Published:Updated:

`கையில் விலங்கிட்டு, கண்களை மூடி..!'- இந்தியத் தூதரக அதிகாரிகளைக் கொடுமைப்படுத்திய பாகிஸ்தான்

பாகிஸ்தான் - இந்தியா
பாகிஸ்தான் - இந்தியா

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்தில் பணியாற்றி வந்த இரு அதிகாரிகளை நேற்று பாகிஸ்தான் அரசு கைதுசெய்து, 12 மணிநேரம் கழித்து விடுதலை செய்திருக்கிறது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிவரும் அதிகாரிகள் 2 பேர்,, நேற்று திடீரென்று மாயம் ஆனார்கள். அந்த இரு அதிகாரிகளும் தூதரக அலுவலகத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்டுச் சென்ற நிலையில், அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அதிகாரிகள் திடீரென மாயமானது குறித்து இந்தியத் தூதரக அதிகாரிகள், இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்திய அரசுக்கும் முதல்கட்ட அறிக்கையை அனுப்பிவைத்தனர்.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

இந்த நிலையில், அந்த இரு அதிகாரிகளும் விபத்து ஏற்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. அதிகாரிகள் இருவரும் சென்ற சொகுசுக் கார் காலை 8 மணி அளவில் தூதரக சாலையில் சென்றபோது அந்த வழியாக நடந்துசென்ற ஒருவர் மீது மோதியதாகவும், அப்போது அங்கு கூடிய ஏராளமான பேர், காரை தடுத்து நிறுத்தி தப்பி ஓட முயன்ற 2 இந்தியத் தூதரக அதிகாரிகளையும் பிடித்து இஸ்லாமாபாத் போலீஸாரிடம் ஒப்படைத்ததாகவும் பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டது. மேலும், அவர்களைக் கைது செய்தபோதுதான் அவர்கள் இந்தியத் தூதரக அதிகாரிகள் என்பது தெரியவந்ததாகவும் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் அழைத்து, இஸ்லாமாபாத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகள் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் 2 அதிகாரிகளையும் அவர்கள் சென்ற அலுவலக காருடன் இந்தியத் தூதரகத்துக்கு உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்தியத் தூதரக அதிகாரிகள் இருவரையும் பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று மாலை விடுதலைசெய்தனர்.

இந்தியா-பாகிஸ்தான்
இந்தியா-பாகிஸ்தான்
Representational image

முன்னதாக, இந்த இரு அதிகாரிகளின் காரில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவானதாகத் தகவல் வெளியானது. அனால், பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தத் தகவலை மறுத்தது. இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஐ.எஸ்.ஐ நிறுவனத்துக்காக இந்தியாவில் உளவு பார்த்த டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அபித் உசேன், முகமது தாகிர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நாட்டை விட்டு 24 மணிநேரத்தில் வெளியேற்றியது இந்திய அரசு.

இந்திய ராணுவம் தொடர்பான ரகசிய ஆவணங்களைப் பணம் கொடுத்து இந்தியர் ஒருவரிடமிருந்து பெறும்போது இவர்கள் பிடிபட்டனர். இதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, பாகிஸ்தானில் இருக்கும் இந்திய அதிகாரிகளுக்குத் தொல்லை கொடுத்தது அந்நாட்டு அரசு. இந்தியத் தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியாவின் காரை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் இருமுறை பின்தொடர்ந்து சென்ற சம்பவங்களும் நடந்தன.

இந்த நிலையில், பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட தூதரக அதிகாரிகள் இருவரின் உடலிலும் போலீஸார் அடித்துத் துன்புறுத்தியதற்கான காயங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. நேற்று காலை தூதரக சாலையில் இருக்கும் பெட்ரோல் பங்கில் இந்திய அதிகாரிகள் இருக்கும்போது, 15 முதல் 16 அதிகாரிகள் கையில் துப்பாக்கியுடன் வந்து இந்தியத் தூதரக அதிகாரிகளைக் கைதுசெய்தது தெரியவந்துள்ளது. கையில் விலங்கிட்டு, கண்களைக் கட்டி அழைத்துச் சென்றதாகவும் 10 நிமிட பயணத்தில் ஓர் இடத்தில் இறக்கி, அங்கு வைத்து சுமார் 6 மணி நேரம் விசாரணை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணையின்போது ராடுகள் கொண்டும், மரத்திலான கம்புகள் கொண்டும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும், மோசமான தண்ணீரை கட்டாயப்படுத்தி குடிக்கவைத்துள்ளனர். ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் பேசிய இந்திய அதிகாரி ஒருவர், `இந்திய அதிகாரிகளை அழைத்துச் சென்ற அந்தக் குழு, இவர்களிடம் விபத்தை ஏற்படுத்தியது நாங்கள்தான் என்பதை ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தியது. அப்போது, அதை வீடியோ ஆதாரமாக்கவும் அவர்கள் முயன்றுள்ளனர்’ என்றார்.

`போலி ஆதார் கார்டு... ஆவணங்களுக்கு பணம், ஐ-போன்' -டெல்லியில் உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள்

இந்தியாவில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ராணுவ ஆதாரங்களைப் பெற முயன்றபோது பிடிபட்டதாக இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்குப் பழிதீர்க்கும்விதமாக, பாகிஸ்தான் இவ்வாறு செயல்படுவதாக இந்தியா கருதுகிறது. இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு