Published:Updated:

`30 நாள்களுக்குள் நிரூபிக்கத் தவறினால் முழு நிதியும் கட்’ - WHO-வுக்கு ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

WHO பெரிய முன்னேற்றங்களுக்கு உறுதியளிக்க வேண்டும் இல்லையென்றால் முற்றிலுமாக நிதி நிறுத்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா உட்பட மொத்த உலகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமான பிறகு அதிபர் ட்ரம்ப், சீனாவையும் உலக சுகாதார நிறுவனத்தையும் கடுமையாகக் குற்றம்சாட்டி விமர்சித்து வருகிறார். கொரோனா பற்றிய தகவல்களைச் சீனா மறைத்ததின் விளைவினால் தற்போது உலகம் பெரும் விலை கொடுத்துக்கொண்டிருக்கிறது, உலகத்தின் இந்தக் கடினமான நிலைக்குச் சீனா மட்டுமே பொறுப்பு என பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் ட்ரம்ப்.

டெட்ரோஸ் - ஜின்பிங்
டெட்ரோஸ் - ஜின்பிங்

கொரோனா விவகாரத்தில் சீனாவை மட்டுமல்லாது உலக சுகாதார நிறுவனத்தையும் லெஃப்ட் ரைட் வாங்கினார் ட்ரம்ப். உலக சுகாதார நிறுவனம், கொரோனா பற்றிய தகவல்களை முன்னரே அறிந்திருக்கும். அப்படி அறிந்தும் வைரஸ் பரவுவதன் விளைவுகளை அவர்கள் முறையாக எச்சரிக்கவில்லை. வைரஸ் விஷயத்தை உலக சுகாதார நிறுவனம் சரியாகக் கையாளத் தவறிவிட்டது’ எனக் கூறி உலக சுகாதார நிறுவனத்துக்காக அமெரிக்கா வழங்கும் நிதியைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். உலக சுகாதார நிறுவனத்தில் பல நாடுகள் இருந்தாலும் அமெரிக்காதான் அவர்களுக்கு அதிகப்படியான நிதியை வழங்கி வந்தது. கொரோனா காலத்தில் திடீரென அமெரிக்கா நிதியை நிறுத்துவதாக அறிவித்தது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது.

`உங்கள் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ -WHO -க்கான நிதியை நிறுத்தி அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்

இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில், தற்போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் உலக சுகாதார நிறுவனத்துக்கு மிரட்டல் விடுத்துள்ளார். கொரோனா விவகாரம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸுக்கு அதிபர் ட்ரம்ப் 4 பக்க கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், `ஏப்ரல் 14-ம் தேதி உலக சுகாதார நிறுவனத்துக்கான அமெரிக்காவின் நிதி பங்களிப்பை நான் நிறுத்தி வைத்தேன். கோவிட் -19 வெடித்த பிறகு WHO வின் தோல்வியைப் பற்றிய எனது நிர்வாகத்தின் விசாரணைக்காகக் காத்திருந்தேன். இந்த விசாரணை கடந்த மாதம் நான் எழுப்பிய கடுமையான கேள்விகளை உறுதிப்படுத்தியுள்ளது.

WHO இயக்குநர்
WHO இயக்குநர்

டிசம்பர் மாதம் அல்லது அதற்கு முன்பே சீனாவில் பரவிய வைரஸின் நம்பகமான அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளது. சீன அரசு தரும் முரண்பாடான அறிக்கைகளை WHO சுயாதீனமாக விசாரிக்கத் தவறிவிட்டது. ஒரு சுகாதார அவசரக் கால அபாயத்தை அடுத்த 24 மணி நேரத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்க வேண்டும்.

ஆனால், சீனாவில் டிசம்பரில் வைரஸ் பரவியிருந்தாலும் அந்த மாத இறுதிவரை அதை அவர்கள் உறுதிசெய்யவில்லை. ஜனவரி 5-ம் தேதி சீன அதிகாரிகள் கொரோனா வைரஸின் மரபணுவை வரிசைப்படுத்தியதாகக் கூறினார்கள். ஆனால், ஜனவரி 11-ம் தேதி மருத்துவர் ஜாங் தானாக அதை இணையத்தில் வெளியிடும் வரை சீன அதிகாரிகள் வெளியிடவில்லை. மரபணு வரிசை வெளியிட்ட மருத்துவரின் ஆய்வு மையம் மறுநாளே மூடப்பட்டது.

`தயவுசெய்து அரசியலாக்காதீர்கள்... பிணப்பைகள்தான் வேண்டுமா?!' - ட்ரம்ப் மிரட்டலுக்கு WHO பதில்

உலக சுகாதார நிறுவனம் பலமுறை கொரோனா வைரஸ் பற்றி தவறாக வழி நடத்தியது. சீன அதிபர் ஜி ஜின்பிங் கொடுத்த அழுத்தத்தினால் கொரோனா தொடர்பான அவசரக்கால அறிவிப்பை WHO தாமதப்படுத்தியிருக்கலாம். சீனாவில் கடுமையாக உள்நாட்டுப் பயண கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் எனக் கூறிய உலக சுகாதார நிறுவனம், அமெரிக்காவின் எல்லையை மூடத்தேவையில்லை என அறிவுறுத்தினீர்கள். முதலில், கொரோனா இன்ஃப்ளூயன்ஸாவைப் போல மிக வேகமாகப் பரவாது எனக் கூறினீர்கள். ஆனால், மார்ச் 11-ம் தேதி ஒரு வழியாக இதைத் தொற்று நோயாக அறிவித்தீர்கள். அதற்குள் கொரோனா 114 நாடுகளுக்குப் பரவி ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு 4,000 பேர் உயிரிழந்துவிட்டனர்.

சீனா பகிரங்கமாக வைரஸ் தோற்றத்தை வெளியிட வேண்டும் என WHO அறிவுறுத்தவில்லை. சார்ஸ் வெடித்தபோது WHO-வின் தலைவராக இருந்த ஹார்லெம் போலவே தற்போதைய தலைவர் டெட்ரோஸும் செயல்பட்டிருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்” என உலக சுகாதார நிறுவனம் மற்றும் சீனா செய்ததைத் தேதிவாரியாக குறிப்பிட்டு விமர்சித்துள்ளார் ட்ரம்ப்.

`சீனா நினைத்திருந்தால் கொரோனாவை அழித்திருக்க முடியும், ஆனால்..!’ - சந்தேகம் எழுப்பும் ட்ரம்ப்

இறுதியாக, `தொற்று நோய்க்கு உலக சுகாதார நிறுவனம் அளிக்கும் பதில் இந்த உலகத்துக்கு மிகவும் விலை உயர்ந்தவை. சீனாவிலிருந்து சுதந்திரத்தை நிரூபிப்பது மட்டுமே உலக சுகாதார நிறுவனத்துக்கு இருக்கும் ஒரே வழி. இந்த நிறுவனத்தை எவ்வாறு சீர்திருத்துவது என்பது குறித்து எனது நிர்வாகம் உங்களுடன் ஏற்கெனவே விவாதங்களைத் தொடங்கிவிட்டது. ஆனால், நீங்கள் விரைவாகச் செயல்பட வேண்டும், தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்க முடியாது.

எனவே, அடுத்த 30 நாள்களுக்குள் உலக சுகாதார நிறுவனம் பெரிய முன்னேற்றங்களுக்கு உறுதியளிக்க வேண்டும் இல்லையென்றால் உங்களுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிரந்தரமாக நிறுத்தவேண்டியிருக்கும் என்பதை அமெரிக்காவின் அதிபர் என்ற முறையில் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது எனது கடமை. சுகாதாரம் மற்றும் நிறுவனத்தில் எங்கள் பங்களிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள். அமெரிக்காவில் நிதி செலுத்துவோரின் பணத்தை ஒரு நிறுவனத்துக்குத் தொடர்ந்து நிதியளிக்க அனுமதிக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

உலக சுகாதார நிறுவனத்தின் 73-வது கூட்டத்தில் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் தீர்மானம் கொண்டுவந்து அதற்கு 120 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், முதல்முறையாகக் கொரோனா விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு சீனா இறங்கிவந்து விசாரணைக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் உலக சுகாதார நிறுவனமும் சீனாவும் இக்கட்டான நிலையில் இருக்கும் இந்த நேரத்தில் WHO -வுக்கு பெரும் அழுத்தம் கொடுத்துள்ளார் ட்ரம்ப்.

அடுத்த கட்டுரைக்கு