Published:Updated:

2020 Rewind: வெளியேறிய இளவரசர்; கிம் ஜாங் உன் வதந்தி; அதிரடி புதின் - உலகை அதிரவைத்த சம்பவங்கள்!

அதிவேகமாகச் சுழன்றுகொண்டிருந்த இந்த உலகத்தை, ஸ்பீடு பிரேக்கர் போட்டு நிதானப்படுத்திவிட்டது கொரோனா... 2020-ல் நிகழ்ந்த முக்கியச் சம்பவங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம் வாங்க!

இப்போதுதான் 2020-ம் ஆண்டுக்குள் காலெடுத்து வைத்ததுபோல இருக்கிறது. ஆனால், அதற்குள்ளாக டிசம்பர் மாதத்துக்கு வந்துவிட்டோம். மின்னல் வேகத்தில் வருடம் கடந்ததற்கு முக்கியக் காரணமாக, கொரோனாவையும், அதன் காரணமாக உலகெங்கும் போடப்பட்ட ஊரடங்கையும் சொல்லலாம். ஆண்டின் பாதி நாள்களை வீட்டுக்குள்ளேயே செலவிட்டதால் மற்ற ஆண்டுகளைவிட இந்த ஆண்டு வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது எனலாம். ஆண்டு இறுதிக்கு வந்துவிட்டாலே அந்த ஆண்டில் நடந்த முக்கியச் சம்பவங்களை ரீவைண்ட் செய்து பார்ப்பது வழக்கமான ஒன்றுதான். அப்படியான கட்டுரைதான் இதுவும்.

2020 | கொரோனா
2020 | கொரோனா
2020-ல் உலக அரங்கில் நடைபெற்ற முக்கியச் சம்பவங்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

ஆஸ்திரேலியா காட்டுத்தீ!

ஆஸ்திரேலியாவில், டிசம்பர் 2019-ம் ஆண்டில் ஆரம்பித்த காட்டுத்தீ, புது வருடம் பிறந்த பிறகும் அணையவேயில்லை. 4.7 கோடி ஏக்கர் நிலப்பரப்பை அழித்திருந்தது இந்தக் காட்டுத்தீ. ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை இழந்து, வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தனர். ஆஸ்திரேலிய காட்டுத்தீயின்போது எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் நம்மைப் படபடக்கவைத்தன. கங்காரு உட்பட பல விலங்குகளும் இந்தக் காட்டுத்தீக்கு இறையாகின. ஆண்டின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலியர்களை சோகத்தில் ஆழ்த்தியது இந்தக் காட்டுத்தீ சம்பவம்!

ஆஸ்திரேலியக் காட்டுத்தீ
ஆஸ்திரேலியக் காட்டுத்தீ
கருகிய கங்காருகள், தீயணைக்க பறக்கும் ஹெலிகாப்டர்கள்; நடுங்கவைக்கும் ஆஸ்திரேலிய காட்டுத் தீ! #PhotoAlbum

வெளியேறிய பிரிட்டன் இளவரசர்!

ஜனவரி 8-ம் தேதி, பிரிட்டன் இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகன் மார்க்கலும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்பதைத் துறந்து, அரச குடும்பத்திலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இந்தச் செய்தி இங்கிலாந்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இனி நாங்கள் முற்போக்குடன் சில விஷயங்களை அணுகவிருக்கிறோம். அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்பதிலிருந்து விலகி, இனி நாங்கள் சுயமாக உழைத்து எங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொள்கிறோம். எங்கள் மகன் ஆர்ச்சிக்கான புதிய வெளியை உருவாக்கவிருக்கிறோம்.
ஹாரி-மேகன் தம்பதி
ஹாரி -  மேகன்
ஹாரி - மேகன்

வெள்ளை நிறத்தவர்கள் மட்டுமே இருந்துவந்த இங்கிலாந்து ராஜ வம்சத்தில், முதன்முறையாகக் கறுப்பினப் பெண்ணைக் காதலித்து மணந்து, வரலாற்றை மாற்றியமைத்தார் இளவரசர் ஹாரி. இறுதியில், மேகன்மீது நிகழ்த்தப்பட்ட இனவெறித் தாக்குதல்கள்தான் ஹாரி-மேகன் தம்பதியின் இந்த முடிவுக்குக் காரணம் என்றும் சொல்லப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவிட்-19!

குறிப்பிட்ட பகுதி என்றில்லாமல், இந்த உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து அராஜகம் செய்துகொண்டிருக்கும் கொடிய வைரஸ் கோவிட்-19. 2019-ம் ஆண்டிலேயே சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவ ஆரம்பித்திருந்தது என்றாலும், மற்ற நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது 2020-ல்தான். அதிவேகமாகச் சுழன்றுகொண்டிருந்த இந்த உலகத்தை, ஸ்பீடு பிரேக்கர் போட்டு நிதானப்படுத்திவிட்டது இந்த கொரோனா.

2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது கொரோனா. இன்றுவரை இதை விரட்ட முடியாமல் இந்தியா மட்டுமல்ல, உலகமே தவித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. கொரோனா நோய்த் தொற்று காரணமாகப் போடப்பட்ட ஊரடங்கால், உலகம் முழுவதுமே பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டது. பலரும் வேலைகளை இழந்திருக்கிறார்கள். இயல்பு வாழ்க்கையையும் பாதித்தது இந்நோய்.

கொரோனா
கொரோனா
Pixabay

உலகின் பல்வேறு நாடுகளிலும் நாளுக்கு நாள் கொரோனா எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் வந்தது. ஆனால், கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் 86,700 பேருக்கு கொரோனா பாதிப்பிருப்பதாக இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சொல்லப்பட்டது. ஆனால், அந்த எண்ணிக்கையில் தற்போது வரை பெரிய மாற்றங்கள் இல்லாமல் இருப்பதுதான் ஆச்சர்யம். `கணக்கை ஒழுங்காகச் சொல்லாமல் சீனா மழுப்புகிறதா... இல்லை கொரோனாவை விரட்டும் வழியை கண்டுபிடித்துவிட்டார்களா?' என்பது மர்மமாகவே இருக்கிறது.

டெல்லி கலவரம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென இஸ்லாமியர்கள் பலரும் 2019, டிசம்பர் மாதம் முதலே போராட்டம் நடத்திவந்தனர். இந்தப் போராட்டம், 100 நாள்களைக் கடந்து டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுவந்தது. இந்தப் போராட்டத்தில் பிப்ரவரி 23-ம் தேதியன்று கலவரம் வெடித்தது. இந்துத்துவவாதிகள் போராட்டக் களத்துக்குள் புகுந்து கற்களை வீசியதாகவும், அதற்கு இஸ்லாமியர்கள் பதில் தாக்கல் செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்தக் கலவரத்தில் சுமார் 53 பேர் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது. உயிரிழந்தவர்களில் முக்கால்வாசிப் பேர் இஸ்லாமியர்கள் என்கிற தகவல்களும் சொல்லப்பட்டன. மசூதிகள், இஸ்லாமியர்களின் கடைகள், வீடுகள் ஆகியவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டதால், இஸ்லாமியர்கள் பலரும் இருக்க இடமின்றி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்
டெல்லி... மீண்டும் ஒரு குருதியாட்டம்
இந்தியத் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற துயர் மிகுந்த இந்தக் கலவரம் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்!

அமெரிக்காவில் மே மாதம், 25-ம் தேதி கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலீஸாரின் பிடியிலிருந்தபோது கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அமெரிக்கா முழுவதிலும் இனவாதத்துக்கு எதிரான குரல்கள் வலுவாக ஒலிக்கத் தொடங்கின. போராட்டங்கள் வெடித்தன. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு அமலிலிருந்ததையும் தாண்டி போராட்டங்கள் நடைபெற்றன. #BlackLivesMatter என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் உலக டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட்
ஜார்ஜ் ஃப்ளாய்ட்
AP

கிம் ஜாங் உன் வதந்தி!

`வடகொரியாவின் தந்தை’ எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்ததினக் கொண்டாட்டத்தில் எப்போதும் தவறாமல் பங்குகொள்ளும் அதிபர் கிம் ஜாங் உன் இந்த முறை கலந்துகொள்ளவில்லை. ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என்பதால் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்ற வதந்திகள் பரவின. இந்தநிலையில் கிம் ஜாங் உன் பொது நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டதாகப் புகைப்படங்களை வெளியிட்டது வட கொரிய அரசு.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்
வடகொரியா: கோமாவில் அதிபர் கிம் ஜாங் உன்... ஆட்சிப் பொறுப்பில் இருப்பது யார்?

`கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக வெளியான புகைப்படங்கள் அனைத்தும் போலியானவை' என்று சொல்லி சர்ச்சையைக் கிளப்பியது தென் கொரியா. இதையடுத்து, தென்கொரிய முன்னாள் அதிபர் கிம் டே ஜங்கின் உதவியாளர் சாங் சங் மின் ``வடகொரிய அதிபர் கோமாவில் இருக்கிறார்'' என்று சொல்லிப் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், ``ஆட்சிப் பொறுப்புகள் அனைத்தும் கிம் ஜாங் உன்னின் தங்கை கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது'' என்றும் தெரிவித்தார் அவர்.

சீனா-இந்தியா எல்லைப் பதற்றம்!

கடந்த மே மாதத் தொடக்கத்தில் லடாக்கிலுள்ள இந்தியப் பகுதிகளான பாங்காங் ஏரியை ஒட்டிய பகுதியில் ஒரு சாலைப் பணியையும், கல்வான் பகுதியிலுள்ள தர்புக்-சையோக்-தௌலத் பெக் ஓல்டி Darbuk-Shayok-Daulat Beg Oldie) சாலையை இணைக்கும் ஒரு சாலைப் பணியையும் தொடங்கியிருந்தது இந்திய அரசு. இந்தச் சாலைப் பணியை எதிர்த்த சீனா, எல்லையில் ராணுவப் படைகளை மே 5, 6-ம் தேதிகளில் குவித்தது. இதையடுத்து இந்திய-சீன எல்லையில் பதற்றம் அதிகரித்தது

இந்திய - சீன எல்லை
இந்திய - சீன எல்லை

ஜூன் 15-ம் தேதி, சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, ``ஜூன் மாதம் 15 / 16 தேதி இரவில் சீன ராணுவம் எல்லைப் பகுதியைவிட்டு வெளியேறும்போது இந்திய வீரர்களோடு கடுமையான மோதலில் ஈடுபட்டது. இதற்கு பதில் தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இந்தத் தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர். ``பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலை காரணமாகப் படுகாயமடைந்திருந்த 17 இந்திய வீரர்களும் உயிரிழந்துவிட்டனர்'' என்று செய்தி வெளியிட்டது இந்திய ராணுவம்.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா
India-China Faceoff: `மே மாதத்திலிருந்தே மிக மோசமான நிலைமைதான்..!' - எல்லையில் என்ன நடக்கிறது?

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு எல்லைப் பகுதியில் போர்ச்சூழல் நிலவியதால், உலக நாடுகளின் கவனம் அனைத்தும் இந்தியா, சீனா பக்கம் திரும்பியது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் 267 சீனச் செயலிகளுக்கு அரசு தடை விதித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2036 வரை ரஷ்யாவின் அதிபர் புதின்?

ரஷ்யாவின் அரசியல் சாசனப்படி அதிபர் பதவியில் இருப்பவர், தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியாது. 2012-ம் ஆண்டு ரஷ்ய அதிபராகப் பதவியேற்ற விளாடிமிர் புதினின் பதவிக் காலம் 2024-ம் ஆண்டோடு முடிவடைகிறது. இந்தநிலையில் புதின் ரஷ்யாவில் செல்வாக்குமிக்க நபராக இருப்பதால், அவரை அதிபர் பதவியில் மேலும் தொடரவைப்பதற்கான சட்டத் திருத்தத்துக்கான தீர்மானம், ஜூலை மாதத்தில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இது குறித்து மக்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்ள ஒருவாரகால வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 77.9% மக்கள், புதின் 2036 வரை அதிபராக இருக்கலாம் என வாக்களித்திருந்தனர்.

புதின்
புதின்
Alexei Nikolsky

எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்த வாக்கெடுப்பு பொய்யானது என்று கூறி போராட்டத்தில் இறங்கினர். இந்த எதிர்ப்புகளை மீறி 2036-ம் ஆண்டு வரை தானே ரஷ்ய அதிபராக இருக்கும் உத்தரவில் கையெழுத்திட்டு அதிரடி காட்டினார் புதின். இதைத் தொடர்ந்து புதினின் உடல்நிலை மோசமாக இருப்பதால், 2021-ம் ஆண்டே அவர் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகவும் சில செய்திகள் வந்தன.

பெய்ரூட் விபத்து!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடி விபத்து உலக நாடுகள் முழுவதையும் உலுக்கியது. பெய்ரூட் துறைமுகத்திலுள்ள கிடங்கு ஒன்றில் சேமித்துவைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் ஆகஸ்ட் 4-ம் தேதி வெடித்துச் சிதறியது. இதில், சுமார் 200 பேர் உயிரிழந்த நிலையில், 6,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், அந்தப் பகுதியிலிருந்த கட்டடங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. சுமார் 30,000 பேர் இந்த விபத்தால் தங்கள் வீடுகளை இழந்தனர்.

Damage seen after a massive explosion in Beirut, Lebanon
Damage seen after a massive explosion in Beirut, Lebanon
AP Photo / Hassan Ammar
இந்த விபத்து நிகழ்ந்தபோது எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் பார்ப்போரைப் பதறவைத்தன.
Lebanon: வான் நோக்கிப் பரவிய கரும்புகை... பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும்  தீ விபத்து!

இந்தச் சம்பவம் நிகழ்ந்த ஒரு மாதம் கழித்து, அதாவது செப்டம்பர் 10-ம் தேதியன்று மீண்டும் பெய்ரூட் துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தின்போது சேதங்கள் குறைவானதாக இருந்தாலும், தொடர் தீ விபத்துச் சம்பவங்கள் பெய்ரூட் மக்களை அச்சத்தில் ஆழ்த்தின.

அமெரிக்கக் காட்டுத் தீ!

அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளான கலிஃபோர்னியா, வாஷிங்டன் ஆகிய இடங்களில், கடந்த ஆகஸ்ட் மாத மத்தியிலிருந்தே பரவியது காட்டுத்தீ. இதில், 82 லட்சம் ஏக்கர் நிலங்கள் கருகிப்போயின. சுமார் 10,000 கட்டடங்கள் பாதிப்புக்குள்ளாகின. குறைந்தது 37 பேராவது இந்தக் காட்டுத்தீயின் பொருட்டு உயிரிழந்திருப்பார்கள் என்று அமெரிக்கா கணித்தது. பருவநிலை மேலாண்மையைச் சரிவரக் கண்டுகொள்ளாததும், காடுகள் மேலாண்மையில் சுமாராக செயல்பட்டதும்தான் இந்தக் காட்டுத்தீக்குக் காரணம் என அரசைக் கடுமையாகச் சாடினார்கள் அமெரிக்கச் சுற்றுச்சூழல் வல்லுநர்கள்.

 காட்டுத்தீ
காட்டுத்தீ
BellaLack / Twitter
தாய்லாந்து: ஜெர்மனி ஹோட்டலில் மன்னர் உல்லாசம்; பாங்காக் வீதிகளில் மக்கள் போராட்டம் - என்ன நடக்கிறது?

பிரான்ஸ் கலகம்!

2015-ம் ஆண்டு பிரான்ஸ் பத்திரிகையான `சார்லி ஹெப்டோ'வில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரம் வெளியானது. இதையடுத்து அந்தப் பத்திரிகை நிறுவனத்தில், அல்கொய்தா தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. அதிலிருந்து ஐந்து ஆண்டுகள் கழித்து, அதே கேலிச்சித்திரத்துக்காக இந்த ஆண்டில் மீண்டும் சில தாக்குதல்கள் நிகழ்ந்தன.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகில் அமைந்துள்ள பள்ளியொன்றில், வரலாற்றுப் பேராசிரியராகப் பணிபுரிந்த சாமுவேல் பேட்டி (Samuel Paty) என்பவர் சார்லி ஹெப்டோவில் வெளியான கேலிச்சித்திரங்களைக் குறிப்புகளாக வைத்துக்கொண்டு `கருத்துச் சுதந்திரம்’ குறித்துப் பாடம் நடத்தியிருக்கிறார். இரண்டு மூன்று நாள்களுக்குப் பிறகு... அக்டோபர் 16-ம் தேதியன்று பள்ளி வளாகம் அருகே அன்ஸோரோவ் (Anzorov) என்ற 18 வயது இளைஞனால் தலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார் ஆசிரியர் சாமுவேல்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பேசிய பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மெக்ரான், ``இஸ்லாமியர்கள் நம்மிடமிருந்து நம் எதிர்காலத்தைப் பறிக்க நினைக்கிறார்கள்'' என்று பேசினார். இதைத் தொடர்ந்து இஸ்லாமிய நாடுகளில், பிரான்ஸ் தயாரிப்புகள் புறக்கணிக்கப்பட்டன. பிரான்ஸ் பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டுமென பல்வேறு இஸ்லாமிய நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்தன.

பிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்
பிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்
Daniel Cole
`2015 கலகம்... பிரான்ஸ் முதல் சவுதி அரேபியா வரை’ - தொடரும் பதற்றம்!

இதைத் தொடர்ந்து அக்டோபர் 29-ம் தேதியன்று, பிரான்ஸின் நீஸ் (Nice) நகரிலுள்ள தேவாலயத்தில் மீண்டுமொரு தாக்குதல் நடந்தது. கையில் கத்தியுடன் தேவாலயத்துக்குள் நுழைந்த ஒருவன் அங்கிருந்த மூன்று பேரைக் கொடூரமாகக் குத்திக் கொலை செய்தான். பிரான்ஸில் நடைபெற்ற இந்தச் சம்பவங்கள் உலக மக்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

அமெரிக்க அதிபர் தேர்தல்!

உலக நாடுகள் அனைத்திலுமே தலைப்புச் செய்தியாக இருந்தது அமெரிக்க அதிபர் தேர்தல்தான். குடியரசுக் கட்சி சார்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பாக முன்னாள் அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிட்டனர். நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. கருத்துக் கணிப்பு முடிவுகள் பலவற்றிலும் சொன்னதைப் போலவே ஜோ பைடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்டவர் என்பதால், இந்தியாவில் அவர் குறித்த செய்திகள் அந்தச் சமயத்தில் நாள்தோறும் வெளியாகின.

டொனால்டு ட்ரம்ப் - ஜோ பைடன்
டொனால்டு ட்ரம்ப் - ஜோ பைடன்
AP
அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்படுவது ஏன்? - சுவாரஸ்யப் பின்னணி!

அதிபர் தேர்தலைத் தாண்டி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த ஆண்டு முழுக்கவே லைம்லைட்டில் இருந்தார். பிப்ரவரி மாதத்தில் இந்தியாவுக்கு வந்து `நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதையடுத்து கொரோனாவையும் சீனாவையும் தொடர்ந்து சீண்டிவந்தார் ட்ரம்ப். `மாஸ்க் அணிய மாட்டேன்' என்று பிடிவாதம் பிடித்தவருக்கு கொரோனாநோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவிலிருந்து குணமடைவதற்கு முன்பாகவே மருத்துவமனையிலிருந்து வெளியேறி, காரில் ஊரைச் சுற்றி பீதியைக் கிளப்பினார் ட்ரம்ப். இது போன்ற ட்ரம்ப்பின் அடாவடிகள் அனைத்தும் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்றன.

காரில் வலம் வந்த ட்ரம்ப்
காரில் வலம் வந்த ட்ரம்ப்
ட்ரம்ப்: அப்போ `மாஸ்க் போட மாட்டேன்'; இப்போ `காரில் சுற்றுவேன்' - கொரோனா சிகிச்சையிலும் அடாவடி!
இந்த ஆண்டில் நடைபெற்ற முக்கியச் சம்பவங்களுள் ஏதேனும் விடுபட்டிருந்தால் கமென்ட்டில் பகிருங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு