Published:Updated:

``பாகிஸ்தான் கொஞ்சம் ஓகே; ஆனால், இந்தியா ஒன்றுமே செய்யவில்லை!” - ட்ரம்ப் குற்றச்சாட்டு

பிரேம் குமார் எஸ்.கே.

திடீரென அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற்றால், அது தீவிரவாத அமைப்புகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துவிடக்கூடும் என பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன.

Modi - Trump
Modi - Trump

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சர்ச்சையான கருத்துகளுக்கு சொந்தக்காரர் என்றே சொல்லலாம். தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சை கருத்துகள் சொல்லி அவ்வப்போது உலகையே தன் பக்கம் பார்க்க வைப்பார். காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என இந்தியா கோரிக்கை வைத்ததாகச் செய்தியாளர்களிடம் பேசி அதிர வைத்தார்.

Trump
Trump

காரணம் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்றுதான் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தியா அமெரிக்காவிடம் அப்படி ஒரு கோரிக்கையை எந்தக் காலத்திலும் வைக்கவில்லை, இனியும் வைக்காது என திட்டவட்டமாக மறுத்தது. இருந்தும் காஷ்மீர் விவகாரத்தில் தான் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாகத் தொடர்ந்து பேசிவந்தார்.

இந்த நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான கேள்விக்கு ட்ரம்ப் அளித்துள்ள பதில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

America in Afgan
America in Afgan

ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இராக் மற்றும் சிரியாவிலிருந்து அமெரிக்க படைகளைக் குறைத்துள்ளது. மேலும், தற்போது ஆப்கானிஸ்தானில் தலீபான் கிளர்ச்சியாளர்களுடன் படைகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. ஆனால், திடீரென அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற்றால், அது தீவிரவாத அமைப்புகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துவிடக்கூடும் என பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன. இது தொடர்பான கேள்விதான் ட்ரம்பிடம் எழுப்பப்பட்டது.

``வரும் காலத்தில் ரஷ்யா, ஆப்கானிஸ்தான், இரான், இராக், துருக்கி உள்ளிட்ட நாடுகள் தீவிரவாதத்துக்கு எதிராக போராடத் தொடங்கும். நாங்கள் காலிபான்களை 100 சதவிகிதம் துடைத்து எறிந்தோம். அதைக் குறைந்தகால அவகாசத்தில் செய்துள்ளோம். ஆனால், ஒரு கட்டத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இருக்கும் நாடுகள் அனைத்தும் அதற்கு எதிராகப் போராடியாக வேண்டும். நாங்கள் இங்கு (ஆப்கானிஸ்தான்) இன்னும் 19 ஆண்டுகள் இருக்க முடியுமா? நான் அப்படி நினைக்கவில்லை.

Imran khan - trump
Imran khan - trump

ஆப்கானுக்கு பக்கத்தில்தான் இந்தியா இருக்கிறது. ஆனால், அவர்கள் அங்கு நடக்கும் தீவிரவாதத்துக்கு எதிராக போராடவில்லை. நாங்கள் போரிடுகிறோம். பாகிஸ்தானுக்கு இந்த நாடுகள் இன்னும் பக்கத்தில் இருக்கிறது. அவர்கள் குறைந்தபட்சம் கொஞ்சமாக போராடுகிறார்கள். ஆனால் அமெரிக்கா ஏழாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து, அங்கு இருக்கும் தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடுகிறது” என்றார்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னால் ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புவதற்கு பாகிஸ்தான் எங்களுக்கு உதவுவதாக மகிழ்ச்சி தெரிவித்திருந்த ட்ரம்ப் தற்போது விமர்சித்தும் இருக்கிறார்.

US Military in Afgan
US Military in Afgan

அதேபோன்று ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு அதிகாரியான சால்மே காலில்சாத், கடந்த மாதம் இந்தியா வந்து, ஆப்கானிலிருந்து படைகளைத் திரும்பப்பெறும் முடிவில் அமெரிக்கா இருப்பதால், இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றார். இந்த நிலையில், ட்ரம்பின் இந்தக் கருத்து தேவையற்றது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.