Published:Updated:

`திறன், ஆங்கிலம் முக்கியம்; சம்பள உச்சவரம்பு!’-குடியேற்றத்தில் அதிரடி மாற்றம் கொண்டுவந்த பிரிட்டன்

பிரிட்டன்
பிரிட்டன்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியான பிறகு தங்கள் நாட்டு குடியேற்ற விதிகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது பிரிட்டன்.

சர்வதேச அளவில் கடந்த சில வருடங்களாகவே அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக இருப்பது, பிரெக்ஸிட் ஒப்பந்தம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிவதைக் குறிப்பதே பிரெக்ஸிட் (Brexit - British Exit). இது தொடர்பாக பிரிட்டிஷ் மக்களிடம் நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் 50%-க்கும் அதிகமானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இதையடுத்து, பிப்ரவரி 1-ம் தேதி லண்டன் நேரப்படி இரவு 11 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் உறுப்பினராக இருந்துவந்த பிரிட்டன் விலகியது. இது பெரும் வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

பிரெக்ஸிட்
பிரெக்ஸிட்

பிரெக்ஸிட்டுக்குப் பிறகு பிரிட்டன் தங்கள் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரும் என்று கூறப்பட்ட நிலையில் அதன் முதல்கட்டமாகக் குடியேற்ற விதிகளில் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. பல தசாப்தங்களில் முதன்முறையாகப் பிரிட்டன் எல்லையை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது அந்நாட்டு அரசு. எனவே, திறமையற்ற தொழிலாளர்கள் மற்றும் ஆங்கிலம் பேசத் தெரியாதவர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது என்று நேற்று பிரிட்டன் அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பிரிட்டனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம்.... இந்தியாவில் பெட்ரோல், டீசல், தங்கம் விலை உயருமா?!

மேலும், குறைந்த சம்பளத்தில் ஐரோப்பியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்திவிட்டு இருக்கும் தொழிலாளர்களின் திறனை அதிகரிக்கத் தொழில் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களும் பிற நாட்டு மக்களும் இனிமேல் சரிசமமாக நடத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு வந்து வேலை செய்ய விரும்புபவர்களுக்குச் சம்பள உச்சவரம்பு 25,600 பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ. 23,70,171) மட்டுமே இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தச் சம்பளம் 30,000 பவுண்ட்களாக இருந்தது. அதுவே நர்ஸிங் போன்ற பணிகளுக்கு 20,500 பவுண்ட் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பிரெக்ஸிட்
பிரெக்ஸிட்

இனி பிரிட்டன் சென்று யாரும் சுயமாக வேலை செய்ய முடியாது. எடுத்துக்காட்டாக, போலந்து பிளம்பர்ஸ் அல்லது ருமேனிய பில்டர்கள் ஆகியோர் இனி தனியாக வேலை செய்யமுடியாது. போட்டிகள், விளையாட்டு, பொழுதுபோக்கு, இசைக்கலைஞர்கள், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருபவர்களின் விசா போன்ற ஆவணங்களை இனி அந்நாட்டு அரசு தக்கவைத்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு விதித்துள்ள இந்தப் புதிய கட்டுப்பாடுகளால் வெளிநாட்டிலிருந்து அங்கு வேலைக்குச் செல்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி கொண்டுவந்துள்ள இந்த நடைமுறைகளுக்குத் தொழிற்கட்சி மற்றும் லிபரல் ஜனநாயக் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு