Published:Updated:

` விஷம் தடவிய வாள்; பாசாங்கு செய்யும் கோமாளி!’- ட்ரம்ப்பை சாடிய இரான் தலைவர் கமேனி

கமேனி
கமேனி

``இரானிய தேசத்தை பலமுள்ள தேசமாக உருவாக்க வேண்டும். அதிகாரம் என்பது ராணுவத்தில் மட்டுமல்ல, பொருளாதாரரீதியாகவும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ரீதியாகவும் நாம் முன்னேற வேண்டும்” என்று கமேனி பேசியுள்ளார்.

இரானிய தலைவர் அயதுல்லா அலி கமேனி, உக்ரைன் விமானத்தின்மீது கடந்த ஜனவரி 8-ம் தேதி தவறுதலாகத் தாக்குதல் நடந்ததாக ஒப்புக்கொண்டார். இதனால், உள்நாட்டிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச அளவிலும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது இரான்.

அமெரிக்கா  - இரான்
அமெரிக்கா - இரான்
Picasa

2012-ம் ஆண்டுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை தொழுகையை நேற்று தலைமையேற்று நடத்திய கமேனி, ``விபத்து குறித்து நாம் சோகமாக இருப்பதால், நம்முடைய எதிரி நாடுகள் மகிழ்ச்சியாக இருக்கின்றன. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் ஆயுதப்படைகளைக் குறைத்து மதிப்பிடவும், கேள்விக்கு உட்படுத்தவும் இதன்மூலம் ஒரு காரணத்தைக் கண்டுபிடித்ததாக அவர்கள் நினைக்கிறார்கள். அமெரிக்கா பயங்கரவாத குழுவாக அறிவித்துள்ள இரான் உயரடுக்கு பாதுகாப்புப் படை, ஒரு மனிதநேய அமைப்பு. அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்கள், அமெரிக்க கைக்கூலிகள்” என்று பேசினார்.

`அமெரிக்காவுடன் பேசுவதில் எங்களுக்கு விருப்பமில்லை!’ -இந்தியா தலையீட்டை எதிர்நோக்கும் இரான் அமைச்சர்

மேலும், ``நம்முடைய கடமை என்ன? இரானிய தேசத்தை பலமுள்ள தேசமாக உருவாக்க வேண்டும். அதிகாரம் என்பது ராணுவத்தில் மட்டுமல்ல, பொருளாதாரரீதியாகவும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ரீதியாகவும் நாம் முன்னேற வேண்டும். இவை அனைத்துக்கும் பின்னால் மக்கள் இருக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

'ட்ரம்ப், இரானிய மக்களை ஆதரிப்பதுபோல் பாசாங்கு செய்யும் கோமாளி' என்றும் விமர்சித்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இரானிய மக்கள்
இரானிய மக்கள்

இரான் நாட்டில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக ட்ரம்ப் தன் ட்விட்டரில், ``நாங்கள் உங்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து நிற்கிறோம். உங்களது போராட்டங்களை கூர்மையாகக் கவனித்துவருகிறோம். உங்களது தைரியங்களால் ஈர்க்கப்பட்டுள்ளோம்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக கமேனி தன் ட்விட்டரில், ``இரானிய மக்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் என்று வில்லங்கமான அமெரிக்க அரசு தொடர்ந்து கூறிவருகிறது. அவர்கள் பொய் கூறுகிறார்கள். இரான் மக்களுக்காக நீங்கள் நிற்கிறீர்கள் என்றால், அது விஷம் தடவிய வாளால் அவர்கள் இதயத்தில் குத்த மட்டுமே” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் யூ.கே ஆகிய நாடுகளையும் `அமெரிக்காவின் காலடி’ என்று விமர்சித்துள்ளார் கமேனி. இந்த மூன்று நாடுகள்தான் சதாம் ஹுசைனுக்கு இரானுடன் ஏற்பட்ட மோதலின்போது உதவியதாகவும் கூறியுள்ளார். இந்தத் தொழுகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

`அமெரிக்க நெருக்கடியால் பதற்றத்தில் நடந்துவிட்டது’ -  விமானத் தாக்குதலை ஒப்புக்கொண்ட இரான்
அடுத்த கட்டுரைக்கு