Published:Updated:

ஹெச்-1 பி விசா தடை; பாதிக்கப்படும் இந்தியர்கள்? - ட்ரம்ப்பின் முடிவால் கலங்கும் ஐ.டி துறை

ட்ரம்ப்
ட்ரம்ப்

``கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான இந்தச் சூழலில் இவை பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அங்கீகரிப்பதன் மூலமாக அமெரிக்க குடிமக்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.”

அமெரிக்காவில் சென்று வேலை செய்வதும் அங்கேயே செட்டிலாவதும் உலகெங்கும் வசிக்கும் பல மக்களின் கனவாக இருக்கும் என்றே கூறலாம். அதற்கு ஏற்றவாறு அமெரிக்க நிறுவனங்களும் வேலைவாய்ப்புகளை அதிகமாக வழங்கி வருகின்றன. இந்தநிலையில் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து வேலை செய்வதற்காக வழங்கப்படும் ஹெச்-1 பி உள்ளிட்ட பல விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல நாடுகளிலும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. எனவே, அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கும் வகையில் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஹெச்-1 பி விசா :

அமெரிக்காவில் தற்காலிகமாக வேலை செய்வதற்காக வழங்கப்படும் அனுமதிதான் இந்த ஹெச்-1 பி விசா. சுமார் மூன்று ஆண்டுகள் வரை அமெரிக்காவில் பணியாற்ற இந்த விசா அனுமதி வழங்கப்படுகிறது. இந்த விசாவில் சில உட்பிரிவுகளும் உள்ளன. பிரிவுகளுக்கு ஏற்ப தகுதிகளும் வகைப்படுத்தப்படுகின்றன. பொதுவாகவே இந்த வகை விசாக்கள் குறிப்பிட்ட துறையில் மிகவும் திறமை வாய்ந்த வெளிநாடுகளைச் சேர்ந்த நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்தியர்களிடையே இந்த விசா பரவலாக அறியப்படுகிறது என்றே கூறலாம்.

இந்த விசாக்கள் ஊதிய நிலை மற்றும் திறமை என இரண்டையும் கவனத்தில் கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 85,000 ஹெச்-1 பி விசாக்கள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதில் 70 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹெச்-1 பி விசா திட்டமானது தொழில்நுட்பத்துறைக்கு மிகப்பெரிய அளவில் பயனளித்துள்ளது. 1990-களில் இந்த இந்த விசா முறை நடைமுறைக்கு வந்தது. அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளார். தற்போது இந்த விசாவுக்குத் தற்காலிக தடை அறிவிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trump:`குங் ஃப்ளூ.. குறைக்கப்படும் பரிசோதனைகள்?!’ - ட்ரம்ப் பிரசாரக் கூட்ட சர்ச்சை

அதிபர் ட்ரம்ப் :

அமெரிக்க தொழிலாளர்கள் நமது நாட்டின் பல்வேறு துறையிலும் பணியாற்றும் வெளிநாட்டினருடன் போட்டியிடுகின்றனர். இதில், தற்காலிகமாக வேலை செய்ய நாட்டுக்குள் நுழைபவர்களும் அடங்குவர். தற்காலிகமாக வருபவர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் வருகின்றனர். அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கடுமையாகப் போட்டியிடுகின்றனர். சாதாரண சூழ்நிலைகளில் இந்தத் தொழிலாளர்கள் அமெரிக்காவின் பொருளாதார நன்மைகளுக்காகச் செயல்பட முடியும்.

ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான இந்தச் சூழலில் இவை பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அங்கீகரிப்பதன் மூலமாக அமெரிக்க குடிமக்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். 2020-ம் ஆண்டில் நெருக்கடியான காலகட்டத்தில் மட்டும் 20 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க மக்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். எனவே, இந்த விசாக்களை ரத்து செய்வதன் மூலமாக அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிக அளவில் ஏற்படும்.

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை அதிகாரிகள் :

ஹெச்-1 பி விசாக்களில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது என்பது தகுதியின் அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற பாதையை நோக்கி பயணிப்பதற்கான அடிப்படை எனலாம். சிறந்த ஒன்றைப் பெறுவது பற்றியும் அமெரிக்காவில் வேலைகளைப் பாதுகாப்பது பற்றியும் அதிபர் அடிக்கடி பேசுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். எனவே, இந்தச் சீர்திருத்தங்கள் இந்த இரண்டையும் சிறப்பாகச் செய்யும். தற்போதைய ஆண்டு வரை இந்த விசாக்கள் லாட்டரி சீட்டுபோல ஒழுங்கற்ற முறையில் விநியோகிக்கப்பட்டு வந்தன. ஒழுங்கற்ற முறையில் இருந்து விடுபட்ட சம்பளத்தின் அடிப்படையில் விசாக்களை தரவரிசைப்படுத்த அதிபர் கூறினார்.

மேலும், இந்த விசா விவகாரங்களில் உள்ள குறைகளைக் கண்டறிந்து அதைச் சரிசெய்யவும் அதிபர் இந்த முடிவுகளை எடுத்துள்ளார். நெருக்கடியான நிலைமைகள் சீரானதும் இந்தக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்படும். அதிபரின் இந்த நடவடிக்கையால் அமெரிக்கர்கள் பலரும் பலனடைவார்கள். ஹெச் 1-பி விசாவில் வேலைக்கு வரும் அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்தத் தடைகள் பொருந்தாது. குறைந்த அளவில் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்த விசா தடைகள் பொருந்தும்.

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை :

``அமெரிக்காவின் பொருளாதார வெற்றிக்கு குடியேற்றம் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளது. அமெரிக்க தொழில்நுட்பத்துறையின் தலைவராகத் திகழ்கிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் பங்களிப்பால்தான் கூகுள் நிறுவனமும் வெற்றி பெற்றுள்ளது. அதிபரின் இந்த அறிவிப்பால் நாங்கள் ஏமாற்றமடைகிறோம். குடியேற்றம் செய்ய விரும்புவர்களுக்கு ஆதரவாக நின்று அவர்களுக்கான வாய்ப்பையும் அதிகப்படுத்துவோம்."

சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை

விமர்சனங்கள் :

ட்ரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் விசா தொடர்பான விவகாரத்தில் விமர்சனத்துக்குரிய முடிவுகளை எடுத்து வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. தற்போது வேலைக்காக வருபவர்களுக்கு தடை விதித்ததைப்போல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய நாட்டின் மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து, அமெரிக்க மக்களுக்கு வேலை வாய்ப்புகளில் அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் கூறி வந்தார்.

ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் அமெரிக்கர்கள் பலரிடமும் அதிக வரவேற்பையும் சில விமர்சனங்களையும் பெற்றது. இந்த நிலையில், தற்போது தேர்தல் வெற்றிக்கு பயன்படும் வகையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கியுள்ளன. கொரோனா விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களிலும் அவர் எடுத்த நடவடிக்கைகள் அவருக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. இதனால், அமெரிக்க மக்களின் ஆதரவை அதிகரிக்க இந்த உத்தரவை அவர் பிறப்பித்ததாக விமர்சனங்கள் எழுகின்றன.

அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்குவது நியாயமானது என்றும் ஆனால், இந்த நெருக்கடியான சூழலில் பலரும் வேலைவாய்ப்புகளை இழந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு மேலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

`அதிபர் தேர்தலில் உதவ ஜின்பிங்கிடம் கெஞ்சிய ட்ரம்ப்?!’ -ரகசியம் நிறைந்த அதிகாரியின் புத்தகம்
அடுத்த கட்டுரைக்கு