Published:Updated:

அமெரிக்கா:`ஹெச் 1-பி விசா நடைமுறைகளில் தளர்வு!' - ட்ரம்பின் தேர்தல் நகர்வு?

ட்ரம்ப்
ட்ரம்ப்

``ஹெச்-1 பி விசாக்களில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது என்பது, தகுதியின் அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற பாதையை நோக்கிப் பயணிப்பதற்கான அடிப்படை."

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், பல நாடுகளிலும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. இதையடுத்து, அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து, அமெரிக்கா வந்து வேலை செய்வதற்காக வழங்கப்படும் ஹெச்-1 பி உள்ளிட்ட விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்துவதாக ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்தது. இதனால், ஐ.டி துறையைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் பலரும் கடுமையாக பாதிப்படைந்தனர். குறிப்பாக, இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள். ட்ரம்பின் இத்தகைய அறிவிப்புக்கு கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்களும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. இந்தநிலையில், தற்போது அதிபர் ட்ரம்ப், விசா நடைமுறையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளார்.

ஹெச் 1 பி விசா
ஹெச் 1 பி விசா

முன்னதாக அதிபர் ட்ரம்ப் விசா தடை தொடர்பாகப் பேசும்போது, ``2020-ம் ஆண்டில், நெருக்கடியான காலகட்டத்தில் மட்டும் 20 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க மக்கள், தங்களது வேலைகளை இழந்துள்ளனர். எனவே, இந்த விசாக்களை ரத்து செய்வதன் மூலமாக அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிக அளவில் ஏற்படும்" என்று தெரிவித்திருந்தார். வெள்ளை மாளிகை அதிகாரிகள் விசா தடை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஹெச்-1 பி விசாக்களில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது என்பது தகுதியின் அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற பாதையை நோக்கிப் பயணிப்பதற்கான அடிப்படை. இந்த ஆண்டுவரை இந்த விசாக்கள் லாட்டரிச் சீட்டுபோல ஒழுங்கற்ற முறையில் விநியோகிக்கப்பட்டுவந்தன. எனவே, வரும் நாள்களில் விசா வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்" என்று தெரிவித்திருந்தனர்.

அமெரிக்கா: `ட்ரம்ப் மற்றும் கிம்மின் 25 கடிதங்கள்!' - புதிய தகவல்களுடன் வெளியாகும் புத்தகம்

இந்தநிலையில் தற்போது விசா தளர்வுகள் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், `அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரிந்துவிட்டு சொந்த நாட்டுக்குத் திரும்பியவர்கள், மீண்டும் அதே நிறுவனத்தில் பணியாற்ற விரும்பும்பட்சத்தில் ஹெச்-1 பி விசா அனுமதி வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`பணியாற்றும் ஊழியர்களுடன் செல்லும் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஹெச்-4 விசாவும் வழங்கப்படும்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்புகள் எல்-1 விசா வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்புகளால் அமெரிக்க நிறுவனங்களில் ஏற்கெனவே வேலை செய்துவந்த பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒருபுறம் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுவதன் அடிப்படையில் இந்த முடிவை அதிபர் ட்ரம்ப் எடுத்திருப்பதாகவும், மறுபுறம் அதிபரின் தேர்தல் தொடர்பான வியூகம் என்றும் ட்ரம்பின் இந்தத் திடீர் அறிவிப்பு தொடர்பாக விவாதம் எழுந்திருக்கிறது.

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்

நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அதிபர் ட்ரம்பை எதிர்த்து ஜோ பிடென் போட்டியிடுகிறார். இது தொடர்பான பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அதிபர் ட்ரம்புக்கு கொரோனா நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சி, பிளாக் லிவ்ஸ் மேட்டர் போராட்டங்கள் ஆகிய பிரச்னைகளால் பலத்த பின்னடைவு இருப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இதனால், மக்களைக் கவர வேண்டும் என்கிற முயற்சியில் அதிபர் ட்ரம்ப் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாகக் கூறப்படுகிறது.

ஹெச்-1 பி விசாவால் இந்தியர்கள் அதிகம் பயன்பெற்றுவந்த நிலையில், அதன்மீதான தடை அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர்களிடம் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவது அதிக வரவேற்பைப் பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இந்திய மக்களின் ஆதரவைப் பெற, அதிபர் ட்ரம்ப் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அதிபர் ட்ரம்ப்: `தேர்தலைத் தள்ளி வைக்கும் ஆலோசனை!’ - வலுக்கும் எதிர்ப்புகள்
அடுத்த கட்டுரைக்கு