Published:Updated:

` ஆபரேஷன் அமைதி வசந்தம்!' - மீண்டும் சிரியாவை மிரட்டும் போர்; வெளியேறும் 2 லட்சம் மக்கள்

சிரியா போர் ( AP )

சிரியாவில் உள்ள குர்திஷ் படைகளை அழிப்பதற்காக துருக்கி அரசு மீண்டும் சிரியா மீது போர் நடத்தி வருவதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது.

` ஆபரேஷன் அமைதி வசந்தம்!' - மீண்டும் சிரியாவை மிரட்டும் போர்; வெளியேறும் 2 லட்சம் மக்கள்

சிரியாவில் உள்ள குர்திஷ் படைகளை அழிப்பதற்காக துருக்கி அரசு மீண்டும் சிரியா மீது போர் நடத்தி வருவதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது.

Published:Updated:
சிரியா போர் ( AP )

மத்திய தரைக்கடலின் கிழக்கில் அமைந்திருக்கும் `ரத்த பூமி’ சிரியா. அங்கு 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போர் இன்றுவரை நீடிக்கிறது. 2000-ம் ஆண்டு சிரியாவின் அதிபராகப் பதவியேற்ற பஷர் அல் அசாத்தின் ஆட்சிக்காலத்தில் வேலையின்மை, வறுமை, ஊழல், அடக்குமுறை போன்ற பல்வேறு கஷ்டங்களைச் சந்தித்தனர் சிரிய மக்கள். இதை எதிர்த்து சிறிய அளவில் தொடங்கப்பட்ட போராட்டம்தான் தற்போது மிகப் பெரிய அளவில் வெடித்து நிற்கிறது.

சிரியா போர்
சிரியா போர்
AP

சிரிய மக்களின் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொண்ட அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி, சவுதி போன்ற நாடுகள் சிரியாவுக்குள் காலடி எடுத்து வைத்தன. கிளர்ச்சிப் படைகள், உள்நாட்டு ராணுவம், ஐ.எஸ் இயக்கம் என அனைத்தும் போராட்டத்தில் குதித்தன. அசாத்துக்கு ரஷ்யா ஆதரவு அளிக்க, கிளர்ச்சிப் படைக்கு அமெரிக்கா ஆதரவுக் கரம் நீட்டியது. சுமார் 9 ஆண்டுகளாக சிரிய மண்ணை குண்டுகள் துளைத்துக்கொண்டே உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராணுவத்தைத் திரும்பப் பெற்ற ட்ரம்ப்!

இந்தநிலையில், சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ படைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். `முடிவே இல்லாமல் பல வருடங்களாக நடக்கும் போருக்கு எங்கள் நாட்டுப் படைகளை அனுப்ப முடியாது’ என அவர் விளக்கமளித்திருந்தார். இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட துருக்கி, கடந்த சில நாள்களாக சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

சிரியா மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும், துருக்கி மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்தும் அதைப் பொருட்படுத்தாத துருக்கி அரசு, தங்கள் முடிவில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது. சிரியாவில் உள்ள குர்திஷ் அமைப்பினர் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

நாட்டுக்காகப் போராடும் குர்திஷ்!

சிரியா, துருக்கி, இரான், இராக் போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்கள் குர்திஷ்கள். இவர்களுக்கு எனத் தனி நாடு கிடையாது. இவர்கள் வாழும் நிலப்பரப்பை `குர்திஷ்தான்' என அழைப்பார்கள். தங்களுக்கென தனி நாடு உருவாக்குவதற்காக இவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். சிரியாவில் உள்ள ஐ.எஸ் படைகளை ஒழிப்பதில் குர்திஷ்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.

குர்திஷ்
குர்திஷ்
AP

குர்திஷ் மக்களைப் பாதுகாக்க ஒய்.பி.ஜே என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு, அமெரிக்க ராணுவப் படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் இணைந்துகொண்டு ஐ.எஸ் படையை ஒழித்துக்கட்டியது. சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவமும் குர்திஷ் அமைப்பும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வருகின்றனர்.

ஆனால், துருக்கியைப் பொறுத்தவரை, இதற்கு அப்படியே தலைகீழான நிலைமை நிலவுகிறது. அங்கு இருக்கும் குர்தீஷ்களை ஒழிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் துருக்கி அதிபர் தயீப் எர்டோகன். குர்திஷ் படையை அழிக்கத் தக்க சமயத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தது துருக்கி. அவர்களுக்கு ஏற்றார்போல், சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

சிரியா போர்
சிரியா போர்
AP

இதை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட துருக்கி, சிரியாவில் உள்ள குர்திஷ் மக்கள் மீது போர் நடத்தி வருகிறது. கடந்த இரு நாள்களில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட குர்திஷ் கூடாரங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன. துருக்கியின் தாக்குதலுக்குப் பயந்து சிரியாவில் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான குர்திஷ்கள் தங்கள் இருப்பிடங்களைக் காலி செய்துவிட்டு வேகவேகமாக நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். துருக்கி படைக்கு எதிராக குர்திஷ் அமைப்புகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆயிரக்கணக்கான பெண்களும் இந்தப் படையில் இடம்பெற்றுள்ளனர்.

குர்திஷ் மீது துருக்கி படை மேற்கொண்டுள்ள தாக்குதலால் குர்திஷ் பிடியில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் தப்பிவந்து உலகம் முழுவதும் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. துருக்கியின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

சிரியா போர்
சிரியா போர்
AP

சிரியாவில் நடக்கும் அதேநிலை துருக்கியிலும் எதிரொலித்துள்ளது. `ஆபரேஷன் அமைதி வசந்தம்’ என்ற துருக்கி தாக்குதலால் அந்த நாட்டில் உள்ள குர்திஷ் மற்றும் சிரிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். துருக்கி ராணுவம் பாரபட்சம் பார்க்காமல் தங்கள் நாட்டில் உள்ள மக்கள் மீதே குண்டுகளை வீசிவருகிறது. சிரியாவில் நடக்கும் போரால் துருக்கிக்கு இடம் பெயர்ந்தவர்கள், தற்போது மீண்டும் வேறு நாட்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். புதிய வெளிச்சம் பிறந்ததாக நினைத்த மக்களின் வாழ்வில் மீண்டும் இருள்சூழ்ந்த புகை படிந்து வருகிறது.

லாரி, இருசக்கர வாகனம், ரிக்‌ஷா என அனைத்திலும் ஏறி தங்களின் உயிரைக் காத்துக்கொள்ளப் போராடி வருகின்றனர் துருக்கி மக்கள். ராணுவ வாகனம், மக்கள் குடியிருப்பு என அனைத்து இடத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சில பெண்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பயந்து தங்கள் குழந்தைகளுடன் அஞ்சி நடுங்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

சிரியா போர்
சிரியா போர்
AP

``இது அனைத்தும் சிரியாவின் தவறு. அங்கு போர் நடப்பதால் அவர்கள் துருக்கிக்குள் வந்தனர். நாங்களும் அவர்களுக்கு இடம் கொடுத்தோம். ஆனால், அவர்களை உள்ளே அனுமதித்ததால் தற்போது போர் எங்கள் பக்கம் திரும்பியுள்ளது” எனக் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார் ஒரு துருக்கி பெண்.