ரஷ்யா - உக்ரைன் விவகாரம் உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ள நிலையில், ரஷ்யா தொடர்ந்து உக்ரைனுக்குள் ஊடுருவிக்கொண்டிருக்கிறது. உக்ரைனின் தென்கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மேலும் இரண்டு நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன.
இந்த நிலையில், தன்னைவிட மூன்று மடங்கு பலம்வாய்ந்த ரஷ்யாவிடம், `என்ன ஆனாலும் உக்ரைன் சரணடையாது. எதிர்த்து போராடுவோம்' எனக் கூறி குடிமக்களையும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கெடுக்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், உக்ரைன் கார்கிவ் பகுதியின் ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் ரஷ்யப் படை வீரர்கள் கார்கிவ் ஆயுதப்படையிடம் சரணடைந்ததாக சில படங்களை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ``கார்கிவில் உள்ள ஆயுதப்படையிடம் பல ரஷ்ய வீரர்கள் சரணடைந்துள்ளனர். அவர்களுக்கு மத்திய தளபதிகளுடன் எந்தத் தகவல் தொடர்பும் இல்லை. மேலும், அவர்களுக்கு உக்ரைனுக்கு எதிரான போர் தொடங்கியதிலிருந்தே சரியான உணவும் தண்ணீரும் வழங்கப்படவில்லை. அவர்கள் தாங்கள் மிகவும் சோர்வுடன் இருப்பதாக எங்களிடம் முறையிட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அவர்களின் உணவுத்தேவைக்கு ராணுவ உடைகளைக் கலைந்துவிட்டு மக்களிடம் உதவி கேட்கிறார்கள். அவர்களை ரஷ்யா கண்டுகொள்ளவில்லை.
எனவே, கார்கிவ் மக்கள் அந்நியர்கள் வந்தால் கதவைத் திறக்காதீர்கள். ஆக்கிரமிப்பாளர்கள் மறைந்துகொள்ள உதவாதீர்கள். நாம் பலமாக, ஒற்றுமையாக, நமது நிலத்தில் நிற்கிறோம், சரணடைய மாட்டோம்!" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கார்கிவ் நகரத்தை ரஷ்யப் படைகளின் ஆதிக்கத்திலிருந்து முழுமையாக மீட்டுவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.