெளிப்படுத்தும், மொத்தத்தில், இந்த அமைப்பே சரியில்லை போன்ற எதிர்ப்பு பிரசாரத்தை கடைப்பிடிக்கும். ஏனெனில், மக்களால் தூண்டப்படும் எதிர்ப்பு, பாப்புலிச அரசியலில்தான் நம் வெற்றி உள்ளது. அதில் நாம் எந்தளவிற்குக் கவனிக்கப்பெறுகிறோம் என்பதே முக்கியம்" எனப் பாடம் எடுக்கிறார் போஸி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தொழிலதிபரான ட்ரம்ப் சில டிவி நிகழ்ச்சிகளில் தோன்றி ஓரளவு பிரபலம் என்றாலும், அரசியலில் எந்த முன் அனுபவமும் இல்லாதவர். ஆனால், தான் விரும்பும் பெரு முதலாளிய கொள்கையால் அரசியலில் வெல்லலாம் என போஸி சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகிறார் ட்ரம்ப். குடியரசு கட்சியின் வேட்பாளராவதற்கான மூன்று அடிப்படை விதியை ட்ரம்ப்பிடம் கேட்கிறார் போஸி.
முதலாவது இயற்கை விரோதமற்றவர் (Pro Life). அதாவது, எக்காரணத்தை முன்னிட்டும் கருக்கலைப்பு, கருணை கொலை போன்றவற்றை அனுமதிக்கக் கூடாது. குடியரசு கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் தம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளை இது.
"நான் ஒருபோதும் கருகலைப்பையெல்லாம் அனுமதித்ததில்லை. நான் எப்போதும் இயற்கை விரோதமற்றவன்தான் (Pro Life)" என்றார் ட்ரம்ப்.

"இரண்டாவது நீங்கள் குடியரசு கட்சியின் முதன்மை வேட்பாளருக்கு வாக்கு செலுத்திய விதம். இதுவரை எத்தணை முறை ஓட்டுப் போட்டுள்ளீர்கள்?" எனக் கேட்கிறார் போஸி.
"நான் எனது 18, 19 வயதிலிருந்து விடாமல் ஒட்டு போட்டு வருகிறேன்" என்கிறார் ட்ரம்ப். ஆனால், அது உண்மையல்ல. குடியரசு கட்சியின் பதிவின்படி 1989-ம் ஆண்டு ஒருமுறை மட்டும்தான் குடியரசு கட்சியின் முதன்மை வேட்பாளருக்கு வாக்கு செலுத்தியுள்ளார் ட்ரம்ப்.
மூன்றாவது விதியிலும் சறுக்கல். அதாவது, இதுவரை நன்கொடை கொடுத்த விபரம். ட்ரம்ப் தனது 80% நன்கொடையை ஜனநாயக கட்சியினருக்கே வழங்கி வந்துள்ளார். காரணம் கேட்டபோது, "எனது பிசினஸ் நடக்கும் இடத்தில் அவர்கள்தான் அதிகாரம் செலுத்தி வருகிறார்கள். அரசியல்வாதிகளுக்குக் கட்சி பார்க்காமல் நன்கொடையைக் கொடுப்பது பிசினஸ்மேன்களின் வியாபார நோக்கம்தானே தவிர அரசியல் காரணமில்லை" எனப் பதிலளித்துள்ளார்.
தற்போதிலிருந்து மாகாண தேர்தல் வேளைகளில் கவனம் செலுத்துங்கள், கட்சிக்கான செலவைப் பார்த்துக்கொள்ளுங்கள், உங்களுக்கான பாலிசியை உருவாக்குங்கள் போன்ற அறிவுரைகளை அடுக்கி அந்த சந்திப்பை முடித்துவைக்கிறார் போஸி. பிறகு, ''ட்ரம்பை பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள், அவர் அதிபராக வாய்ப்புள்ளதா?'' எனக் கேட்கிறார் போஸி.

"இவரால் ஒருபோதும் அதிபராக முடியாது. அதற்கான வாய்ப்பும் தகுதியும் துளிகூட இவரிடம் இல்லை. முதலில் இவர் குடியரசு கட்சியின் முதன்மையானோர் பட்டியலில் இடம்பெறுவதே நடக்காத காரியம்" என்கிறார் ஸ்டீவ் பேனோன்.
ஆனால், பேனோன்தான் 2016-ம் ஆண்டு ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், ட்ரம்ப் அரசின் திட்ட மேலாளராகவும் மாறினார்...
அடுத்து என்னவெல்லாம் நடந்தது என்பது நாளை!