Published:Updated:

`நோ’ மாஸ்க்; வார்த்தையே உச்சரிக்கக் கூடாது! - சர்ச்சையில் துர்க்மெனிஸ்தானின் `கொரோனா’ உத்தரவு

கொரோனா
கொரோனா

உள்ளூர் ஊடகங்களும் கொரோனா வைரஸ் என்னும் வார்த்தையைப் பயன்படுத்த முடியாது என்பதால் மக்களுக்கு உண்மை நிலை தெரிய வராமல் போகும் என இந்த முடிவுக்கு எதிராக சில சுகாதார நிறுவனங்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.

துர்க்மெனிஸ்தான் என்னும் மத்திய ஆசிய நாடு குறித்து அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். எரிவாயு வளமிக்க நாடுகளில் ஒன்றான இது 1991 -ம் ஆண்டு வரையில் சோவியத் யூனியன் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசாக இருந்து வந்தது. அதன்பின்னரே தனியாகச் செயல்பட்டு வருகிறது.

கொரோனா
கொரோனா

இந்த நாட்டின் எல்லைகளை ஈரான் ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் பகிர்ந்துள்ளன. இந்நாட்டின் சில பகுதிகளில் இயற்கை வளங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், நாட்டின் பெரும் பகுதி பாலைவனத்தினால் சூழப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகளைக்கொண்ட இந்த நாட்டில் கெடுபிடிகள் மிகக் கடுமையாக உள்ளன.

பத்திரிகை சுதந்திர நாடுகள் பட்டியில் 2019 -ம் ஆண்டு துர்க்மெனிஸ்தானுக்குக் கடைசி இடம். அதன் அண்டை நாடுகளான ஈரான், ஆப்கானிஸ்தான் உட்பட உலகின் 200 நாடுகளில் கொரோனா பரவியுள்ள இந்தச் சூழலில், துர்க்மெனிஸ்தானில் கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

எனினும் உலக நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் துர்க்மெனிஸ்தானிலும் கொரோனா குறித்த பேச்சுதான் எங்கும் நிறைந்திருக்கிறது. இந்த நிலையில்தான் அந்நாட்டில் அரசு கொரோனா வைரஸ் என்னும் வார்த்தையைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

இந்த விவகாரம் தற்போது வெளிவந்து சர்ச்சையாகியுள்ளது. அதன்படி, அந்நாட்டின் சுகாதாரத்துறை, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பணியிடங்களுக்கு அனுப்பிய சுகாதார அறிக்கையில் இருந்த கொரோனா வைரஸ் என்ற பெயரை நீக்கிவிட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Gurbanguly Berdymukhamedov
Gurbanguly Berdymukhamedov
Wikipedia

மேலும் வீதியில் மாஸ்க் அணிந்துசெல்பவர்கள், கொரோனா குறித்துப் பேசுபவர்கள் கைது செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

துர்க்மெனிஸ்தானின் அதிபர் Gurbanguly Berdymukhamedov, 2006-ம் ஆண்டுமுதல் பொறுப்பில் இருந்து வருகிறார். அந்த நாட்டின் இரண்டாவது அதிபரான இவர் தன்னை அந்நாட்டு மக்களின் பாதுகாவலராக முன்னிலைப்படுத்துவதாகக் கூறப்படுவதும் உண்டு. மேலும் அந்த நாட்டின் சர்வாதிகார தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். பொது இடத்தில் மாஸ்க் அணிவதும் கொரோனா குறித்துப் பேசுவதும் சட்டவிரோதம் என அறிவித்த முதல் நாடாக உள்ளது துர்க்மெனிஸ்தான்.

உலகில் கொரோனா வைரஸ் தொற்றே ஏற்படாத நாடுகள் இவைதான்!

எனினும் கொரோனா தடுப்புப் பரிசோதனைகள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நடப்பதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் ஊடகங்களும் கொரோனா வைரஸ் என்னும் வார்த்தையைப் பயன்படுத்த முடியாது என்பதால் மக்களுக்கு உண்மை நிலை தெரிய வராமல் போகும் என இந்த முடிவுக்கு எதிராக சில சுகாதார நிறுவனங்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.

அடுத்த கட்டுரைக்கு