Published:Updated:

`ஜூன் 22 டார்கெட்; முன்னரே ஜீரோவைத் தொட்ட எண்ணிக்கை!’ - கொரோனா தடுப்பில் அசத்திய நியூசிலாந்து

பிரதமர் ஜெசிந்தா
பிரதமர் ஜெசிந்தா ( AP )

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் குணமடைந்துவிட்டதால் கொரோனா இல்லாத நாடாக உருவாகியுள்ளது நியூசிலாந்து.

கொரோனாவால் மிகவும் வேகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. அங்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதும் மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு, நான்கு கட்டங்களாக ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. ஐந்து வாரங்கள் முடிந்த பிறகு உணவுக் கடைகள் திறக்கப்பட்டு பார்சல் வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பிறகு, அதே கடுமையான கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசியம் இல்லாத சில கடைகளும் திறக்கப்பட்டன.

நியூசிலாந்து
நியூசிலாந்து
AP

ஆரம்பம் முதல் தற்போது வரை நியூசிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,504 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது. நியூசிலாந்தில் கடந்த 2 வாரங்களாகப் புதிதாக எந்தப் பாசிட்டிவ் கேஸ்களும் இல்லை. அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த கடைசி நோயாளியும் இரு நாள்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். இதனால் கொரோனா இல்லாத நாடாக உருவாகியுள்ளது நியூசிலாந்து. உலகிலேயே மிகவும் இளவயது பிரதமராக அறியப்படும் நியூசிலாந்து பெண் பிரதமர் ஜெசிந்தாவின் செயல் மற்றும் நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

`கடைசி நோயாளியும் குணமடைந்தார்; கொரோனாவை விரட்டிய நியூஸிலாந்து!' - மகிழ்ச்சியில் பிரதமர் ஜெசிந்தா

நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதிலிருந்து அங்கு ஊரடங்கில் மெதுவாகத் தளர்வு அறிவிக்கப்பட்டு வந்தது. வரும் ஜூன் 22-ம் தேதி முதல் முழுமையாக ஊரடங்கைத் தளர்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டிருந்த நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியத்தை அடைந்ததும், குறித்த தேதிக்கு பத்து நாள்களுக்கு முன்னதாகவே முழு ஊரடங்கு தளர்வை அறிவித்துள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் எப்போதும் போல வெளியில் வரலாம், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை, மாஸ்க் அணிய வேண்டாம், பொது இடங்களில் கூட்டம் கூடலாம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவிலேயே அந்நாட்டில் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் திறக்கப்பட்டு முன்பு இருந்ததைப் போலவே நாடு முழு இயல்பு நிலைக்குத் திரும்பும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்நாட்டு எல்லை தொடர்ந்து மூடியிருக்கும். பிற நாடுகளிலிருந்து அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

‘ இது முழுமையான வெற்றி இல்லை... ஆனால், நாம் ஒரு மைல்கல்லை அடைந்துள்ளோம்’ என உற்சாகமாக நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளார் பிரதமர் ஜெசிந்தா. நாட்டில் வைரஸ் பாதிப்பு இல்லையென்றாலும் மக்கள் தங்கள் சுய பாதுகாப்பைக் காத்துக்கொள்ள வேண்டும் எனவும் முன்பைவிட அதிக கவனமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது இடங்களில் தனிமனித இடைவெளி, மாஸ்க் போன்றவை தேவையில்லை. ஆனால், இவற்றைத் தொடர்ந்து பின்பற்றினால் சிறந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசின் சிறந்த மற்றும் திறமையான நடவடிக்கை, நாட்டு மக்களின் முழு ஒத்துழைப்பு ஆகிய அனைத்தும் இணைந்து கொரோனாவை அடித்து விரட்டியுள்ளது நியூசிலாந்து.

`பிரதமராக இருந்தாலும் அதே ரூல்தான்!' -ஜெசிந்தாவுக்கு அனுமதி மறுத்த நியூஸி., உணவகம்; சுவாரஸ்ய சம்பவம்
அடுத்த கட்டுரைக்கு