Published:Updated:

US Elections 2020: `பொய்யான தகவல்; போலி வீடியோ!'- எரிக் ட்ரம்ப்புக்கு செக்வைத்த ட்விட்டர்

எரிக் ட்ரம்ப்
எரிக் ட்ரம்ப் ( AP | Matt Slocum )

அந்த வீடியோவில் கொளுத்தப்படும் வாக்குச்சீட்டுகள் மாதிரி வாக்கு சீட்டுகள் என்றும், உண்மையான வாக்குச்சீட்டுகள் அல்ல என்றும் தேர்தல் அதிகாரிகள் விளக்கமளித்திருந்தனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் இரண்டாவது மகன் எரிக் ட்ரம்ப் கடந்த புதன்கிழமை தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். ட்ரம்ப்பின் 80 வாக்குச்சீட்டுகள் எரிக்கப்படுவதுபோல் காட்சிகள் இடம்பெற்றுள்ள அந்த வீடியோ போலி எனக் கூறி ட்விட்டரிலிருந்து அது நீக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. தற்போதைய அதிபர் ட்ரம்ப், முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் இடையிலான போட்டி வலுத்துவருகிறது. கடந்த 3-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
AP | Evan Vucci

அதையடுத்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு, மூன்றாவது நாளாக வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. ஜோ பைடன் 264 தேர்தல் பிரதிநிதிகளின் வாக்குகளையும், டொனால்டு ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகாவிட்டாலும், ஜோ பைடன் வெற்றிபெறவே அதிக வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஆனால், ஓர் அதிபராக தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவுவதை ட்ரம்ப் ஏற்றுகொள்ள மறுக்கிறார்.

ஜோ பைடன் 50.1 சதவிகித வாக்குகளும், ட்ரம்ப் 48.3 சதவிகித வாக்குகளும் பெற்றிருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி ட்ரம்ப் சார்பில் தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை நீதிமன்றங்கள் நிராகரித்திருக்கின்றன. தமது மேற்பார்வையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த ட்ரம்ப் கோரிக்கை விடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இழுபறி நிலை தொடரும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவால், உலகப் பொருளாதாரம் மறைமுக பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சமும் எழுந்திருக்கிறது.

புதிய அமெரிக்காவை உருவாக்கினாரா ட்ரம்ப்..?! ஓர் உலகம், ஓர் அதிபர், ஒரேயொரு ட்ரம்ப் - 11

இதற்கிடையில், அதிபர் ட்ரம்ப்பின் இரண்டாவது மகன் எரிக் ட்ரம்ப், தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்தார். அந்த வீடியோவில், அடையாளம் தெரியாத நபர் எரியக்கூடிய திரவத்தை ஒரு பையில் ஊற்றி அவற்றுக்குத் தீவைத்து கொளுத்தும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. `அதிலிருக்கும் 80 வாக்குச்சீட்டுகளும் அதிபர் ட்ரம்புடையவை’ என்று கூறி அவற்றை தீவைத்துக் கொளுத்துவதுபோல் வீடியோ காட்சி அமைந்திருக்கிறது. அந்த வீடியோவில் கொளுத்தப்படும் வாக்குச்சீட்டுகள் மாதிரி வாக்குச்சீட்டுகள் என்றும், உண்மையான வாக்குச்சீட்டுகள் அல்ல என்றும் தேர்தல் அதிகாரிகள் விளக்கமளித்திருந்தனர்.

ட்ரம்ப் - பைடன்
ட்ரம்ப் - பைடன்

இருப்பினும் இந்த வீடியோவை, வலதுசாரி ஆதரவு இணையதளமான கேட்வே பண்டிட் மற்றும் எரிக் ட்ரம்ப் இருவரும் வெளியிட்டனர். எரிக் ட்ரம்ப், பகிர்ந்த வீடியோவை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியிருக்கிறது. அதற்கு முன்பாகவே, ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. இது குறித்த கேள்விக்கு ட்ரம்ப் குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் பதிலளிக்க மறுத்துவிட்டார். எரிக் டிரம்ப், அதிபர் தேர்தலைப் பற்றி போலியான, பொய்யான தகவல்களைப் பரப்பிவருகிறார். மேலும், ஜனநாயகக் கட்சியினர் தேர்தலில் `மோசடி’ செய்ய முயல்கிறார்கள் என்றும் ஆதாரமின்றிக் கூறிவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு