Published:Updated:

`ஒபாமாவுக்கு நோபல் தருவீங்க, எனக்குத் தரமாட்டீங்களா?’ - அதிபர் ட்ரம்ப்பின் வேதனை

பாகிஸ்தான் செய்தியாளர்கள் தொடர்ச்சியாக ட்ரம்ப்பிடம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பி வந்தனர். ஒருகட்டத்தில் அவர்களின் கேள்விகளால் அப்செட் ஆனார் ட்ரம்ப்.

Trump
Trump

உலகின் மதிப்புமிக்க பரிசாக நோபல் விருது பார்க்கப்படுகிறது. அதிலும் வெவ்வேறு துறைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டாலும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறப் போவது யார் என்பதில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுவது வாடிக்கை. 2009-ம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Obama
Obama

இந்நிலையில், இது தொடர்பாகத் தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ட்ரம்ப், இம்ரான் என இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர், `பல ஆண்டுகாலமாக இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவிவரும் எல்லைச் சிக்கலை நீங்கள் தீர்த்து வைத்துவிட்டால் உங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கலாம்' என்றார்.

`பாகிஸ்தானை நம்புகிறேன்; காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்!’ - சொன்னதையே சொல்லும் ட்ரம்ப்

இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், ``எனக்கு பல்வேறு விஷயங்களுக்காக நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஆனால். அதற்கு அவர்கள் நியாயமான முறையில் தேர்வை நடத்த வேண்டும். ஆனால், அப்படிச் செய்ய மாட்டார்கள். அவர்கள் ஒபாமா அதிபர் ஆனதும் அவருக்கு ஒரு நோபல் பரிசை அளித்தர்கள். அவருக்கு ஏன் அந்தப் பரிசை தந்தார்கள் என்பது அவருக்கே தெரியாது. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் அவருடன் உடன்படுவேன்” என்றார்.

Imran - Trump
Imran - Trump

பாகிஸ்தான் செய்தியாளர்கள் தொடர்ச்சியாக ட்ரம்ப்பிடம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பி வந்தனர். ஒருகட்டத்தில் அவர்கள் கேள்விகளால் அப்செட் ஆன ட்ரம்ப், ``இதுபோன்ற பத்திரிகையாளர்களை நான் விரும்புவேன். இந்தப் பத்திரிகையாளரை மிகவும் விரும்புகிறேன். நீங்க இம்ரான் கானின் அணியில் இருக்கிறீர்களா. நீங்கள் என்ன நினைத்துப் பேசுகிறீர்கள் என்பதைச் சொல்கிறீர்களா, அதை ஒரு அறிக்கையாகக் கொடுக்கச் சொல்லட்டுமா?” என்றவர் இம்ரான் கானை பார்த்து, ``இதுபோன்ற நபர்களை நீங்கள் எங்கே கண்டுபிடிக்கிறீர்கள்.. இவர்கள் அபாரமானவர்கள்” என்றார்.