அலசல்
அரசியல்
Published:Updated:

பின்லாந்தில் பெண்கள் ராஜ்ஜியம்!

சான்னா மரின்
பிரீமியம் ஸ்டோரி
News
சான்னா மரின்

உலகின் இளம் பிரதமர் சான்னா மரின்

பின்லாந்து பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட 34 வயது நிரம்பிய சான்னா மரின், `உலகின் இளம் பிரதமர்’ என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். இதுமட்டுமல்ல, சான்னா மரின் அமைச்சரவையில் இன்னும் பல புதுமைகள் உள்ளன. அமைச்சரவையில் இடம்பெறப்போகும் 19 அமைச்சர்களில் 12 பேர் பெண்கள். அதில் நிதியமைச்சராக நியமிக்கப்பட இருப்பவரின் வயது 32!

கடந்த ஏப்ரல் மாதம் பின்லாந்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சோஷலிச ஜனநாயகக் கட்சி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிபெற்றது. ஆனால், ஆட்சி அமைக்கும் அளவுக்கு அந்தக் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. ஆன்டி ரின் பிரதமர் ஆனார்.

கடந்த நவம்பர் மாதம், தபால் துறை ஊழியர்களின் ஊதியத்தை ஆன்டி ரின் அரசு அதிரடியாகக் குறைத்ததால், நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. தபால் துறை ஊழியர்களுக்கு ஆதரவாக விமானப் போக்குவரத்து ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால், நாடே ஸ்தம்பித்தது. அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டது. இந்தப் பிரச்னையை ஆன்டி ரின் அரசு சரியாகக் கையாளவில்லை எனக் குற்றம்சாட்டி, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை கூட்டணிக் கட்சிகள் விலக்கிக் கொண்டன. ஆட்சியைக் காப்பாற்ற, பிரதமர் ஆன்டி ரின் பதவி விலக நேரிட்டது.

பிறகு சோஷலிச ஜனநாயகக் கட்சி, சான்னா மரினைப் பிரதமராக ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தது. இவருக்கு நான்கு கூட்டணிக் கட்சிகளும் முழு ஆதரவு தெரிவித்தன. அந்த நான்கு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பெண்கள். அதில் மூவர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். மரினின் அமைச்சரவையில் இடம்பெறப்போகும் அமைச்சர்களில் 12 பேர் பெண்கள்; 7 பேர் மட்டுமே ஆண்கள். அவருடைய புதிய நிதியமைச்சர் காத்ரீ குல்முனியின் வயதோ 32தான்.

எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் மரின். இவரின் தந்தை குடும்பத்தைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டதால், இவரை வளர்த்து ஆளாக்கியது இவரின் தாயும், அவரின் பெண் நண்பரும்தான். மரின் தன்னுடைய செலவுகளைச் சமாளிக்க பள்ளிப்பருவத்தில் பேக்கரியிலும், பிறகு வார இதழ்கள் விநியோகிப்பவராகவும் பணிபுரிந்தார். தவிர, அவரது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரியும்கூட.

சான்னா மரின்
சான்னா மரின்

இடதுசாரி சிந்தனையாளரான மரின், தன் 25-வது வயதில் சோஷலிச ஜனநாயகக் கட்சியில் இணைந்தார். குறுகிய காலத்திலேயே மக்கள் செல்வாக்கைப் பெற்று, தன் 27-வது வயதில் டாம்பியர் மாநகர கவுன்சில் தலைவர் ஆனார். கட்சியின் துணைத்தலைவராகவும் உயர்ந்தார். 2015-ம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார். தன் 30-வது வயதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆனார்.

பின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமர் மரின். முந்தைய பெண் பிரதமர்கள் மிகவும் குறுகிய காலம்தான் ஆட்சிபுரிந்தனர். 2003-ம் ஆண்டில் அன்னேலி ஜாட்டின்மாகி இரு மாதங்களும், 2010-11ல் மேரி க்வினேமி ஒரு வருடமும் பிரதமராகப் பதவிவகித்தனர்.

உலகின் பல இளம் தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்துக்கு வந்துள்ளார் மரின். இதற்கு முன்பு நியூசிலாந்து பிரதமர் ஜெசிடோ அடோன், தன் 39-வது வயதில் பிரதமர் ஆனார். ஒலெக்ஸி ஹான்சரூக் உக்ரைன் பிரதமர் ஆனபோது அவருக்கு வயது 35.

பின்லாந்தில் பெண்கள் ராஜ்ஜியம்!

பாலின சமத்துவத்தில் பின்லாந்து பல சாதனைகள் புரிந்துள்ளது. ஐரோப்பிய நாடு களிலேயே, பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் தேசம் இது. உலகிலேயே முதல் முறையாக ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பின்லாந்தில்தான். 1907-ம் ஆண்டில், முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

‘‘தேசத்தின் எதிர்காலம், இன்று இளம்பெண் களின் கையில் ஒப்படைக்கப் பட்டுள்ளது. என் வயதோ, பாலினமோ என் கண்ணில் படவில்லை. நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் எண்ணம் மட்டுமே எனக்கு உள்ளது’’ என்கிறார் மரின்.

அரசிலும் அரசியலிலும் பெண்கள் கோலோச்சுவதால், இளம்பெண்களின் ராஜ்ஜியமாகியுள்ளது பின்லாந்து!