Published:Updated:

தாலிபன்களின் கதை-12| ஆப்கானிஸ்தானை வாழத் தகுதியற்றதாக்கிவிட்டோம்... செவ்வாய்கிரக கனவில் வாழ்கிறோம்!

தாலிபன்களின் கதை-12| ஆப்கானிஸ்தான்
தாலிபன்களின் கதை-12| ஆப்கானிஸ்தான்

தி.முருகன் எழுதும் 'தாலிபன்களின் கதை' தொடரின் கடைசி அத்தியாயம் இங்கே!

ஆகஸ்ட் 31 செவ்வாய்க்கிழமை... ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விடிவதற்கு சற்று முன்பாக அமெரிக்காவின் கடைசி விமானம் கிளம்பிச் சென்றது. ''ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கை இன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது'' என்று அறிவித்தார் அமெரிக்க ராணுவத் தளபதி கென்னத் மெக்கன்ஸி.


கடைசி இரண்டு வாரங்களில் தங்கள் நாட்டினர், நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள், கடந்த 20 ஆண்டுகளாக தங்களுக்கு உதவிய ஆப்கானியர்கள் என்று சுமார் ஒன்றரை லட்சம் பேரை விமானங்கள் மூலம் வெளியேற்றிக் கூட்டிச் சென்றது அமெரிக்க ராணுவம்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

எல்லாம் முடிந்ததும், காபூல் விமான நிலையத்தில் தாங்கள் விட்டுச் சென்ற 73 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை சேதப்படுத்தினர். விமானங்களை உடைத்தும், டயர்களை துப்பாக்கியால் சுட்டும், அவற்றை தாலிபன்கள் பயன்படுத்த முடியாதபடி செய்தனர். இதேபோல 70 கவச வாகனங்களையும் குண்டுவீசி அழித்தனர். இவை ஒவ்வொன்றும் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ளவை.

விமான நிலையத்தை தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுகள் வீசித் தாக்கினால், அந்த குண்டுகளை அழிப்பதற்கு ஒரு தற்காப்பு சிஸ்டத்தை நிறுவி வைத்திருந்தனர். இதை எதிர்காலத்தில் அமெரிக்கர்களுக்கு எதிராக தாலிபன்கள் பயன்படுத்தினால் என்ன செய்வது என்ற பயத்தில் அதையும் அழித்தனர். அதன்பிறகே அமெரிக்க ராணுவத்தினர் கிளம்பினர்.


தாலிபன்கள் உடனடியாக வந்து காபூல் விமான நிலையத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். ரன்வேயில் நின்றிருந்த விமானங்களில் ஏறி உட்கார்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்கள் வெற்றியைக் கொண்டாடினர். 'அமெரிக்காவின் இந்தத் தோல்வி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்' என்று முழங்கினர்.

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் இருக்கிறது ஆர்லிங்டன் தேசியக் கல்லறை. போர்களில் இறக்கும் அமெரிக்க வீரர்கள் இங்குதான் புதைக்கப்படுகிறார்கள். ஆப்கானிஸ்தான் பிரச்னையால் இங்கு கல்லறைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றன. இனி அது நடக்காது.
2001-ம் ஆண்டு ஆப்கனில் அமெரிக்க விமானங்கள் இறங்கியபோது, நிலையற்ற, பாதுகாப்பற்ற தேசமாக அது இருந்தது. முன்பைவிடவும் பாதுகாப்பற்ற தேசமாக ஆப்கனை மாற்றிவிட்டு அமெரிக்கா நடையைக் கட்டியுள்ளது.

தாலிபன்கள்
தாலிபன்கள்

ஒரு காலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் ஆப்கனில் பாதுகாப்பு பணியைச் செய்தார்கள். கடைசி மாதங்களில் வெறும் 3 ஆயிரம் பேர் இருந்து, தாலிபன்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். அவர்கள் பின்வாங்கிய அடுத்த சில நாட்களில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்துவிட்டனர்.
இந்த நேரத்தில் ஆப்கன் விமான நிலையத்தில் இஸ்லாமிக் ஸ்டேட் கோரசான் அமைப்பு நிகழ்த்திய தாக்குதல், பல உண்மைகளை உணர்த்தியுள்ளது.

'இங்கு தாலிபன்கள் மட்டும் இல்லை, நாங்களும் இருக்கிறோம்' என அமெரிக்காவுக்கு மெசேஜ் சொன்ன தாக்குதல் அது. 'உங்களால் தாக்குதல்களையும் இழப்புகளையும் தடுக்க முடியாது' என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கை அது. 'நீங்கள் கைப்பற்றிய நாட்டை நிம்மதியாக ஆள முடியாது' என்று தாலிபன்களுக்கும் அவர்கள் செய்தி சொல்லியிருக்கிறார்கள்.


இந்தத் தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் இறந்தனர். இதற்குப் பழிவாங்க ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது டிரோன் தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. 'எங்களைக் கேட்காமல் எங்கள் மண்ணில் எப்படித் தாக்குதல் நடத்தலாம்' என்று தாலிபன்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 'ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப் பிறகு அமெரிக்கா ஆப்கனில் அத்துமீறக் கூடாது' என்று எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால், 'தேவைப்படும் சூழல்களில் நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்கா திட்டம் வைத்துள்ளது' என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.


''உலகத்துக்கே ஆபத்தான இடமாக ஆப்கானிஸ்தான் இப்போது மாறிவிட்டது. அது பயங்கரவாதத்தின் தலைநகரமாக ஆகியிருக்கிறது'' என்று அமெரிக்க செனட்டர்கள் பலர் கவலையுடன் சொல்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாலிபன்களின் கையில் அணுகுண்டு கிடைத்துவிட்டால் என்ன ஆவது என்ற அச்சம் அதைவிடப் பெரிதாக வந்திருக்கிறது. அமெரிக்க செனட்டர்கள், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் என்று 68 பேர் இணைந்து அதிபர் ஜோ பைடனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். 'தாலிபன்கள் இப்போது வலிமையாக இருக்கின்றனர். அவர்கள் தங்கள் ராணுவ பலத்தைப் பயன்படுத்தி, பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தான் அரசை ஒன்றுமில்லாமல் செய்தால் என்ன ஆகும்? பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் அணுகுண்டுகள் தாலிபன்கள் கைக்கு வந்துவிடுமே? அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?' என்று அந்தக் கடிதத்தில் கேட்டிருக்கிறார்கள்.


பாகிஸ்தானின் அணுகுண்டுகள் தாலிபன்கள் கைக்குப் போகும் அபாயம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. பாகிஸ்தானுக்கும் தாலிபன்களுக்கும் இதுவரை இருந்துவந்த ரகசிய உறவு, இப்போது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்துவிட்டது. ''ஆப்கானிஸ்தானை இதுவரை கட்டிப் போட்டிருந்த அடிமைச் சங்கிலியை தாலிபன்கள் உடைத்துவிட்டனர்'' என்றார், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். அவரது பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைவர் நீலம் இர்ஷாத் ஷேக் இன்னும் ஒருபடி மேலே போய், ''விரைவில் தாலிபன்கள் காஷ்மீருக்கு விடுதலை வாங்கித் தருவார்கள்'' என்றார்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
Khwaja Tawfiq Sediqi

ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவர் சிராஜுல் ஹக், பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் தாலிபன் தலைவர்களை வாழ்த்தி பெரிய விளம்பரப் பலகைகளை வைத்திருக்கிறார். ''தாலிபன்களின் வெற்றி, இஸ்லாமிய உலகத்தின் வெற்றி. தாலிபன்கள் அரசை பாகிஸ்தான் முதல் நாடாக அங்கீகரிக்க வேண்டும். விரைவில் தாலிபன்களால் காஷ்மீர் மற்றும் பாலஸ்தீன விடுதலைக் கனவு நிஜமாகும்'' என்கிறார் அவர்.
'அமெரிக்காவின் எதிரியாக இருப்பது மிக ஆபத்தானது. அமெரிக்காவின் நண்பனாக இருப்பது அதைவிட ஆபத்தானது' என்று முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் ஒருமுறை சொன்னார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறியது, எதிரிகளை விட நண்பர்களுக்கே அதிக கவலை தரும் விஷயமாக ஆகிவிட்டது.


குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவுக்கும் நேச நாடுகளின் படையினருக்கும் உதவிய அத்தனை பேரும் ஆப்கானிஸ்தானில் திகிலோடு நாட்களை நகர்த்துகிறார்கள்.
காபூலில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ ஒரு முகாம் அலுவலகம் வைத்திருந்தது. அந்த அலுவலகத்தை காலி செய்தபோது, குண்டுவீசி அங்கிருந்த அத்தனை தடயங்களையும் அழித்தது. அமெரிக்க தூதரகத்தைக் காலி செய்யும்போது, அங்கிருந்த ஆவணங்கள் அனைத்தையும் எரித்துவிட்டனர்.


என்றாலும், வேறு இடங்களில் தாலிபன்களுக்கு தடயங்கள் சிக்கின. ஆப்கன் ராணுவத்தினர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளின் ராணுவத்தினருக்கு உதவிய மொழிபெயர்ப்பாளர்கள், டிரைவர்கள், நர்ஸ்கள், உதவியாளர்கள், கான்ட்ராக்ட் நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் என்று பலரது பயோமெட்ரிக் தகவல்கள், ஆப்கன் உள்துறை அலுவலகத்தில் சேமித்து வைக்கப்பட்டன. இப்படி சுமார் மூன்று லட்சம் பேரின் கைரேகை, முகவரி உள்ளிட்ட அத்தனை தகவல்களும் தாளிபன் படைகளின் கைகளுக்குப் போய்விட்டன.

இப்படி தங்களுக்கு உதவியவர்களில் சிலரை மட்டுமே அமெரிக்கா தன் நாட்டுக்கு அழைத்துக்கொண்டது. மற்றவர்கள் ஆப்கனில்தான் இருக்கிறார்கள். தாலிபன்களிடம் அல் இஷா (Al Isha) என்ற சிறப்புப் படை இருக்கிறது. பயங்கரமான ஹக்கானி நெட்வொர்க்கைச் சேர்ந்த நவாசுதீன் ஹக்கானி என்பவர் இதன் தலைவராக இருக்கிறார். 1,100 வீரர்கள் இந்தப் படையில் இருக்கிறார்கள். தாலிபன்களில் நவீன தொழில்நுட்பங்களை அறிந்த, அதிபயங்கரமான ஆயுதங்களைக் கையாளத் தெரிந்த பிரிவு இது. ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களிலும் இவர்கள் கிளை பரப்பி இருக்கிறார்கள்.

தாலிபன் தலைவர்கள்
தாலிபன் தலைவர்கள்
Kathy Gannon

''உள்துறை அமைச்சகமே எங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. எல்லா தகவல்களும் இப்போது எங்களிடம் உள்ளது. வெளிநாட்டுப் படைகளுக்கு உளவு சொன்னவர்கள், டாலர்களைப் பெற்றுக்கொண்டு எதிரிகளுக்குத் துணை போன துரோகிகள் யாரையும் விட மாட்டோம்'' என்று ஆத்திரத்துடன் சொல்கிறார் நவாசுதீன் ஹக்கானி.


பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ இவர்களுக்கு களத்தில் உதவி செய்கிறது. இந்தியா ஆப்கனில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் கட்டமைப்புப் பணிகளைச் செய்து கொடுத்திருந்தது. அதற்கு உதவியவர்கள் பட்டியலை பாகிஸ்தான் ஆட்கள் தனியாக எடுக்கிறார்கள்.
இப்படி கறுப்புப் பட்டியலைத் தயாரித்து, அதில் இடம் பெற்றவர்களின் வீடுகளுக்குப்போய் தாலிபன்கள் மிரட்டுகிறார்கள். பலர் தலைமறைவாகிவிட, 'உடனடியாக தாலிபன்களின் கோர்ட்டில் வந்து ஆஜராகவில்லை என்றால் மரண தண்டனை விதிக்கப்படும்' என்று வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படுகிறது.


இப்படி என்ன செய்தாலும், அமெரிக்காவுக்கு நம்மை விட்டால் வேறு வழியில்லை என்பதே தாலிபன் தலைவர்களின் நினைப்பாக இருக்கிறது. 'அல் கொய்தாவோ, ஐ.எஸ் தீவிரவாதிகளோ ஆப்கானிஸ்தானில் தலையெடுக்காமல் இருக்க வேண்டும் என்றால், நம்முடன்தானே அமெரிக்கா கூட்டணி வைக்க வேண்டும்' என்பது தாலிபன்களின் லாஜிக். இதை மறுக்கவும் முடியாது.


ஆப்கானிஸ்தான் ஆட்சியில் முக்கியப் பொறுப்புகளை ஏற்க இருக்கும் தாலிபன் தலைவர்கள் பலரும் அமெரிக்காவால் தேடப்படுவோர் பட்டியலில் இருக்கிறார்கள். சிலரின் தலைக்கு பல லட்சம் விலை வைக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச நாடுகளால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட அவர்கள் அமைச்சர்களாக ஆனாலும், ஆப்கன் எல்லையைத் தாண்டி கால் பதிக்க முடியாது. எனவே, அந்தப் பட்டியல்களை நீக்க வேண்டும் என்று தாலிபன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜோ பைடன் - அமெரிக்க வீரர்கள்
ஜோ பைடன் - அமெரிக்க வீரர்கள்
Manuel Balce Ceneta

கடைசி அமெரிக்க விமானமும் போய்விட்ட பிறகு, ஆப்கனிலிருந்து தப்பிக்க நினைக்கும் பலர் வேறு வழியின்றி சாலை வழியாக பாகிஸ்தானுக்கோ, ஈரானுக்கோ போகிறார்கள். குண்டுகள் வெடித்து சிதைந்த சாலைகள், எரிந்து கிடக்கும் வாகனங்களைத் தாண்டி இரவு நேரங்களில் பயணம் செய்ய வேண்டும். தாலிபன் வீரர்கள் கண்ணில் பட்டால் மரணம் நிச்சயம். என்றாலும், வாழ்க்கையின் மீதான பிடிப்பு அவர்களைத் துரத்துகிறது. எப்படியாவது எல்லைக்கு வந்துவிட்டால், அங்கிருக்கும் பாகிஸ்தான் வீரர்களிடம் 5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்தால் எல்லை தாண்டிவிட முடியும். இதை சாமர்த்தியமாகச் செய்துதரும் கடத்தல்காரர்களும் பெருகிவிட்டனர்.

இப்போதைக்கு ஆப்கானிஸ்தானில் லாபம் தரும் தொழிலாக அதுவே இருக்கிறது. சொந்த ஊரில் இருந்தால் உயிருக்கு ஆபத்து என்ற பயத்தில் தங்கள் நாட்டுக்குள்ளேயே அகதிகளாகத் திரியும் ஆப்கன் மக்கள் 35 லட்சம் பேர். பாகிஸ்தானில் 14 லட்சம் பேரும், ஈரானில் எட்டு லட்சம் பேரும் அகதிகளாக இருக்கிறார்கள்.
ஆப்கன் மக்களில் ஏழு பேரில் ஒருவர் அகதியாகத் தன் மண்ணிலிருந்து வெளியேறி வேறு எங்கோ உயிர் பயத்துடன் வாழ்கிறார். இந்த உலகமோ செவ்வாய்க் கிரகத்தில் வாழ்வது பற்றி கனவு கண்டுகொண்டிருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு