Published:Updated:

`உங்கள் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ -WHO -க்கான நிதியை நிறுத்தி அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

`தீர்வுகளில் கவனம் செலுத்தாமல் உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வரும் நிதியை, அதுவும் மருத்துவ அவசரகால கட்டத்தின் நடுவே நிறுத்துவது என்பது ஆபத்தில்தான் முடியும்’ என ட்ரம்பின் முடிவுக்கு அமெரிக்காவிலே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் 25,000 -க்கும் அதிகமான மக்கள் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனாவால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்துள்ளன. அமெரிக்காவில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 1 முதல் 2.4 லட்சத்தைத் தொடும் என அந்த நாட்டு அரசு கடந்த மாதமே கவலை தெரிவித்திருந்தது.

டொனால்டு  ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

இதனிடையே கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா தொடர்ச்சியாக சீனாவை குறை சொல்லி வந்தது. சீன வைரஸ் எனக் குறிப்பிடும் ட்ரம்ப், அத்தோடு நிறுத்தாமல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்தையும் கடுமையாகச் சாடி வந்தார். ``உலக சுகாதார அமைப்புக்கு நாங்கள் பெருமளவில் நிதி வழங்கிவருகிறோம். தற்போது அதை நிறுத்த ஆலோசனை நடத்தி வருகிறோம். உலக சுகாதார அமைப்பு, கொரோனா பற்றிய தகவல்களை முன்னரே அறிந்திருக்கும். அப்படி அறிந்தும் வைரஸ் பரவுவதன் விளைவுகளை அவர்கள் முறையாக எச்சரிக்கவில்லை. அது, சீனாவை மையமாகக்கொண்டு, அந்த நாட்டுக்காக இயங்கும் அமைப்பாக இருக்குமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

சில காரணங்களால், நாங்கள்தான் உலக சுகாதார அமைப்புக்கு அதிக அளவில் நிதி வழங்கிவருகிறோம். தற்போது, அதன் பெரும் பகுதியை நிறுத்த ஆலோசித்து வருகிறோம். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு இல்லை, எங்களின் ஆலோசனை. சீனாவில் முதல் வைரஸ் தொற்று உறுதியானதும், சீனாவுக்கான எங்கள் நாட்டு எல்லைகளை மூட நாங்கள் உலக சுகாதார அமைப்பினரிடம் ஆலோசனை கேட்டோம். ஆனால், அவர்கள் எல்லைகளை மூடத் தேவையில்லை எனத் தவறான ஆலோசனை மட்டுமே வழங்கினர். நல்லவேளை அவர்களின் கருத்தை நான் நிராகரித்துவிட்டேன். அவர்கள் ஏன் எங்களுக்கு இதுபோன்ற தவறான பரிந்துரையை வழங்கினார்கள்?” என்று கடுமையாகப் பேசியிருந்தார்.

WHO முதன்மை அதிகாரி டெட்ராஸ்
WHO முதன்மை அதிகாரி டெட்ராஸ்

இதைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டெட்ராஸ், ட்ரம்ப்பின் பேச்சுக்குப் பதிலளித்தார். ``தயவுசெய்து இந்த வைரஸ் விவகாரத்தை அரசியலாக்காதீர்கள். இது, தேசிய அளவில் உள்ள வேறுபாடுகளைக் காட்டுவதாக உள்ளது. இன்னும் பல பிணப்பைகள்தான் வேண்டும் என்றால் தாராளமாக அரசியல் செய்யுங்கள். அமெரிக்காவும் சீனாவும் ஒற்றுமையாக இந்த வைரஸுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட வேண்டும். நாங்கள் அனைத்து நாடுகளுடனும் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறோம்’' என்றார். மேலும், அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வரும் நிதியை நிறுத்தாது என நம்புவதாகவும் தெரிவித்தார்.

`தயவுசெய்து அரசியலாக்காதீர்கள்... பிணப்பைகள்தான் வேண்டுமா?!' - ட்ரம்ப் மிரட்டலுக்கு WHO பதில்

இந்த நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ட்ரம்ப், உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வரும் நிதியை நிறுத்த உள்ளதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ``கொரோனா வைரஸ் விஷயத்தை உலக சுகாதார நிறுவனம் சரியாகக் கையாளத் தவறிவிட்டது” என்றார். தொடர்ந்து அவர், ``கொரோனா வைரஸ் வெடிப்பு ஏற்பட்ட பிறகு அமெரிக்காவின் தாராள மனப்பான்மைக்குப் பலன் கிடைத்ததா என்பதில் சந்தேகம் இருக்கிறது. உண்மையில் உலக சுகாதார நிறுவனத் தகவல்களைப் பகிர்வதில் வெளிப்படத்தன்மையுடன் செயல்படவில்லை” என்றார்.

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

ட்ரம்ப் பேசுகையில், ஆண்டுக்கு உலக சுகாதார நிறுவனத்துக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்குவதாக தெரிவித்தார். உலக சுகாதார நிறுவத்தில் 196 நாடுகள் அங்கம் வகித்தாலும் அமெரிக்காதான் ஒட்டுமொத்த நிதியில் கிட்டத்தட்ட 15 சதவிகித நிதியை வழங்கி வந்தது. மேலும் அந்நிறுவனத்தின் சில சிறப்புத் திட்டங்களுக்கும் ஸ்பான்ஸர் செய்து வந்தது அமெரிக்கா. தற்போது ட்ரம்ப், இந்த நிதியை நிறுத்துவது என முடிவெடுப்பதால் உலக சுகதார நிறுவனத்தின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் தொடர்பாக சீன அரசின் தகவல்களைத்தான் நம்பி இருந்ததாகக் குற்றம்சாட்டிய ட்ரம்ப், சீனாவிலிருந்து எப்படி கொரோனா பரவியது என்பதை முறையாகக் கண்டறிய தவிறிவிட்டதாகத் தெரிவித்தார். மேலும் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவித்த ட்ரம்ப், அதன் காரணமாக அமெரிக்காவின் நிதி நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார். அதிபரின் இந்த முடிவுக்கு அமெரிக்காவிலே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்க மருத்துவச் சங்கத்தில் தலைவர் ஹாரிஸ் பேசுகையில், ``தீர்வுகளில் கவனம் செலுத்தாமல் உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வரும் நிதியை, அதுவும் மருத்து அவசரகால கட்டத்தின் நடுவே நிறுத்துவது என்பது ஆபத்தில்தான் முடியும்” என எச்சரித்தவர், ட்ரம்ப் தனது முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அமெரிக்கவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போஜி 6 லட்சத்தைக் கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு