Published:Updated:

அதானியை கிரெட்டா எதிர்ப்பது ஏன் தெரியுமா?

காட்டுத்தீயால் ஆஸ்திரேலியா எரிந்து வரும் நிலையிலும் அதானியின் இந்தத் திட்டம் செயல்பட்டுக்கொண்டிருப்பது வெட்கக்கேடான செயல். இந்நிறுவனங்களின் உண்மை முகத்தை இது வெளிப்படுத்துகிறது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியல் நிறுவனமான சீமென்ஸ் (Siemens), அதானி குழுமத்துடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவில் கார்மைக்கேல் (Carmichael) சுரங்கத் திட்டத்தில் கையெழுத்திட்டிருந்தது. சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இத்திட்டத்துக்கு எதிராக ஜனவரி 13 அன்று ஜெர்மனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரெட்டா தன்பெர்க்கும் இத்திட்டத்தில் அதானிக்கு உதவ வேண்டாம் என ஜெர்மனி நிறுவனத்தை வேண்டியிருந்தார். ஆனால், இவற்றையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் அதானியுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்துக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளது சீமென்ஸ்.

நிலக்கரிச் சுரங்கம்
நிலக்கரிச் சுரங்கம்

இந்தியாவில் இயங்கிவரும் அதானி குழுமம் பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு வருகிறது. கனிம ஆற்றல், ராணுவத் தளவாடங்கள், வேளாண் வணிகம், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், பாதுகாப்பு மற்றும் விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு உட்பட இந்தியப் பொருளாதாரத்தின் பெரும் பகுதியைத் தன்னுள் வைத்திருக்கிறது. இந்நிறுவனம் இந்தியா மட்டுமன்றி கடல் கடந்து அயல்நாடுகளிலும் வர்த்தகத் தொடர்பில் ஈடுபட்டு வருகிறது.

அதானி குழுமம் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் ஓர் ஒப்புதல் திட்டத்தில் கையெழுத்திட்டது. அதன்படி, கார்மைக்கேல் திட்டத்தை செயல்படுத்த விரும்பியது அந்நிறுவனம். ஆனால், ஆஸ்திரேலிய நாட்டின் சுற்றுச்சூழல் சட்டத்தை முறையாகக் கடைப்பிடிக்காததால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தன் அசுர பலத்தை வெளிக்கொண்டு, பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் துடித்தது அதானி நிறுவனம்.

6 மில்லியன் ஹெக்டேர் காட்டை எரித்த ஆஸ்திரேலிய காட்டுத் தீ! 

இந்நிறுவனம் வெளியிட்ட திட்ட முன்வரைவுபடி, கார்மைக்கேல் நதி ஓடிவரும் குயின்ஸ்லாந்து மாகாணத்திலுள்ள கலிலீ (Galilee) ஆற்றுப்படுகையில் 'கார்மைக்கேல்' என்ற பெயரிலேயே சுரங்கம் தோண்டப்படும். 6 திறந்தவெளி மற்றும் 5 நிலத்தடி சுரங்கங்கள் தோண்டப்பட்டு, அங்கிருந்து எடுத்துவரும் நிலக்கரியை ஏற்றுமதி செய்ய ஏதுவாக ரயில்பாதையும் அமைக்கப்படும். அந்த ரயில் பாதையின் மற்றொரு முனை 30 ஆண்டுகளாக அதானி நிறுவனம் இயக்கிவரும், அபாட் துறைமுகத்துடன் (Abbot port) இணைக்கப்படும். தொடக்கத்தில் இந்த ரயில் பாதையைக் கட்டுவதற்கு போஸ்கோ (POSCO) என்ற தென் கொரிய கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்கான‌ நிதித் தேவையை வட ஆஸ்திரேலிய உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குயின்ஸ்லாந்து அரசாங்கத்தால் சிக்கல் ஏற்பட, மேற்கூறிய இரு நிறுவனங்களும் ஜகா வாங்கிவிட்டது. பின்னர் ஆரிஸான் (Aurizon) நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தமும் தோல்வியடைய இறுதியாக 2020 ஜனவரி மாதம் சீமென்ஸுடன் கையெழுத்திட்டது அதானி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

21 அனல் மின் நிலையங்கள் இயங்கிவரும் இந்நாட்டில், 12 அனல் மின் நிலையங்களை மூடும்படி காலநிலை மாற்றம் குறித்த ஆய்வு நிறுவனம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

பலதரப்பட்ட ஆய்வாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும், அதானி ரயில்வே திட்டத்துக்குச் சமிக்ஞைகள் மற்றும் தகவல் தொடர்புகளை அளிக்க சீமென்ஸ் ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியாவில் கார்மைக்கேல் சுரங்கமே மிகப்பெரிய சுரங்கமாகத் திகழும். மேலும், உலகிலுள்ள மிகப்பெரிய சுரங்கங்களின் பட்டியலிலும் இது இடம்பிடிக்கும். இது இவ்வாறு இருக்க, சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம்?

காட்டுத் தீ புகை
காட்டுத் தீ புகை
AP

2,47,000 சதுர கிலோமீட்டருக்கு கலிலீ ஆற்றுப்படுகை படர்ந்து கிடக்கிறது. உலகிலுள்ள மிகப்பெரிய நிலக்கரி கையிருப்புப் பகுதிகளில் இதுவும் ஒன்று. இதிலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி இந்தியாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் எனத் தெரிகிறது. ஆனால், இது புவி வெப்பமயமாதலை பெருமளவில் அதிகரிக்கும். முக்கியமாக ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பவளத்திட்டையும் (The great Barrier Reef) சேதப்படுத்தும். குயின்ஸ்லாந்தின் கரையோரத்தில், சுமார் 2,300 கி.மீ வரை நீளும் இந்தத் திட்டு, ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சூழலியல் சொத்தாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 600 வகை பவளப் பாறைகளுக்கு இந்தத் திட்டு தாயகமாகத் திகழ்கிறது.

இந்தச் சுரங்கம் செயல்பட, ஓராண்டுக்குச் சுமார் 12 பில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். 297 பில்லியன் லிட்டர் நிலத்தடி நீரை அது அப்படியே ஏப்பம்விட்டு விடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இவற்றையெல்லாம் தவிர கார்பன் வெளியீட்டில் ஆஸ்திரேலியாவின் பங்கு அசுரத்தனமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நாட்டின் மின் உற்பத்தி அனல் மின் நிலையங்களை நம்பித்தான் இருக்கிறது. 21 அனல் மின் நிலையங்கள் இயங்கிவரும் இந்நாட்டில், 12 அனல் மின் நிலையங்களை மூடும்படி காலநிலை மாற்றம் குறித்த ஆய்வு நிறுவனம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. எனவே, மீண்டுமொரு நிலக்கரி சுரங்கம் என்பதை ஆஸ்திரேலிய மக்கள் வெறுக்கின்றனர். `வெளியே செல் அதானி', `ஸ்டாப் அதானி' என்ற பதாகைகளுடன் மக்கள் வீதியில் இறங்கிப் போராடியுள்ளனர்.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா

போலி சமாதானம் செய்யும் விதமாக, "ஆண்டு ஒன்றுக்கு 100 மில்லியன் டன் நிலக்கரியை ஏற்றுமதி செய்ய இந்தச் சுரங்கம் வழிவகுக்கும். ஒரு நாளில் மட்டும் 23,760 டன் நிலக்கரியை ரயில்வே திட்டம் மூலமாக நாம் இடம் பெயர்க்கலாம். சுமார் 60 ஆண்டுகளுக்கு இந்தச் சுரங்கம் பயன்பாட்டில் இருக்கும். இதன்மூலம் குறைந்தபட்சம் 10,000 பேர் புதிதாக வேலைக்கு அமர்த்தப்படுவர்" என்று அதானி குழுமம் அறிவித்துள்ளது.

சீமென்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இதுகுறித்து விசாரிக்க நடுநிலைக் குழு ஒன்று அமைக்கப்படும். திட்டத்தை நிறுத்தவும் செயல்படுத்தவும் அக்குழுவுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இறுதியில் எப்படியேனும் அதானியுடன் கையெழுத்திட்ட திட்டத்தை மதித்து சீமென்ஸ் செயல்படும்" என்று முதன்மை செயல் அதிகாரி ஜோ கெய்ஸர் (Joe kaeser) குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா காட்டுத்தீ
ஆஸ்திரேலியா காட்டுத்தீ
80 கோடி உயிரினங்களை அழித்த ஆஸ்திரேலியக் காட்டுத் தீ... உலகுக்கு உணர்த்துவது என்ன?

"காட்டுத் தீயால் ஆஸ்திரேலியா எரிந்து வரும் நிலையிலும் அதானியின் இந்தத் திட்டம் செயல்பட்டுக்கொண்டிருப்பது வெட்கக் கேடான செயல். இந்நிறுவனங்களின் உண்மை முகத்தை இது வெளிப்படுத்துகிறது" என்று ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றனர். 'எதிர்காலத்துக்கான வெள்ளி' என்ற அமைப்பின் பிரபல காலநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், சீமென்ஸ் நிறுவனத்தை அதானியுடன் ஒன்று சேர வேண்டாம் என ட்வீட் செய்திருந்தார். அனைவரின் எதிர்ப்பையும் மீறி இந்த நிறுவனங்கள் தற்போது காலநிலை மாற்றத்தை மேலும் தீவிரமாக்கும் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளனர். இதைத் தொடங்கியது அவர்கள்தான், ஆனால் அதன்மூலம் ஏற்படப்போகும் அழிவு என்னவோ எல்லோருக்கும்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு