Published:Updated:

`உங்கள் நடவடிக்கைக்கு நாங்கள் பரவாயில்லை!’ - ஒபாமா விமர்சனத்துக்கு ட்ரம்ப் பதிலடி

ஒபாமா - ட்ரம்ப்
ஒபாமா - ட்ரம்ப்

கொரோனா நடவடிக்கை தொடர்பான ஒபாமாவின் விமர்சனத்துக்கு அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா வைரஸ் தாக்குதல் கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13, 67,638 - ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80,787 - ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பல லட்சம் அமெரிக்கர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

நியூயார்க்
நியூயார்க்
AP

வைரஸைக் கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தைச் சரி செய்வதற்கான தீவிரப் பணிகளில் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவில் நிலைமை மோசமானதுக்கு ட்ரம்ப்தான் முக்கியக் காரணம் அவர் வைரஸ் பரவலை மிகவும் அலட்சியமாகக் கையாண்டதாகப் பரவலாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் ட்ரம்பைக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஒபாமா தன் கட்சியின் நிர்வாகிகளுடன் பேசும் ஆடியோ ஒன்று கசிந்துள்ளது. அதில்தான் ட்ரம்பை விமர்சித்துள்ளார் ஒபாமா.

`பேரழிவுக் காலத்தில் பெரும் குழப்பம்!. - ட்ரம்ப்பைக் கடுமையாக விமர்சித்த ஒபாமா #Corona

அந்த ஆடியோவில் பேசியுள்ள அவர், “கொரோனா பேரழிவை மிகச் சிறந்த அரசுகளாலேயே முறையாகக் கையாள முடியவில்லை. அதிபர் ட்ரம்பும், இதை எவ்வாறு கையாள்வது எனத் தெரியாமல் நம் அனைவருக்கும் மறக்கமுடியாத காயத்தை வழங்கிவிட்டார். கொரோனாவைத் தடுக்க அதிபர் ட்ரம்ப் கையாண்டது குழப்பமான முழுமையான பேரழிவில் முடிந்துள்ளது. இந்தப் பெரும் தொற்றைச் சமாளிக்க அமெரிக்காவுக்கு மிகவும் வலிமையான தலைமை தேவை.

ஒபாமா
ஒபாமா

நாம் குறிப்பிட்ட நபர் அல்லது கட்சியையும் தாண்டி சுயநலவாதம், பழைமைவாதம், பிரிவினைவாதம் மற்றவர்களை எதிரியாகப் பார்க்கும் மனோபாவம் போன்ற அனைத்தையும் எதிர்த்து நீண்டகாலமாகப் போராடி வருகிறோம். அமெரிக்காவின் நெருக்கடியான இந்த நேரத்தில் நடக்கும் அதிபர் தேர்தல் ஒவ்வொரு படியும் மிகவும் முக்கியமானது” எனப் பேசியுள்ளார். ஒபாமா பேசிய ஆடியோ நேற்று அமெரிக்கா உட்பட சர்வதேச அளவில் பெரும் கவனம் ஈர்த்தது.

இதற்கிடையில் ஒபாமாவின் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்துள்ளார் அதிபர் ட்ரம்ப். இது தொடர்பாக ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ள அவர், ``சில ஆண்டுகளுக்கு முன் ஒபாமாவும், தூங்கிவழியும் ஜோவும் (அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்) ஆட்சியிலிருந்தபோது உருவான ஹெச்1என்1 பன்றிக்காய்ச்சல் நடவடிக்கைகள் மிகவும் மோசமான மதிப்புகளைப் பெற்றன. அதனால் மோசமான வாக்குகள் விழுந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றைக் கையாள்வதற்கு நாங்கள் சிறந்த மதிப்புகளைப் பெற்றுள்ளோம். குறிப்பாகத் தொற்று உருவான சீனாவிலிருந்து வருபவர்களுக்கு ஆரம்ப காலத்திலேயே அமெரிக்கா தடை விதித்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு