Published:Updated:

`கடினமான சூழல்தான்; ஆனால், சிறந்த உரையாடல்!’ - மோடி, இம்ரான் கானிடம் பேசிய ட்ரம்ப்

சத்யா கோபாலன்

காஷ்மீர் பிரச்னையில் நிலவும் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

Trump
Trump

அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை கடந்த மாதம் நேரில் சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், `காஷ்மீர் விவகாரத்தில் நீங்கள் மத்தியஸ்தம் செய்ய வேண்டும்' என ட்ரம்ப்பை கேட்டுக்கொண்டுள்ளார். இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், “ என்னால் உதவ முடிந்தால், நிச்சயமாக இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராகச் செயல்படுவேன். இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினேன். அப்போது நாங்கள் இதே காஷ்மீர் விவகாரம் தொடர்பாகப் பேசினோம்.

Modi
Modi

அப்போது மோடி என்னிடம், `காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தராக இருக்க முடியுமா.. இது நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமலேயே உள்ளது” என்றார். ட்ரம்பின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையானது. ஆனால் ட்ரம்பின் இந்தக் கருத்தை இந்தியா முற்றிலும் மறுத்தது. `பிரதமர் மோடி இப்படி ஒரு கோரிக்கையை வைக்கவில்லை. காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தத்தை இந்தியா ஒரு போதும் ஏற்காது' எனவும் தெரிவித்தது.

இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டப்பிரிவு 370, 35A ஆகியவற்றை ரத்து செய்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மசோதா தாக்கல் செய்தது மத்திய அரசு. இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

imran khan
imran khan

இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார். இந்த விவகாரத்தை ஐ.நா சபை வரை கொண்டுசென்றனர். அங்கு சீனா மற்றும் பாகிஸ்தானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தன.

ரகசியமாக  காஷ்மீர் பற்றி விவாதிக்க வேண்டும் - ஐ.நா-வில் முறையிட்ட சீனா!

இந்நிலையில் ட்ரம்ப், மீண்டும் காஷ்மீர் விவகாரம் பற்றி இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், `இந்தியப் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என என்னுடைய இரண்டு நல்ல நண்பர்களிடம் பேசினேன். வர்த்தகம், கூட்டாண்மை மற்றும் மிக முக்கியமாக காஷ்மீரில் பதற்றங்களைக் குறைப்பதற்கு இந்தியா, பாகிஸ்தான் இணைந்து பணியாற்றுவது போன்றவை குறித்துப் பேசினோம். இது கடினமான சூழ்நிலைதான் இருந்தாலும் நல்ல உரையாடல்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இந்தியப் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபரும் சுமார் 30 நிமிடங்கள் பேசியுள்ளனர். `காஷ்மீர் விவகாரத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைத்து அமைதியை நிலைநாட்ட வேண்டும்' என மோடியிடம் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஒரே வாரத்தில் பாகிஸ்தான் பிரதமருடன் இரண்டாவது முறையாக ட்ரம்ப் போனில் பேசியுள்ளார். ட்ரம்ப், இம்ரான் கானிடம் பேசும் போது , `காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடனான பதற்றத்தைக் குறைக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார் என்று வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.