Published:Updated:

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | நீதனுக்கு வந்த இரண்டு தகவல்களில் ஒன்று... | பகுதி- 10

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

நீதன் சிறிலங்காவில் தற்கொலைக்குண்டு தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர். அவரை விசாரிப்பதற்கு ஆஸ்திரேலிய தேசிய புலனாய்வுத்துறையினர் இன்று இங்கு வரவிருந்தார்கள்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | நீதனுக்கு வந்த இரண்டு தகவல்களில் ஒன்று... | பகுதி- 10

நீதன் சிறிலங்காவில் தற்கொலைக்குண்டு தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர். அவரை விசாரிப்பதற்கு ஆஸ்திரேலிய தேசிய புலனாய்வுத்துறையினர் இன்று இங்கு வரவிருந்தார்கள்.

Published:Updated:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

நீதனின் நினைவுகள் இந்தோனேசிய தேசத்தில் அங்கலாய்க்கும் அலைகளாகப் புரண்டபடியிருந்தன. அந்தரிக்கும் இரண்டு உயிர்களின் மீதும், அனீஸா சுமக்கும் தன் உயிரின் பாதியிலும் ஒவ்வொரு கணமும் இமைத்து இளைத்தான். பயணம் தந்த வெப்பமான அனுபவமும், குயிலன் குடும்பத்தின் கடும் துயரும் கண்முன்னால் கனன்று எரிந்தன.

இந்தப் பயணம் இவ்வளவு கடுமையாகத் தன்னை எரித்து விளையாடும் என்று நீதன் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. கடல் பெரும் விடமாய் தனக்குள் சுரந்து வடிந்ததை எண்ணும்போதெல்லாம் வெருண்டான். தனியாக வந்து இப்படியொரு வாழ்வுக்குள் சிக்குண்டிருப்பதைவிட, அனிஸாவின் அருகிலிருந்து எல்லாச் சிக்கல்களையும் எதிர்கொண்டிருக்கலாமோ என்ற கேள்வி, ஒவ்வொரு நொடியும் நினைவில் வந்து மறைந்தது.

இன்னொரு மண்ணில் - இன்னொரு மனிதர்களின் முன்னால் - நினைவுகளைச் சரியாக செரிமானம் செய்துகொள்ளக்கூட முடியாமல் தவித்தான்.

ராத்திரிகளின் அமைதியும், விளக்கணைத்த பிறகு தனக்கென்று காத்திருக்கும் `அல்பா’ கம்பவுண்ட் படுக்கையும்தான் அழுவதற்குக்கூட முகாமில் சிறு சுதந்திரத்தைத் தந்தன.

அன்று வழக்கம் போன்ற காலைச் சந்திப்பு குடிவரவு அமைச்சின் அலுவலகத்தில் ஆரம்பமானபோது, அங்கு நீதனின் படம் போட்ட கோப்போடு அதிகாரி ஒருவர் அறைக்குள் நுழைந்தார். முகாம் தொடர்பான வழக்கமான அம்சங்கள்தான் முதலில் பேசப்பட்டன. எனக்கோ, மேசையிலிருந்த நீதனின் படம்போட்ட கோப்பிலேயே கவனம் குவிந்திருந்தது. அந்த விடயத்துக்கு பேச்சு எப்போது வரும் என்பதற்காக அத்தனை அதிகாரிகளின் உதடுகளையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

``சார்ளி கம்பவுண்டில் இரண்டு பெண்கள் நேற்றிரவு ஏன் இரவுணவு சாப்பிடவில்லை என்பது தொடர்பாக விசாரித்தீர்களா?”

``ஆம்! அவர்கள் மாலையே விருந்தினர் கொண்டுவந்த சாப்பாட்டை, விருந்தினர்களோடு சேர்ந்து விருந்தினர் மண்டபத்தில் சாப்பிட்டதை அதிகாரிகள் கவனித்திருக்கிறார்கள்.”

``அந்தத் தகவல் உண்மைதானா... அவர்கள் சாப்பிட்டதைக் கவனித்தீர்களா? அவர்கள் திடீரென்று இரண்டு நாள்கள் கழித்து வந்து, `நாங்கள் உண்ணாவிரதமிருக்கிறோம்’ என்று சொல்லிவிடுவார்கள் கவனம். ஊடகங்களில் செய்தி வந்தால், குடிவரவு அமைச்சுக்குத்தான் இழுக்கு.”

முகாமில் யாராவது தொடர்ச்சியாக மூன்று வேளை உணவு உட்கொள்வதைத் தவிர்த்துக்கொண்டால், அவர்கள் உண்ணாவிரதமிருப்பதாகவே கருதப்படுவர்.

அவர்கள் தொடர்பாக உடனடியாக குடிவரவு அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும்.

இந்தச் செய்தி குடிவரவு அமைச்சுக்குப் போனால், முகாமிலுள்ள வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து, குறிப்பிட்ட அகதியைச் சிறப்புச் சந்திப்புக்கு அழைத்து, காரணத்தைக் கேட்பார்கள். அநேகமாக, இவ்வாறு சாப்பாட்டைத் தவிர்ப்பவர்கள், தங்களது நீண்டநாள் தடுப்பு முகாம் வாழ்க்கைக்கு எதிரான – அதனால் ஏற்பட்ட விரக்தியை - காரணமாகக் கூறுவார்கள். இன்னும் பலர், தங்களுக்கு விசா கிடைக்கும்வரைக்கும் சாப்பிட மாட்டோம் என்று கூறுவார்கள்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

இப்படியான காரணங்களுக்கெல்லாம், குடிவரவு அமைச்சு உருட்டிப் பிரட்டி ஏதாவது ஒரு பதில் காரணத்தைச் சொல்லி சமாளித்துவிடுவார்கள். அடுத்த சந்தியில் விசா காத்துக்கொண்டிருப்பதைப்போலவும், அதை எப்படியாவது தாங்கள் போய் அழைத்து வந்துவிடுவதைப்போலவும் சத்தியம் கொடுத்து, சம்பந்தப்பட்ட அகதிக்கு அலுவலகத்தில் வைத்தே சிரித்துப் பேசி சாப்பாட்டை ஊட்டி அனுப்பிவிடுவார்கள்.

ஆனால், சில வேளைகளில் முகாம் உணவறையில் சாப்பாடு சரியில்லை என்று, யாராவது அகதி மூன்று வேளை சாப்பிடாமல் இருந்துவிட்டால், எங்களது தலைகள் உருளும். முகாமுக்கான பாதுகாப்பு அமைப்பு என்ற கோதாவில், குடிவரவு அமைச்சு எங்களை அழைத்துவைத்து, விரிவான சமையல் விசாரணையொன்றை நடத்த ஆரம்பிக்கும். அதுதான், மரண வேதனையாக இருக்கும். முகாம் உணவறையில் கடந்த மூன்று நாள்களாகக் கொடுத்த சாப்பாடுகள் என்னென்ன... அவற்றை விரும்பிச் சாப்பிட்டவர்கள் யார்... முகம் சுளித்தவர்கள் யார்... அதைச் சாப்பிட்ட யாருக்காவது வயிற்றுப் பிரச்னை ஏற்பட்டதா, வாய்வுப் பிரச்னை ஏற்பட்டதா என்று பட்டியல்போட்டு, படாதபாடு படுத்துவார்கள்.

இதற்காகவே முகாமில் தினமும் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படும். முகாமிலுள்ளவர்களின் படங்களுடன்கூடிய பட்டியல், முகாம் உணவு மண்டப வாசலில் அதிகாரிகளிடமிருக்கும். மூன்று வேளையும் சாப்பாட்டுக்காக உணவு மண்டபம் திறக்கப்படுகிறபோது, அங்கு சாப்பிட வருபவர்கள் அனைவரும், அவர்களின் பெயருக்கு முன்னால் `டிக்’ செய்யப்படுவார்கள். உணவு மண்டபத்துக்கு வராதவர்கள், அவர்களது அறைகளுக்கோ அல்லது முகாமின் எந்த மூலையிலிருந்தாலோ சென்று சாப்பாட்டு விசாரணை செய்யப்படுவார்கள். பிரதான உணவை உட்கொள்ளாவிட்டாலும், பாணோ, பழமோ சாப்பாட்டிருந்தால் எமது வேலை சுலபமாக முடிந்துவிடும்.

இல்லையென்றால், அடுத்த நாள் குடிவரவு அமைச்சு அலுவலகத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, சரியான பதில்களோடு போக வேண்டும். யாரோ உண்ணாவிரதமிருந்தாலும், உருட்டப்படுபவர்கள் முகாமின் பாதுகாப்பு அதிகாரிகளாகிய நாங்களாகவே முன்னிலைப்படுத்தப்படுவோம். குடிவரவு அமைச்சைப் பொறுத்தவரை, தாங்கள் விசா கொடுக்காமல் அகதிகளை முகாமில் தடுத்துவைத்திருந்தாலும், முகாமில் அகதிகளின் நடவடிக்கையில் என்ன மாற்றம் தெரிந்தாலும், அதற்கு பாதுகாப்புக் கொடுக்கும் நாங்களே பொறுப்பு என்ற தோரணையில் எங்களைச் சலவை செய்து எடுப்பார்கள். அது அவர்களுக்கு ஒரு சடங்காகிப்போனது.

வெள்ளிக்கிழமைகளில், முகாமிலிருந்த சில தமிழர்கள் காலையில் சாப்பிட மாட்டார்கள். விரதமிருப்பார்கள். தங்களது ஊர்க் கோயில் கடவுள்களை நினைத்து, இங்கு வேண்டுதல்கள் செய்தார்கள். வெளியிலிருந்து தங்களைப் பார்க்க வந்து போகும் விருந்தினர்களிடம், மெல்போர்ன் கோயிலில் அர்ச்சனை செய்யச் சொன்னார்கள். சிலர் ஊரிலுள்ள கோயிலில் பொங்குவதற்கும், அன்னதானம் கொடுப்பதற்கும்கூட ஏற்பாடு செய்தார்கள். எப்படியாவது, தங்களது குலதெய்வம், ஆஸ்திரேலியாவில் ஒரு விசா எடுத்துத் தந்துவிடும் என்று உருக்கமான நம்பினார்கள்.

இப்படிப்பட்ட பக்தியான அகதிகள், வெள்ளி காலையில் சாப்பிடாவிட்டாலும் மதியம் சாப்பிடுகிறார்களா என்பதைக் கலைத்துப் பிடித்துக் கேட்டு உறுதி செய்துகொள்வதில், அதிகாரிகளுக்கு நாக்குத் தள்ளிவிடும். என்னோடு தமிழ் அகதிகளுக்கு மொழிப் பிரச்னை இருந்ததில்லை. ஆக, அவர்கள் விரதமிருக்கப்போகிறார்கள் என்றால், அதற்கு முன்னமே என்னிடம் சொல்லிவிடுகின்ற வழக்கத்தைக்கொண்டிருந்தார்கள்.

குடிவரவு அமைச்சு இவ்வாறு அச்சப்படுவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

முகாமில் அகதிகள் உண்ணாவிரதமிருந்தால், வெளியிலுள்ள அகதிகள் நல அமைப்புகள் சும்மா இருந்துவிடப்போவதில்லை.

உடனடியாக, அந்த விடயத்தை ஊடகங்களின் கண்களுக்குக் கொண்டுபோவார்கள். ஆஸ்திரேலியாவின் இடதுசாரி ஊடகங்கள், இந்த விடயத்தை முட்டையை உடைத்து சட்டியில் போட்ட மாதிரி, முன்பக்கத்திலேயே போட்டுச் சாத்துவார்கள். தஞ்சமடைந்த அகதிகள் மேலும் தங்களை வருத்திக்கொள்ளுமளவுக்கு ஆஸ்திரேலிய அரசு கொடுமை செய்கிறது என்று ஊடகங்களில் மெல்லிதாகத் தெறிக்கும் செய்தி, நிலமை மோசமானால், மனித உரிமைகள் ஆணையம், சர்வதேச மன்னிப்புச்சபை ஊடாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம்வரைகூடப் பயணம் போகும்.

இந்தப் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே களைந்துவிடுவதற்காக குடிவரவு அமைச்சின் அலுவலகம் தன்னாலான சகலத்தையும் செய்தது.

அன்று காலையும், நீதன் விவகாரத்துக்கு முன்னதாக, வழக்கமான சாப்பாட்டு விவகாரம் விசாரிக்கப்பட்டது. `சார்ளி’ கம்பவுண்டில் முதல்நாள் சாப்பிடாத இரண்டு பெண்கள் தொடர்பாகவும் சரியான பதில் கொடுக்கப்பட்டதும், திருப்தியான அதிகாரிகள் அடுத்த விடயத்துக்கு நகர்ந்தார்கள்.

``நீதனின் மனைவிக்கு இரண்டாவது குழந்தை கிடைத்திருக்கிறது.”

நேரடியாகவே போட்டு உடைத்தார் குடிவரவு அமைச்சின் அதிகாரி.

எனக்கு நீதனின் சிரித்த முகம் பளீரென்று கண்முன்னால் வந்து போனது. அதிகாரிகள் - அகதிகள் என்ற எல்லை வரையறை எனக்குள் எவ்வளவுதான் கதியால் போட முயன்றாலும்,

இனமும் மொழியும் ஒன்றென்ற எண்ணம் என்னை மீறி, எப்போதும் தமிழ் அகதிகளை நோக்கி உந்தியபடியே இருந்தது.

ஓன்றரை மாதமாகியும் நீதனுக்கு முகாம் தொலைபேசியைப் பயன்படுத்துவதற்கான அனுமதி இன்னமும் வழங்கப்படாத நிலையில், அவனுக்குக் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை நான்தான் சொல்லவேண்டியிருந்தது. அதில் என் அகம் குளிர்ந்திருந்தது. எப்போதும் துயரத்தோடு அலையும் அகதிகளுக்கு, முகாமில் ஏதாவது நல்ல செய்தியைச் சொல்லி, அவர்களின் மனதையும் முகத்தையும் குதூகலமாகப் பார்ப்பதற்குத்தான் எல்லா அதிகாரிகளும் விரும்புவார்கள். ஆனால், அதற்கான சந்தர்ப்பம் எப்போதாவது ஒருநாள்தான் வாய்க்கிறது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

குயிலனின் குடும்பத்தில் குழந்தையைப் பறித்த அகதியின் விதி, நீதனின் குடும்பத்துக்குப் புதிய குழந்தையைக் கொடுத்த செய்தியைக் கொடுத்து அனுப்பியிருக்கிறது. இந்த முகாம் இப்படித்தான் ஒவ்வொரு நாளும் விசித்திரங்களைப் பிரசவிக்கிறது. வித்தியாசங்களால் அகதிகளைப் புரட்டியெடுக்கிறது. இதனால், அகதிகள் மாத்திரமல்ல, நாங்களும்கூட, எண்கோணங்களாக குழம்பி நிற்பது இங்கு வாடிக்கையாகிப்போனது.

இந்த முகாம் இன்னும் சிறிது நேரத்தில் மகிழ்ச்சியால் பொங்கி வழியப்போவதை நான் மனதுக்குள் கணக்கிட்டபடியிருந்தபோது, குடிவரவு அமைச்சின் அதிகாரி, நீதனின் கோப்பைப் புரட்டிக்கொண்டு, இன்னொரு விடயத்தையும் பேசுவதற்கு ஆயத்தமானார்.

``நீதன் சிறிலங்காவில் தற்கொலைக்குண்டு தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர். அவரை விசாரிப்பதற்கு ஆஸ்திரேலிய தேசியப் புலனாய்வுத்துறையினர் இன்று இங்கு வரவிருந்தார்கள். ஆனால், நீதனுக்குக் குழந்தை கிடைத்த செய்தியை அடுத்து, அவர்கள் அடுத்த வாரம் வருவதாக, சந்திப்புத் திகதியைப் பிற்போட்டிருக்கிறார்கள்.”

எனக்குள் எரிமலையொன்று தலைகீழாக வெடித்து ஊற்றுவதைப்போலிருந்தது.

அலுவலகத்தை நோக்கி நடந்தேன். நீதனுக்குக் குழந்தை கிடைத்த செய்தியைச் சொல்ல வேண்டும் என்று அவசரப்பட்டுக்கொண்டிருந்த என் கால்கள், இப்போது எடையிழந்துபோயிருப்பதை உணர்ந்தேன். நீதனின் முகத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்ற குழப்பம், எனக்குள் குளம்படிகளாக இதயத்தில் கேட்டுக்கொண்டிருந்தன. உள்ளே சொல்ல முடியாத கொடிய செய்தியை வைத்துக்கொண்டு வெளியே இனிப்பானதொரு செய்தியைச் சொல்லிச் சிரிப்பது எப்படி என்பதற்கு வாழ்வில் நான் எப்போதும் பயிற்சி எடுத்ததில்லை. அனுபவமும் இருந்ததில்லை.

அலுவலக வாசலுக்குப் போனபோது, நீல நிற ரீ சேர்ட்டில் ஜிம்முக்குப் போய்விட்டு, `அல்பா’ கம்பவுண்டு வெளிவிறாந்தையில் நின்று தேநீர் குடித்துக்கொண்டிருந்தான் நீதன். அவனை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்று குழம்பியபடி சென்றுகொண்டிருந்த என்னை, சொல்லிவைத்தாற்போல எதிர்கொணடான்.

``அண்ணே, கொஞ்சம் நில்லுங்கோ, ரீ போடுறன். குடிச்சிட்டுப் போங்கோ.”

எனக்கு இப்போது கால்கள் மாத்திரமல்லாமல், கைகளும் உதடுகளும் கூடவே நடுங்கத் தொடங்கின. ஸ்திரப்படுத்திக்கொண்டேன்.

அவனைத் தேநீர் போட விடுவதில்லை, அதற்கு முன்னரே அவனுக்குக் குழந்தை கிடைத்த செய்தியைச் சொல்வது என்று மனதை இறுக்கிக்கொண்டேன். கையில் வைத்திருந்த கோப்பை, விறாந்தைக்கு வெளியிலிருந்து மர இருக்கையில் வைத்துவிட்டு –

``நீதன், ரீ போட முதல் இஞ்ச வா. முக்கியமான விசயம் கதைக்கவேணும்.”

``பொறுங்க அண்ணே, ரீ போட்டுக்கொண்டு வாறன். குடிச்சுக் குடிச்சு கதைப்பம்.”

``வேண்டாம், வேண்டாம். இஞ்ச முதல்ல வா.”

அரைவாசி குடித்த தன்னுடைய தேநீரை வெளியில் ஊற்றிவிட்டு, வேகமாக வந்தான். வரும்வழியில் `அல்பா’ கம்பவுண்டுக்கு வெளியிலிருந்து குப்பைத்தொட்டிக்குள் காலியான பிளாஸ்திக் குவளையை எறிந்துவிட்டு,

``சொல்லுங்கோ அண்ணே, ஏதாவது அவசரமே...”

அவனது கண்கள் எனது கண்களுக்குள் எதையோ ஊடுருவித் தேடின. இன்னும் ஊடுருவினால், நான் மறைக்கவேண்டிய செய்தியையும் கண்டுபிடித்துவிடுவான் என்ற அச்சத்தில் -

``உனக்குக் குழந்தை பிறந்திருக்காம்.”

என் மீது தாவிக் கழுத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டான். குலுங்கி அழுதான். கையறு நிலையில் தனது குழந்தையைக்கூட காண முடியாத இந்த அகதிப்பயணத்தை நினைத்து ஏங்கிக் குழறினான்.

அவனது பிடி என்மீது இறுகிக்கிடந்தது. இயன்றளவு தளர்த்த முயன்றேன். முடியவில்லை. அவன் கண்ணீரால் எனது சட்டை நனைந்தது.
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

அல்பா கம்பவுண்டில் நின்றுகொண்டிருந்த இரண்டொரு அதிகாரிகள், எனக்கு ஏதோ பிரச்னையென்று ஓடி வந்தார்கள். நான் கையசைத்து, ஒரு சிக்கலும் இல்லை என்று அவர்களைத் தூரத்திலேயே நிறுத்திக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் தன்னை விடுவிடுத்துக்கொண்ட நீதன் -

``என்ர பிள்ளையப் பாக்கவேணும் அண்ணே...”

இந்த முகாம் எவ்வளவு விசித்திரம் வாய்ந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் செத்த குழந்தையைப் பெற்றோருக்கு எங்கிருந்தோ காண்பித்தது. இப்போது பிறந்த குழந்தையைக் காண்பிக்கப் போகிறது.

நீதனின் ஆறுதல் எனக்குள் கங்குகளாகச் சுட்டது. குழந்தையின் செய்தியால் அவன் அடைந்துகொண்டிருந்த சிறிய திருப்தியால் நான் எனக்குள் போராடிக்கொண்டிருந்தேன். அடுத்த வாரம் அவன் எதிர்கொள்ளப்போகும் செய்தியால் அடையப்போகும் துயரத்தை, இன்று நான் அனுபவிக்கவேண்டியவனாக நின்றுகொண்டிருந்தேன்.

தொடரும்..!