Published:Updated:

`அதிபர் தேர்தலுக்காக உலக நாடுகளின் உதவி?' - தொலைபேசி ஆடியோவால் புதிய சர்ச்சையில் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பிற நாடுகளின் உதவியை, ட்ரம்ப் கோருவதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது.

Volodymyr Zelensky - Trump
Volodymyr Zelensky - Trump ( AP )

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடெனும் போட்டியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தத் தேர்தலில்தான் வெற்றி பெறுவதற்காக அதிபர் ட்ரம்ப் பிற நாடுகளின் உதவிகளைக் கோருவதாக விசில் ப்ளோவர் (whistleblower - ஒரு பொது அமைப்பில் நடக்கும் தவறு, குற்றங்களைச் சுட்டிக்காட்டி வெளிச்சத்துக்குக் கொண்டு வருபவர்) குற்றம்சாட்டியுள்ளார்.

Trump
Trump
AP

அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் பற்றியும் அவரின் மகன் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என உக்ரைன் நாட்டு அதிபரிடம் கேட்டுக்கொண்டுள்ளார் ட்ரம்ப். உக்ரைன் நாட்டில் புரிஸ்மா ஹோல்டிங் (Burisma Holdings) என்ற இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனம் உள்ளது. 2014-ம் ஆண்டு ஜோ பிடென் துணை அதிபராக இருந்தபோது அவரின் மகன் ஹண்டர் பிடென், புரிஸ்மா நிறுவனத்தின் கட்டண வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

`ஒபாமாவுக்கு நோபல் தருவீங்க, எனக்குத் தரமாட்டீங்களா?’ - அதிபர் ட்ரம்ப்பின் வேதனை

அப்போது, இந்நிறுவனம் தொடர்பான முறைகேடு வழக்கை விசாரித்த அதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதில் ஜோ பிடெனின் தலையீடு இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, ஜோ பிடென் மற்றும் அவரின் மகன் ஹண்டரைப் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கு (Volodymyr Zelensky) ட்ரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார் என விசில் ப்ளோவர் கூறியுள்ளார்.

Director of national intelligence, USA
Director of national intelligence, USA
AP

இந்த இரு நாட்டு அதிபர்களும் ஜூலை 25-ம் தேதி தொலைபேசியில் பேசியுள்ளனர். ``ஜோ பிடெனின் மகன் மீது நிறைய சர்ச்சைகள் உள்ளன. புரிஸ்மா நிறுவனத்தின் மீதான விசாரணையும் நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நிறைய அதிகாரிகள் அதன் பின்னணியைப் பற்றி அறிய விரும்புகிறார்கள். எனவே, இது பற்றி விசாரணை நடத்துங்கள்” என ட்ரம்ப் பேசியுள்ளார். இந்த ஆடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபரிடம் பேசியதை வெள்ளை மாளிகையும் உறுதி செய்துள்ளது. 2020-ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலுக்காக ட்ரம்ப் இவ்வாறு செய்வதாகவும், தேர்தலின் தான் வெற்றி பெறவே பிறநாடுகளின் உதவியைக் கோருகிறார் என்றும் ஜனநாயகக் கட்சி ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

Complaint
Complaint
Reuters

மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (பிரதிநிதிகள் சபை) ட்ரம்ப் மீது தகுதி நீக்கத் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்கா வழங்குவதாக அறிவித்திருந்த நிதி சமீபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அனுப்பப்பட்டது. இந்த இரண்டு சம்பவத்தையும் சேர்ந்து ஜனநாயகக் கட்சி ட்ரம்ப் மீது கடுமையான குற்றம்சாட்டியுள்ளது.

ட்ரம்பின் இந்தச் செயலால் அமெரிக்காவின் ஜனநாயகமும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது என விமர்சித்துள்ளது. இதற்கிடையில், செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், “எனக்கும் உக்ரைன் அதிபருக்கும் இடையேயான உரையாடல் நட்பு ரீதியிலானது. அதில் அரசியல் இல்லை. அவருக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. என் மீதான சூனிய வேட்டையை ஜனநாயகக் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால், இது வேடிக்கையானது” எனப் பதில் அளித்துள்ளார்.

Volodymyr Zelensky - Trump
Volodymyr Zelensky - Trump
AP

ட்ரம்ப் பேசிய ஆடியோ வெளியாகி அமெரிக்க அரசியலில் பரபரப்பை அதிகரித்துள்ளது. பல அரசியல் தலைவர்கள், ட்ரம்ப்பை பதவி விலகக் கோரியுள்ளனர். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார்.