Published:Updated:

`உங்கள் எச்சரிக்கையை ஏற்க முடியாது!’ -மருத்துவ ஆலோசகருடன் நேரடியாக மோதும் ட்ரம்ப்

ஃபாஸி - ட்ரம்ப்
ஃபாஸி - ட்ரம்ப் ( AP )

அமெரிக்காவில் ஊரடங்கு தளர்வு அறிவிப்பது தொடர்பாக அதிபருக்கும் அந்நாட்டின் மருத்துவ ஆலோசகர் ஃபாஸிக்கும் இடையே வெளிப்படையான மோதல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 4.4 மில்லியன் மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு சுமார் 85,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றொருபுறம் கொரோனாவைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மில்லியன் கணக்கான மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதனால் நாட்டின் பொருளாதாரமும் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

நியூயார்க்
நியூயார்க்
AP

இவை அனைத்தையும் மிக விரைவில் சரி செய்து நவம்பர் மாதம் வரவுள்ள அதிபர் தேர்தலை நல்லபடியாக எதிர்கொள்ள வேண்டும் எனத் திட்டம் போடுகிறார் ட்ரம்ப். அதற்கான முதல் முயற்சியாக தற்போதிலிருந்தே ஊரடங்கில் தளர்வு அறிவிக்க முடிவெடுத்துள்ளார். ஆனால் மாகாண ஆளுநர்கள் ட்ரம்பின் முடிவுக்குத் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். `அதிபரின் உத்தரவைவிட மக்கள் உயிர்தான் முக்கியம். எனவே வைரஸ் கட்டுக்குள் வரும் வரை தளர்வு இல்லை' என நியூயார்க் ஆளுநர் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

`20 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்; இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்!’ -சீனாவை கடுமையாகச் சாடிய அமெரிக்கா

அங்கு பெரும்பாலான ஆளுநர்களின் நிலைப்பாடு அதிபருக்கு எதிராகவே உள்ளது. பொருளாதாரத்தைச் சீர்செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டும் ட்ரம்ப் செயல்படுவதாகக் குற்றம் சுமத்துகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் ஊரடங்கைத் தளர்த்தி பள்ளிகளைத் திறக்க வேண்டும் என ட்ரம்ப் மீ்ண்டும் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அதிபரின் கருத்துக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார், அதிபர் ட்ரம்பின் மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாஸி.

ஃபாஸி
ஃபாஸி
AP

இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. இதுதொடர்பாகச் சட்டம் இயற்றும் செனட் சபை உறுப்பினர்களிடம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சாட்சியம் அளித்துள்ளார் ஃபாஸி. அதில், “ ஊரடங்கு உத்தரவை மிக விரைவாக இப்போதே தளர்த்தினால் வரும்காலத்தில் அமெரிக்கா நிறைய உயிரிழப்புகளையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் நிலை வரலாம். பள்ளிக்கூடங்கள் திறக்க அதிபர் முடிவெடுத்துள்ளார். ஆனால் அனைத்துக் குழந்தைகளுக்கும் வைரஸுடன் போராடும் அளவுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும் எனக் கூறமுடியாது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையும்போது படிப்படியாகத்தான் ஊரடங்கில் தளர்வு விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

`அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டுக்கு ஆதரவு!’ - ஆஸ்திரேலியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த சீனா

ஆனால் அதிபர் ட்ரம்ப், மருத்துவர் ஃபாஸின் எச்சரிக்கையை ஏற்கமுடியாது என வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார். நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ டாக்டர் ஃபாஸி நாட்டின் அனைத்துச் சமன்பாட்டிலும் விளையாட விரும்புகிறார். அவருடைய பதிலைக் கண்டு நான் ஆச்சர்யமடைந்தேன். அது ஏற்றுக்கொள்ளக் கூடிய பதில் இல்லை என்று எனக்கு மட்டுமே தெரியும். குறிப்பாக பள்ளிகள் திறக்கும் விஷயத்தில்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

வயதான ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பள்ளிக்கு வருவதை சில வாரங்கள் ஒத்திவைக்கலாம் எனக் கூறியுள்ளது மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம். ஏனெனில் அதிக வயதுடையவர்களுக்குத்தான் வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் குழந்தைகள், மாணவர்களின் பாதிப்பு பற்றிய நம் நாட்டின் புள்ளிவிவரங்கள் உண்மையில் ஆச்சர்யமாக உள்ளது” எனப் பேசியுள்ளார்.

‘சீனாவுக்கு மட்டுமே ட்ரம்ப் தடை விதித்தார், ஆனால்...?’ - நியூயார்க் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆன பின்னணி

அமெரிக்காவைப் பொறுத்தவரை சில மாகாணங்களில் மட்டுமே ஆளும் குடியரசு கட்சியின் ஆளுநர்கள் அதிகாரத்தில் உள்ளனர். மற்ற பெரும்பாலான இடங்களில் ஜனநாயகக் கட்சியினர் ஆளுநர்களாக உள்ளனர். எனவே ட்ரம்பின் ஆலோசனைப்படி ஊரடங்கில் தளர்வு அறிவித்த குடியரசுக் கட்சி ஆளுநர்களை வெகுவாகப் பாராட்டியும் ஊரடங்கு அறிவிக்காத ஜனநாயகக் கட்சியினரைக் கடுமையாக விமர்சித்தும் பேசி வருகிறார் ட்ரம்ப். கொரோனா பரவலுக்கு மத்தியில் ஊரடங்கு தளர்வு தொடர்பான விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு