Published:Updated:

`கொரோனா முடிந்தாலும் உலகில் மாற்றம் இருக்கும்!’ -கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ( Sean Kilpatrick )

`கொரோனா முடிந்த பிறகு உலகில் ஏற்படும் மாற்றத்துடன் நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்' என கனட பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் மொத்த மனிதகுலமும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. அது ஏழையாக இருந்தாலும் தொழிலதிபராக இருந்தாலும் அனைவருக்கும் கொரோனா ஒரு பிரச்னையைக் கொடுத்துள்ளது. கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸை எதிர்த்து கடந்த 3 மாதங்களாக உலகமே கடுமையான போர் நடத்தி வருகிறது. இந்த நிலையில், அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதால் சில கட்டுப்பாடுகளுடன் அனைவரும் ஊரடங்கில் தளர்வு அறிவித்து வருகின்றனர்.

கனடா
கனடா
Ryan Remiorz

அந்த வகையில் கனடாவிலும் வரும் 19-ம் தேதி முதல் சில்லறைக் கடைகள், வாகன உற்பத்தி, கட்டுமானத் தளங்கள் ஆகியவை செயல்படலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கனடாவில் தற்போதுவரை 73,401 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 5,472 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்நாட்டு பொது சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி கடந்த புதன்கிழமை முதல் தற்போது வரை 2.5% பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நீங்கள்தான் இதற்கு தகுதியானவர்கள்!’ - அத்தியாவசிய பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்திய கனடா பிரதமர்

இதற்கிடையில், ஊரடங்கால் சிரமம் அனுபவித்து வரும் தன் நாட்டு மக்களுக்குச் சில பொருளாதார அறிவிப்புகளை வெளியிட்டார் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

அப்போது பேசிய அவர், ``கனடா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொற்று முற்றிலும் புவியிலிருந்து மறைந்த பிறகும் இதற்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் உலகில் பல விஷயங்கள் மாறும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கோவிட் -19 என்பது நம் சமூகத்தில் மாற்றங்களை உண்டாக்கும் விஷயமாக உள்ளது. இனி கனடியர்கள் அந்த மாற்றங்களை தங்கள் இயல்புகளாக எடுத்துக்கொண்டு அதனுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

கனடா
கனடா
Nathan Denette

கொரோனா பரவல் அல்லது அதனால் ஏற்படும் பாதிப்பு இன்னும் எதுவரை செல்லும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. எனவே, நாம் அதை எதிர்த்துப் போராட எப்போதும் தயாராக இருக்க வேண்டும். தற்போது நம் நாட்டில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது, பலரை வேலைக்குச் செல்ல அனுமதிக்கும்போது வைரஸ் மேலும் விரிவடையும் அபாயம் உள்ளது. அதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

முதல்கட்டமாக கனடாவில் சிறிய அளவிலான தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும்காலத்தில் வைரஸின் நிலையைப் பொறுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம்கட்ட தளர்வுகள் அறிவிக்கப்படும். அதேபோல் ஆகஸ்ட் மாத இறுதியில் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். இதனுடன் பொருளாதாரம் தொடர்பான அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

`கிட்ஸ்களின் வீட்டுப்பாடத்துக்கு உதவி செய்ய விரும்புகிறேன்!’ - கனடா பிரதமரின் ஆசிரியர் என்ட்ரி
அடுத்த கட்டுரைக்கு