Published:Updated:

`ராமனும் சீதையும் ராவணனை வென்றதுபோல் கொரோனாவை வெல்வோம்!’ - இங்கிலாந்து பிரதமரின் தீபாவளி வாழ்த்து

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன் ( Eddie Mulholland /The Daily Telegraph )

`ராவணன் என்ற அரக்கனின் தோல்விக்குப் பிறகு பகவான் ராமனும், அவருடைய மனைவி சீதாவும் பல மில்லியன் விளக்குகள் மிளிர்ந்த வழியில் வீடு திரும்பியதைப்போலவே, நாமும் கொரோனாவை வெல்லும் வழியைக் கண்டுபிடிப்போம்.’

``ராவணன் என்ற அரக்கனின் தோல்விக்குப் பிறகு பகவான் ராமனும், அவரின் மனைவி சீதாவும் பல மில்லியன் விளக்குகளால் எரியூட்டப்பட்ட வழியில் வீடு திரும்பியதைப்போலவே, நாமும் கொரோனாவை வெல்வதற்கான வழியைக் கண்டுபிடித்து, அதை வெற்றிகரமாகச் செய்வோம்" என்று போரிஸ் ஜான்சன் கூறினார்.

உலகெங்கிலும் நவம்பர் 14-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சமூக விலகலோடு பண்டிகை தினத்தைக் கொண்டாடுவது கடினமாக இருந்தாலும், இது போன்ற காலங்களில் விரைவாக நோய் பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அரசுகள் அறிவுறுத்தியிருக்கின்றன.

இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்று நாள் மெய்நிகர் தீபாவளிக் கொண்டாட்டத்தில் ( `IGlobal Diwali Fest 2020’) கலந்துகொண்டு பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இந்தநிகழ்வில் இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் பிரித்தி படேல் (Priti Patel), எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் (keir starmer) மற்றும் லிபரல் டெமக்ராட் (Liberal Democrat) தலைவர் எட் டேவி (Ed davey) ஆகியோருடன் அமர்வுகளும் இடம்பெறும்.

மூன்று நாள் கொண்டாட்டத்துக்கானநிகழ்ச்சி நிரலில் யோகா, இசை, நடன நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிரிட்டிஷ் இந்தியச் சமூகத்தின் சாதனையாளர்களை கௌரவித்து, விருது வழங்கும் விழாவும் இடம்பெற்றிருக்கிறது. கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) மற்றும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் மேயர் ஆண்டி ஸ்ட்ரீட் (Andy Street) உள்ளிட்ட பலரும் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு தீபாவளி வாழ்த்து செய்திகளை வழங்கினார்கள்.

தீபாவளி
தீபாவளி

வாழும் கலை (Art of Living) நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ஆன்மிக அமர்வு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பூஜைகள் மற்றும் பிரிட்டிஷ் இந்திய இசைக்கலைஞர் நவின் குந்த்ரா தலைமையிலான பாலிவுட் இசை நிகழ்ச்சி உள்ளிட்டவையும் வார இறுதியில் ஆன்லைனில் நடைபெற்றன.

`ஊதியம் போதவில்லை!' - பதவி விலகுகிறாரா பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்?

மூன்று நாள் தீபாவளிக் கொண்டாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா வைரஸ் தொற்றுநோயைச் சமாளிப்பது குறித்து நம்பிக்கையான வாழ்த்து செய்தியை வழங்கியதோடு, ``தீபாவளி திருவிழா இருட்டுக்கு எதிரான ஒளியின் வெற்றி’’ என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ``நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதைத் தடுப்பதற்காக, இரண்டாவது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இது, டிசம்பர் 2-ம் தேதி வரை நீடிக்கும். இது ஒரு பெரிய கூட்டு முயற்சி.

சந்தேகத்துக்கு இடமின்றி பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. இந்த கொரோனா வைரஸ் காலத்தை நாம் ஒன்றுகூடிக் கடப்போம். இருளை வீழ்த்தி ஒளி வெற்றி பெறுகிறது என்பதை தீபாவளி நமக்கு கற்பிப்பதைப்போலவே நாமும் கொரோனாவை வெல்வோம்.

ராவணன் என்ற அரக்கனின் தோல்விக்குப் பிறகு பகவான் ராமனும், அவரின் மனைவி சீதாவும் பல மில்லியன் விளக்குகள் மிளிர்ந்த வழியில் வீடு திரும்பியதைப்போலவே, நாமும் கொரோனாவை வெல்லும் வழியைக் கண்டுபிடிப்போம், வெற்றிகரமாக வென்றும் காட்டுவோம்" என்று போரிஸ் ஜான்சன் கூறினார்.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மக்கள் இந்த ஆண்டு சிரமப்படுவார்கள் என்பதை ஒப்புக்கொண்ட ஜான்சன், இங்கிலாந்திலுள்ள இந்தியச் சமூகம் பாதுகாப்பான தீபாவளிக் கொண்டாட்டத்துக்காக எடுத்திருக்கும் முயற்சிகளையும் பாராட்டினார். மக்கள் பாதுகாப்பாக இருக்க உதவும் வகையில் தீபாவளியின் உணர்வை மக்கள் வீடுகளுக்குள் கொண்டு வந்ததற்காக `மெய்நிகர் தீபாவளித் திருவிழா’ குறித்தும் அவர் பாராட்டினார்.

மக்களிடம் பேசிய போரிஸ் ஜான்சன்,``உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் நீங்கள் சந்திக்க விரும்பும்போது அல்லது உங்கள் நண்பர்களைப் பார்த்து தீபாவளி சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பும்போது தூரத்திலிருந்து கொண்டாடுவது எளிதல்ல என்பதை நான் அறிவேன்.

ஆகவே, உங்கள் தியாகங்களும், சரியானதைச் செய்வதற்கான உங்கள் உறுதியும் உண்மையில் உயிர்களைக் காப்பாற்ற உதவுகின்றன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறேன்” என்றார்.

ஆன்லைனில் நடைபெறும் தீபாவளிக் கொண்டாட்டம் குறித்து பிரிட்டனிலிருந்து செயல்படும் இந்தியா இன்க் (India inc) குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் லாட்வா கூறுகையில், ``பிரதமர், முக்கிய இங்கிலாந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாட்டின் முக்கிய பெருநகரங்களின் மேயர்கள் புதுவிதமாக ஆன்லைன் வழியில் தீபாவளிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது இதுவே முதன்முறை. இது இங்கிலாந்து-இந்தியா உறவின் உண்மையான ஆழத்தைப் பிரதிபலிக்கிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு