Published:Updated:

அணு ஆயுதத் தாக்குதல்; பென்டகனுக்கு எச்சரிக்கை - ட்ரம்ப்பைத் தொடரும் சர்ச்சை!

ட்ரம்ப்
ட்ரம்ப்

தொடர்ச்சியாக ட்ரம்ப் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை சர்வேதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ட்ரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டு, சர்ச்சையாகி, பின் நீக்கியவற்றைத் தொகுத்தால், அவை பல்வேறு அத்தியாயங்களைப் பெறும் என்பதில் ஆச்சர்யமில்லை. அந்த அளவுக்குத் தனது நான்காண்டு ஆட்சியில் பல்வேறு சர்ச்சைகளை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.

வலதுசாரி நிலைப்பாடுகளை உடைய ட்ரம்ப், தனது சர்ச்சைக்குரிய செயல்களால் மக்களின் மத்தியில் அவப்பெயரைப் பெற்றிருக்கிறார். H1B விசா தொடங்கி, தற்போது நிகழ்ந்துவரும் ஆட்சி மாற்றம் தொடர்பான விவகாரங்கள் வரை ட்ரம்ப் ஏற்படுத்திய சர்ச்சைகளும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும் ஏராளம்.

கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இம்முறை ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், கமலா ஹாரிஸ் இருவரும் அதிக வாக்குகளைப் பெற்று புதிய வரலாறு படைத்தனர்.

ஜோ பைடன்
ஜோ பைடன்

ஆரம்பத்தில், தேர்தல் முடிவுகள் குறித்த அதிகாரபூர்வ அறிவுப்புகள் வெளியாக தாமதமானதால், தேர்தல் முடிவுகளில் குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், வாக்கு இயந்திரங்கள் மூலம் மோசடி நிகழ்ந்திருப்பதாகவும் குற்றம்சாட்டி வந்ததார் ட்ரம்ப். அது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளும் நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டன.

பின்னர், ஒவ்வொரு மாகாணமாக முடிவுகள் வெளிவந்தன. ட்ரம்ப்பும், வேகமெடுக்கத் தொடங்கினார். வெள்ளை மாளிகையின் பிடியை இழக்க விரும்பாத ட்ரம்ப், தொடர்ந்து ஜோ பைடன் மீது அவதூறு கருத்துகளையே பரப்பிவந்தார். ஆட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கியது. ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நகரங்களின் சாலைகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர்.

அமெரிக்கா: ட்ரம்ப் உரை... துப்பாக்கிச்சூடு; ஆதரவாளர்களால் கலவரபூமியான செனட்! - நடந்தது என்ன?

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி 20-ம் தேதி பதவியேற்கவிருக்கும் நிலையில், கடந்த வாரம் வாஷிங்டன் கேபிடலில் அதிபராகத் தேர்ந்தெடுக்கபட்ட பைடனுக்கு சான்றிதழ்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் உறுப்பினர்கள் செய்துவந்தனர். அப்போது உள்ளே நுழைந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

வாஷிங்டன் வன்முறை
வாஷிங்டன் வன்முறை
Julio Cortez

அதன் தொடர்ச்சியாக தற்போது ட்ரம்ப் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை சர்வேதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு தற்போது நிரந்தரமாக முடக்கப்பட்ட நிலையில். அதற்கு முன்னர் வட கொரியா அதிபரைச் சீண்டி அவர் வெளியிட்ட கருத்துதான் அமெரிக்காவின் தற்போதைய டாப் ஆஃப் தி டவுன்.

``தங்களிடம் உலகின் சக்தி வாய்ந்த ஆணு ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறும் கிம் ஜாங் உன் ஆளும் வட கொரியாவைவிட பல மடங்கு சக்திவாய்ந்த அணு ஆயுதம் இருக்கிறது’ என்று ட்ரம்ப் பதிவிட்டிருந்தார். இதனால், அவர் விரைவில் அணு ஆயுதத் தாக்குதலை நிகழ்த்துவதற்கு திட்டமிட்டிருந்ததாக அந்நாட்டு அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், இது குறித்து ட்ரம்ப் தனது நெருங்கிய வட்டத்திலுள்ள சிலரிடம் விவாதித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ட்ரம்ப்பால் அணு ஆயுதத் தாக்குதலை நடத்த முடியுமா?

அமெரிக்கா அரசியலமைப்பைப் பொறுத்த வரையில், ட்ரம்ப்பின் தன்னிச்சையான முடிவால் எதிரி நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவது என்பது சாத்தியமாகாது. ஏனெனில், உயர்மட்ட ஆலோசனைக்குழுவுடன் ஆலோசித்த பிறகு, ராணுவத் தளபதிகள் ஒப்புதல் அளித்த பிறகே அதை நிகழ்த்த முடியும்.

ஏற்கெனவே செனட்டில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவின் ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் வகையில் ட்ரம்ப் செயல்பட்டதாக ட்ரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இதனால், ட்ரம்ப் தனது சங்கேதக் குறியீடான `பிஸ்கட்’ மூலம் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனைத் தொடர்புகொள்ள முயலலாம் என்பதால் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதேபோல், அணு ஆயுதத் தாக்குதலை ட்ரம்ப் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு முப்படைகளின் ராணுவத் தளபதியான மார்க் மில்லியிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
Alex Brandon

மேலும், ட்ரம்ப்பின் ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பாகவே 25-வது சட்டத் திருத்தத்தின்படி உடனடியாக அவரைப் பதவியிலிருந்து விடுவிக்க பதவி நீக்க தீர்மானமும் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

திசை திருப்புகிறாரா ட்ரம்ப்?

கடந்த 2018-ம் ஆண்டே இது தொடர்பான கருத்துகளைத் தெரிவித்து, அவை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் அதைத் தெரிவித்திருக்கிறார் ட்ரம்ப்.

அமெரிக்காவின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ட்ரம்ப் தொடர்ந்து செயல்பட்டுவருவதால், தனது ஆட்சி அதிகாரம் முடிவதற்கு முன்பாக உலகமே திரும்பிப் பார்க்கும் வகையிலான செயலை நிகழ்த்த ட்ரம்ப் திட்டமிடுகிறாரா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. செனட் தாக்குதல் விவகாரம் ட்ரம்ப்புக்கு அவப்பெயரை உண்டாக்கியிருப்பதால், அதை திசை திருப்பும் நோக்கில் இதைச் செய்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

இந்தச் சூழலில், ட்ரம்ப் பதவி விலகுவது குறித்த சர்ச்சை நீடித்துவருவதால், ஒருவேளை உடனடி பதவி நீக்க தீர்மானத்தைச் செயல்படுத்தவில்லையென்றால், பிரதிநிதிகள் சபையில் ட்ரம்ப்புக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை முன்னெடுக்க ஜனநாயகக் கட்சியினர் முடிவுசெய்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு