Published:Updated:

`காதல், ரகசிய குடும்ப வாழ்க்கை, திடீர் திருமணம்!' - போரிஸ் ஜான்சனின் பர்சனல் பக்கங்கள்

Boris Johnson with his partner Carrie Symonds
Boris Johnson with his partner Carrie Symonds ( AP Photo/Matt Dunham, File )

கடந்த சனிக்கிழமை, தன் காதலியை ரகசிய திருமணம் செய்துகொண்டார் போரிஸ். அந்தச் செய்தி, தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வல்லரசு நாடுகளில் மிக முக்கியமான நாடு என்பதால், இங்கிலாந்து பிரதமர்மீது உலக மீடியாக்களின் பார்வை எப்போதும் குவிந்திருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை விஷயத்தில், தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளார் அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன். கடந்த சனிக்கிழமை, தன் காதலியை ரகசிய திருமணம் செய்துகொண்டார் போரிஸ். அந்தச் செய்தி, தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Britain's Prime Minister Boris Johnson and his partner Carrie Symonds
Britain's Prime Minister Boris Johnson and his partner Carrie Symonds
AP Photo/Matt Dunham, File

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் `பிரெக்ஸிட்' ஒப்பந்தம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தம், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மூன்று முறை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், தெரசா மே தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், கடந்த 2019-ல் அந்த நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து பகுதிகளை உள்ளடக்கிய கிரேட் பிரிட்டனின் புதிய பிரதமராகத் தேர்வானார் போரிஸ் ஜான்சன்.

அதற்கு முன்பே, இரண்டு திருமணங்கள் செய்து, அவற்றில் விவாகரத்து பெற்றுள்ளார் ஜான்சன். இதற்கிடையே, போரிஸின் கன்சர்வேட்டிவ் கட்சியில், 2010-ல் தகவல் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார் கேரி சைமண்ட்ஸ். அப்போதுதான் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. லண்டன் மேயர் தேர்தல் போட்டியிட்டபோது, ஜான்சனின் பிரசார பணிகளிலும் பணியாற்றினார் கேரி.

Britain's Prime Minister Boris Johnson and his partner Carrie Symonds
Britain's Prime Minister Boris Johnson and his partner Carrie Symonds
AP Photo/Kirsty Wigglesworth, File

இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, 2018-ம் ஆண்டு முதல் இணைந்து வாழ்ந்தனர். இந்த நிலையில், காதலர்களான தாங்கள் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு முறையில் இருப்பதாகவும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தங்கள் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாகவும் கேரி கூறியது, தலைப்புச் செய்தியானது.

இவர்களுக்குக் கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர், தாங்கள் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக இருவரும் முறைப்படி தெரிவித்தனர். இவர்கள் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களுமே, இங்கிலாந்து மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்திலும் ட்ரெண்டிங் ஆயின. ``விரைவில் இவர்களுக்குத் திருமணம் நடைபெறக்கூடும்" என்ற பேச்சுகள் தொடர்ந்து ஒலித்தன. அதற்குக் கடந்த சனிக்கிழமை முற்றுப்புள்ளி கிடைத்தது. ஊடகங்களுக்குத் தெரியாத வகையில், இவர்களின் திருமணம் சனிக்கிழமை மிக ரகசியமாக நடைபெற்றுள்ளது.

Britain's Prime Minister Boris Johnson and Carrie Johnson
Britain's Prime Minister Boris Johnson and Carrie Johnson
Rebecca Fulton/Downing Street

அந்த நாட்டில் அமலில் இருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள்படி, 30 பேருக்கு மட்டுமே திருமண விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அதுவும் ரகசியமாகச் செய்யப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில், மதியம் நடந்த இந்தத் திருமணம், சிறிய விழாவாக எளிமையான முறையில் நடைபெற்றது.

பிரதமர் அலுவலக முக்கிய அதிகாரிகளுக்குக்கூட இந்தத் திருமணம் குறித்த செய்திகள் அறிவிக்கப்படவில்லை. போரிஸ் ஜான்சனுக்குத் திருமணமான செய்தி, அடுத்த நாளே உலகம் முழுக்கப் பரவியது. இந்தச் செய்தி, அந்த நாட்டு மக்கள் மட்டுமன்றி, பிரதமர் அலுவலக அதிகாரிகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், பிரதமர் அலுவலகம் இந்தத் திருமணம் குறித்த செய்தியை முறைப்படி அறிவித்தது.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சனுக்கு வயது 56. கேரிக்கு வயது 33. கேரிக்கு இது முதல் திருமணம். சுற்றுச்சூழல் சார்ந்த வழக்கறிஞரான கேரி, தற்போது கடல் பாதுகாப்புத் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். கடந்த 200 ஆண்டுக்கால வரலாற்றில், அந்த நாட்டில் பதவியில் இருக்கும்போது திருமணம் செய்துகொண்ட ஒரே பிரதமர் போரிஸ் மட்டுமே. இதனாலும், அவரது திருமணம் உலக அளவில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் இந்தத் தம்பதியருக்குப் பல்வேறு நாட்டினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு