Published:Updated:

பறந்துவந்த பாட்டில், பெண் காவலர் உடலில் பற்றிய தீ! - என்ன நடக்கிறது சிலியில்? #Video

சிலி போராட்டம் தொடர்பாக வெளியான புகைப்படங்கள், போராட்டத்தின் தீவிரத்தன்மையை உலகுக்கு எடுத்துச் சொல்வதாக அமைந்தன.

சிலி போராட்டக்களம்
சிலி போராட்டக்களம் ( REUTERS/Jorge Silva )

லத்தீன் அமெரிக்க நாடான சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில், கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவரும் போராட்டங்கள் இன்னும் ஓயவில்லை. மெட்ரோ ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் தொடங்கிய போராட்டம், நாட்டின் பல பகுதிகளில் வன்முறையாக வெடித்தது.

எரிக்கப்பட்ட மெட்ரோ ரயில்!
எரிக்கப்பட்ட மெட்ரோ ரயில்!
Javier Torres/AFP

இந்த விலை ஏற்றத்துக்கு, தங்கள் நாட்டுப் பணமான பெசோவின் மதிப்பு குறைவதையும் அதிகரித்துள்ள கச்சா எண்ணெய் விலையையும் காரணமாகச் சொன்னது சிலி அரசு. எனினும் அதை ஏற்க மறுத்த மாணவர்கள் போராடத் தொடங்கினர். அமைதிப் போராட்டமாகத் தொடங்கி, அடுத்தடுத்த நாள்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதலாக வெடித்தது.

சாண்டியாகோ மெட்ரோவுக்கு உட்பட்ட 164 மெட்ரோ நிலையங்களும் அடித்து நொறுக்கப்பட்டதோடு, போராட்டக்காரர்களால் மெட்ரோ ரயில்களும் எரிக்கப்பட்டன. இதுதொடர்பாக வெளியான புகைப்படங்கள், போராட்டத்தின் தீவிரத்தன்மையை உலகுக்கு எடுத்துச்சொல்வதாக அமைந்தன. மக்கள் பெருமளவில் பயன்படுத்திவந்த மெட்ரோ சேவை முடங்கியதால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

சிலி போராட்டம்
சிலி போராட்டம்
Pablo Vera/AFP

போராட்டங்கள் வன்முறையாக மாறியதால், சிலி அதிபர் பெனெரா, நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை முழுமையாக ராணுவத்திடம் ஒப்படைத்தார். மேலும், உள்நாட்டுப் பாதுகாப்பு கருதி, எமர்ஜென்ஸி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே, நேற்று முதல் இணையத்தில் ஒரு வீடியோ வேகமாகப் பரவியது. பாதுகாப்புப் படையினரின் ஹெல்மெட் கேமராவில் பதிவான அந்த வீடியோவில், போராட்டக்காரர்கள் வீசிய பாட்டில் ஒன்று, பெண் காவலர்கள்மீது விழுந்தது. அதில், இருந்த ரசாயனம் காரணமாக இருவரின் உடல்மீதும் தீ பற்றியது. உடனடியாக, மற்ற காவலர்கள் தங்கள் கையிலிருந்த தீயணைப்பு உபகரணங்களைக்கொண்டு தீயை அணைத்தனர்.

போலீஸார்
போலீஸார்
REUTERS/Ivan Alvarado

இந்த விவகாரம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பிரபல ஆங்கில ஊடகமான ராய்ட்டர்ஸ் ஊடகத்தில், புகைப்படக் கலைஞர்கள் சிலர் அந்தப் பகுதியில் செய்தியைப் பதிவுசெய்வதற்காகக் காத்திருந்தனர். அதில், ஜார்ஜே சில்வா என்னும் தலைமை புகைப்படக் கலைஞர் எடுத்த இந்தப் புகைப்படம், அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

``பாக்குயீடனோ மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. போராட்டக்காரர்கள் மெட்ரோ நிலையத்தை முற்றுகையிடுவதைத் தடுக்கும் முயற்சியின்போது, போராட்டக்காரர்கள்மீது கண்ணீர் குண்டுகளைக் காவலர்கள் வீசினர். அப்போது, போராட்டக்காரர்கள் பக்கத்திலிருந்து ஒரு பாட்டில் பறந்து வந்தது. அது கீழே விழுந்து வெடித்ததும், இரு பெண் காவலர்கள் உடலில் தீ பற்றியது.

பறந்துவந்த பாட்டில், பெண் காவலர் உடலில் பற்றிய தீ!
- என்ன நடக்கிறது சிலியில்? #Video
REUTERS/Henry Romero

சில காவலர்கள், தீயைக் கையால் அணைக்க முற்பட்டனர்” என்கிறார் மற்றொரு புகைப்படக் கலைஞர். பின்னர், பாதிக்கப்பட்ட இரு காவலர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவமனையில், காவலர்களை நலம் விசாரித்த அந்நாட்டு அமைச்சர் கோன்சலோ ப்ளூமெல், ``இது மிகப் பெரிய வன்முறை. காவலர்களின் பாதுகாப்பு மிக முக்கியம்” என்றார்.

மெட்ரோ ரயில்கள் எரிப்பு... எமெர்ஜென்ஸி அறிவிப்பு... என்ன நடக்கிறது சிலி நாட்டில்? #ChileProtest

காவலர்கள், போராட்டக்காரர்கள்மீது ரப்பர் குண்டுகளால் தொடர் தாக்குதல் நடத்தியதாக ஒரு புகைப்படக் கலைஞர் தெரிவிக்கிறார். மனித உரிமை ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த இரு வாரங்களில், சிலியில் 800 காவலர்கள் காயமடைந்திருப்பதாகவும் 1,650 போராட்டக்காரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

News & Photo Credit - Reuters.com