Published:Updated:

`மன அழுத்தம்; அறுவை சிகிச்சை; ராணுவ விதிமீறல்!' -திருநங்கையாக மாறிய ராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்

 பைன் ஹூய்- சூ
பைன் ஹூய்- சூ

ராணுவத்தில் பணியாற்றி வரும் ராணுவ வீரர், திருநங்கையாக மாறியதால் அவருக்கு மீண்டும் அதே ராணுவத்தில் பணியில் தொடர அனுமதி மறுத்துள்ளது தென் கொரிய ராணுவம்.

தென் கொரியாவைச் சேர்ந்த 22 வயதான பைன் ஹுய்-சூ (Byun Hui-soo) என்பவர் அந்நாட்டு ராணுவப் படையில் எல்லைப் பாதுகாப்பு பயிற்சி வீரராகப் பணியாற்றி வந்துள்ளார். வட மற்றும் தென் அமெரிக்க எல்லைப் பகுதியான கியோங்கி மாகாணத்தில் வேலை செய்து வந்த பைன் ஹூய்- சூ தொடர்ந்து மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் ராணுவ மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றபோது, அவர்கள் அதிர்ச்சிகரமான ஒரு விஷயத்தைக் கூறியுள்ளனர்.

தென் கொரிய ராணுவம்
தென் கொரிய ராணுவம்

பைன் ஹுய்-சூ, ஜெண்டர் டிஸ்போரியா (gender dysphoria) என்ற பாலின மன சமநிலையற்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் ஆணாகவும் மனம் பெண்ணாகவும் இருந்துள்ளது. இதனால் திருநங்கைக்கான அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளனர் மருத்துவர்கள். இதையடுத்து ராணுவத்திலிருந்து மருத்துவ விடுமுறை பெற்று, தாய்லாந்துக்குச் சென்று கடந்த வருடம் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார் பைன் ஹூய்-சூ.

அனைத்து சிகிச்சைகளும் முடிந்த பிறகு சமீபத்தில் பெண்ணாக மீண்டும் ராணுவத்தில் இணையச் சென்றுள்ளார். ஆனால் கொரிய ராணுவ விதிமுறைகளை மீறியதாகக் கூறி இவரின் வேலையைப் பறித்துவிட்டனர். தற்போது இந்த விவகாரம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையாகியுள்ளது. தென் கொரியாவில் பொதுவாகப் பாலியல் தொடர்பான விஷயங்களில் பழைமையான நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் ராணுவத்திலிருந்து திருநங்கையான பைன் ஹூய்-சூவுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்  பைன் ஹூய்- சூ
ராணுவ வீரர் பைன் ஹூய்- சூ

தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து சுமார் 45 நிமிடங்கள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார் பைன் ஹூய்-சூ. தான் மீண்டும் ராணுவத்தில் இணைவேன் என்று கண்ணீர் மல்கப் பேசியுள்ளார். ``கடந்த வருடம் முதல் நான் இந்த நோயால் மிகவும் அவதியடைந்தேன். மன நிம்மதி இல்லாமல் தவித்தேன். ராணுவத்தில் எனது பயிற்சிக்காலம் முடிந்த பிறகு அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக வந்து மீண்டும் ராணுவத்தில் இணையலாம் என நினைத்திருந்தேன். ஆனால் மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் எனக் கூறினார்கள்.

அவர்களின் ஆலோசனைப்படி நானும் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகுதான் நான் நிம்மதியாக உணர்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் ராணுவத்திலிருந்து என்னை வெளியேற்றிவிட்டனர். நான் மீண்டும் ராணுவத்தில் இணையும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பேன். தென் கொரிய ராணுவத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளேன்.

 பைன் ஹூய்- சூ
பைன் ஹூய்- சூ

அவர்களை எதிர்த்து சண்டையிடப்போகிறேன். எனக்கான நியாயம் கிடைக்கும் வரை எவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த நீதிமன்றத்துக்கும் செல்லத் தயாராக இருக்கிறேன். என் பாலின அடையாளத்தையும் தாண்டி, நான் ஒரு வீரமிக்கப் போர்வீரனாக இருந்து என் நாட்டைக் காக்கிறேன் என அனைவருக்கும் காட்ட வேண்டும் என்பதுதான் என் ஒரே ஆசை” என்று வேதனையுடன் பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு