Published:Updated:

ஆப்கனிலிருந்து உக்ரைன் கிளம்பிய மீட்பு விமானம் கடத்தப்பட்டதா?

மாதிரி படம்
மாதிரி படம்

உக்ரைன் விமானம் இரானுக்குக் கடத்தப்பட்டது என உக்ரைன் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் எவ்ஜெனி யெனின் தெரிவித்துள்ளார்.

இருபதாண்டுகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை, துப்பாக்கிமுனையில் கைப்பற்றினர் தாலிபன்கள். இதையடுத்து, ஆப்கனில் தங்கியிருந்த வெளிநாட்டு மக்கள் உட்பட கணிசமான ஆப்கன் மக்களும் அந்த நாட்டைவிட்டு வேகமாக வெளியேறிவருகின்றனர். வெளியேற விரும்பும் மக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் விமானங்களை ஆப்கனுக்கு அனுப்பி மீட்டுவருகின்றன.

காபூல் விமான நிலையம்
காபூல் விமான நிலையம்

அதேபோல், உக்ரைன் அரசாங்கமும் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த தன் நாட்டு மக்களை மீட்பதற்காக, ஒரு விமானத்தை ஆப்கனுக்கு அனுப்பியது. ஆப்கானிஸ்தான் வந்தடைந்த உக்ரைன் விமானம், தலைநகர் காபூல் விமான நிலையத்திலிருந்த மக்களை ஏற்றிக்கொண்டு தாயகம் திரும்பியது.

ஆனால், அந்த விமானம் உக்ரைன் நாட்டைச் சென்றடையவில்லை. இந்தநிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் எவ்ஜெனி யெனின் ``கடந்த ஞாயிற்றுக்கிழமை, எங்கள் விமானம் சிலரால் கடத்தப்பட்டது. அது உக்ரைன் மக்களை ஏற்றுவதற்கு பதிலாக அடையாளம் தெரியாத வேறு பயணிகளை ஏற்றிக்கொண்டு இரான் நாட்டுக்குப் பறந்திருக்கிறது. எங்களின் அடுத்த மூன்று வெளியேற்ற முயற்சிகள்கூட பலனளிக்கவில்லை, ஏனென்றால், எங்கள் மக்களால் விமான நிலையத்துக்குள்ளேயே செல்ல முடியவில்லை!" என ரஷ்யன் நியூஸ் ஏஜென்சிக்குப் பேட்டியளித்தார்.

காபூல்
காபூல்
ஆப்கன்: `மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு வந்துள்ளேன்!' -தாலிபன் பிடியிலிருந்து இந்தியா வந்த இளைஞர்

ஆனால், இரான் தரப்பு இதைத் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து பதிலளித்த இரானிய சிவில் விமான அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகம்மது ஹசன் ``வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்தச் சம்பவம் நடந்தது நேற்றைய தினம். உக்ரைன் விமானம், எரிவாயு (Refueling) நிரப்புதற்காகவே இரானின் மஸ்காட் (Mashhad) நகரத்துக்கு வந்தது. எரிவாயு நிரப்பிய பின்னர், உடனடியாக உக்ரைன் தலைநகர் கீயிவ்-க்கு (Kyiv) புறப்பட்டுச் சென்றது. எனவே, விமானம் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இரான் இல்லை" என ஐ.எல்.என்.ஏ செய்தி ஊடகத்துக்கு பதிலளித்துள்ளார்.

இருப்பினும், உக்ரைன் விமானம் கடத்தப்பட்டது தொடர்பான முழு விவரம் இன்னும் வெளிவரவில்லை. அப்படி ஒருவேளை கடத்தப்பட்டிருந்தால், அதை யார் செய்திருப்பார்கள், என்ன காரணம் என்பது குறித்தான எந்தத் தகவலும் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

அடுத்த கட்டுரைக்கு