Published:Updated:

கொதிப்பின் உச்சத்தில் ரஷ்யா: 8 மாதங்களாக உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளிக்கொடுக்கும் நாடுகள் எவை?!

ரஷ்யா - உக்ரைன் போர்
News
ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யாவை ஒப்பிடுகையில் பரப்பளவு, மக்கள்தொகை, ராணுவபலம் என அனைத்திலும் மிகச்சிறிய நாடான உக்ரைன், கடந்த எட்டு மாதங்களாக போர்க்களத்தில் ரஷ்யாவை எதிர்த்து நிற்கிறது.

கொதிப்பின் உச்சத்தில் ரஷ்யா: 8 மாதங்களாக உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளிக்கொடுக்கும் நாடுகள் எவை?!

ரஷ்யாவை ஒப்பிடுகையில் பரப்பளவு, மக்கள்தொகை, ராணுவபலம் என அனைத்திலும் மிகச்சிறிய நாடான உக்ரைன், கடந்த எட்டு மாதங்களாக போர்க்களத்தில் ரஷ்யாவை எதிர்த்து நிற்கிறது.

Published:Updated:
ரஷ்யா - உக்ரைன் போர்
News
ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யாவை விட பரப்பளவு, மக்கள்தொகை, ராணுவபலம் என அனைத்திலும் மிகச்சிறிய நாடான உக்ரைன், கடந்த எட்டு மாதங்களாக போர்க்களத்தில் ரஷ்யாவை எதிர்த்து நிற்கிறது. அது மட்டுமல்லாமல், அவ்வப்போது ரஷ்யப் படையினரைப் பின்வாங்க வைத்தும், ரஷ்யா கைப்பற்றிய தன் நாட்டின் பகுதிகளை மீட்டெடுத்தும் வருகிறது. இது எப்படி சாத்தியம்?

ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைனின் பதிலடித் தாக்குதலுக்கு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஜி-7 கூட்டமைப்பு போன்ற நாடுகள் உக்ரைனுக்குப் பக்கபலமாக நிற்பதுதான் முதன்மைக் காரணம். அதிதொழில்நுட்பங்கள் நிறைந்த ஆயுத உதவிகளையும், பில்லியன் கணக்கில் நிதி உதவிகளையும் அந்த நாடுகள் உக்ரைனுக்கு வாரி வழங்குகின்றன். உக்ரைனின் நாட்டுப்பற்று ஒருபுறமிருக்க, இந்த உதவிப் பின்னணிதான் உக்ரைன் ராணுவத்தினரை மிகப்பெரிய நாடான ரஷ்யாவை எதிர்த்து நிற்பதற்கான நெஞ்சுரத்தையும் கொடுக்கிறது. அப்படிப் போர்த் தொடங்கியதிலிருந்து தற்போதுவரை உலக நாடுகள் உக்ரைனுக்கு வழங்கிய, வழங்கப்போகின்ற ராணுவ உதவிகளைப் பட்டியலிடுவோம்.

அமெரிக்கா:

ரஷ்யா - உக்ரைன் போர்த் தொடங்கியது முதல் தற்போது வரை தொடர்ச்சியாக உக்ரைனுக்கு பல்வேறு உதவிகளை செய்துவரும் நாடு அமெரிக்கா. முதல் முறையிலேயே, உக்ரைனுக்கு சுமார் 350 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவத் தளவாடங்களை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார். அதன்பின்னர் ஏப்ரலில், அமெரிக்க நிதி அமைச்சகம் 500 மில்லியன் டாலர் நிதி உதவியை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்தது. தொடர்ந்து, ஜூலையில், உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கத் தரப்பு செய்தது. தொடர்ந்து, உக்ரைனுக்கு 15 ஸ்கேன் ஈகிள் கண்காணிப்பு டிரோன்கள், 40 கண்ணிவெடி அகற்றும் வாகனங்கள், 2000 பீரங்கி எதிர்ப்பு குண்டுகள், ஹோவிட்சர் பீரங்கிகள் என 77.5 கோடி டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை உக்ரைனுக்கு வழங்க முடிவெடுத்தது.

உக்ரைன் - ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யா

அதனுடன் சேர்த்து, பீரங்கிகளை தாக்கி அழிக்கும் 1,500 ஏவுகணைகள், 1,000 ஜாவ்லின் ஏவுகணைகள், ரேடார் கருவிகளை தாக்கி அழிக்கும் `ஹார்ம்' ஏவுகணைகள் என 1000 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாகவும் ஜோ பைடன் அரசு தெரிவித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,326 கோடி ராணுவ உதவி வழங்கவிருப்பதாக அமெரிக்கா ஒப்புதல் அளித்தது. தொடர்ந்த கடந்த செப்டம்பரில் 600 மில்லியன் டாலர் (ரூ. 4,790 கோடி) மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள், ஆயுத உதவிகள், வெடிமருந்துகள், பீரங்கிகள் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா 15 பில்லியன் டாலருக்கும் அதிகமான ராணுவ உதவிகளை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம்:

உக்ரைன் நாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் தொடர்ச்சியாக உதவிசெய்து வருகிறது. கடந்த மார்ச் மாதம், உக்ரைனுக்கு 300 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்கியிருப்பதாக ஐரோப்பிய யூனியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து, உக்ரைன் 450 மில்லியன் யூரோ மதிப்புள்ள ஆயுதங்களை வாங்குவதற்கும் விநியோகிப்பதற்கும் நிதியுதவி செய்தது. கடந்த செப்டம்பரில் நடந்த கூட்டத்தில், கூடுதலாக 9 பில்லியன் யூரோக்களை ராணுவம் அல்லாத நிதியுதவியாக உக்ரைனுக்கு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டிருக்கிறது.

ஜி7 நாடுகள்:

ஜி7 நாடுகளின் கூட்டமைப்பானது, 18.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ. 1.4 லட்சம் கோடி) நிதி உதவியாக உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறது.

இங்கிலாந்து:

இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் இருந்தபோது, உக்ரைனுக்கு 375 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய்) மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கினார். மேலும், உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் பவுண்ட் நிதி உதவி அளிக்கப்படும் என்றார். இதுவரையில், இங்கிலாந்து உக்ரைனுக்கு சுமார் 2.3 பில்லியன் பவுண்ட் நிதி உதவி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜி-7 நாடுகள்
ஜி-7 நாடுகள்

ஸ்வீடன்:

போர்த்தொடங்கியபோது, முதல்முறையாக உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவ உதவிவழங்கிய முதல் நாடு என்றப் பெயரை ஸ்வீடன் பெற்றிருக்கிறது. தொடர்ந்து ஸ்வீடன் அரசாங்கம் உக்ரைனுக்கு, தொழில்நுட்ப உதவியையும், ராணுவ ரீதியலான உதவியையும் செய்துவருகிறது.

பின்லாந்து:

பின்லாந்தும் உக்ரைனுக்கு 2,500 துப்பாக்கிகள், 1,50,000 துப்பாக்கி குண்டுகள், 1,500 பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், 70,000 உணவுப்பொட்டலங்கள் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டது.

ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர்

நெதர்லாந்து:

நெதர்லாந்து ராணுவ அமைச்சகம் உக்ரைனுக்கு 50 டாங்கி எதிர்ப்பு கருவிகளையும், 400 ஏவுகணைகளையும், 200 ஸ்டிங்கர் வகை ராக்கெட்டுகளையும் வழங்கியது. மேலும், பதுங்குகுழிகளை கண்டறியும் தானியங்கி ரோபோக்கள், ரேடார் கருவிகள், அதிநவீன துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் ஆகியவற்றையும் நெதர்லாந்து உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறது.

ஜெர்மனி:

போர்த்தொடக்கத்திலேயே 1000 டாங்கி எதிர்ப்பு கருவிகளையும், 500 ஸ்டிங்கர் வகை ஏவுகணைகளையும் உக்ரைனுக்கு வழங்குவதாக ஜெர்மனி அறிவித்தது. மேலும், 5 ஹோவிட்சர் ரக கனரக ஆயுதங்களையும் வழங்கியது. தொடந்து, கடந்த ஜூன் மாதம் 1 பில்லியன் யூரோ நிதி உதவியை உக்ரைனுக்கு வழங்கியது. தற்போது, உக்ரைன் ராணுவம் தங்களுக்கு வான் பாதுகாப்பு கட்டமைப்பும் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதற்கிணங்க, Iris-T வான் பாதுகாப்பு கேடயம் உக்ரைனை அடையும் என ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

 உக்ரைன்
உக்ரைன்

செக் குடியரசு:

செக் குடியரசு 9.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை கப்பல் மூலம் உக்ரைனுக்கு அனுப்ப ஒப்புதல் வழங்கியது. மேலும், செக் பிரதமர் பெத்ரோ ஃபியாலா இயந்திரத் துப்பாக்கிகள், கைத்துப்பாகிகள் அவற்றுக்குத் தேவையான குண்டுகள் மற்றும் 175 படைகள் அனுப்பிவைக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

பெல்ஜியம்:

பெல்ஜியம் அரசானது, 3,000 இயந்திரத் துப்பாக்கிகள், பீரங்கியை தகர்க்க கண்ணிவெடி குண்டுகளை ஏவும் 200 லாஞ்சர்கள், 3,800 டன் எரிபொருள்களை உக்ரைனுக்கு வழங்க ஒப்புதல் அளித்தது.

ரஷ்யா - உக்ரைன்
ரஷ்யா - உக்ரைன்
ட்விட்டர்

இத்தாலி:

இத்தாலி அரசாங்கம், கடந்த பிப்ரவரி மாதமே உக்ரைனுக்கு 123 மில்லியன் டாலர் நிதியுதவியை உடனடியாக வழங்கியது.

பிரான்ஸ்:

பிரான்ஸ் அரசாங்கம், 300 மில்லியன் யூரோ மதிப்புள்ள போர் ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள் மற்றும் எரிபொருள்களை உக்ரைனுக்கு வழங்கியது. இன்னமும் வழங்கி வருகிறது.

போர்ச்சுக்கல்:

போர்ச்சுகல் அரசு, ராணுவ கவசங்கள், குண்டு துளைக்காத உடைகள், வெடிபொருள்கள் மற்றும் தானியங்கி 3ஜி துப்பாக்கிகளை உக்ரைனுக்கு வழங்கியது.

ஸ்பெயின்:

ஸ்பெயின் அரசாங்கம், உக்ரைனுக்கு ராணுவ மருந்துப் பொருள்கள், குண்டு துளைக்காத உடைகளை அனுப்பியது. தற்போது, வான் பாதுகாப்பு ஏவுகணைகள், கவச வாகனங்கள், வெடிமருந்துகள், ராணுவ ஆலோசகர்கள், எரிபொருள் மற்றும் குளிர்கால உடைகள் என கூடுதல் ராணுவ உதவிகளை வழங்கவும் ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சகம் முன்வந்திருக்கிறது.

ஜெலன்ஸ்கியுடன் உக்ரைன் வீரர்கள்
ஜெலன்ஸ்கியுடன் உக்ரைன் வீரர்கள்

ஜப்பான்:

ஜப்பான் உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தது. அதேபோல, ஜப்பான் கோடீஸ்வரரான ஹிரோஷி மிகிதானி என்பவர் உக்ரைனுக்கு 8.7 மில்லியன் டாலர் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

ரஷ்யா - உக்ரைன்
ரஷ்யா - உக்ரைன்

கனடா:

கனடா அரசாங்கம் உக்ரைனுக்கு 398 மில்லியன் டாலர் கடனுதவியாக வழங்கியது. அதுமட்டுமல்லாமல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைனுக்கு 3.85 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கினார். மேலும், 7.8 மில்லியன் டாலர் மதிப்புள்ள சக்தி வாய்ந்த ஆயுதங்கள், வெடிமருந்துகளையும் கனடா உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறது.

இந்த நாடுகள் தவிர, டென்மார்க், நார்வே, பல்கேரியா, போலந்து, ஸ்லோவாக்கியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் உக்ரைனுக்கு ராணுவ மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது.

உலக வங்கி:

உலக வங்கியைப் பொறுத்தவரை, கடந்த மார்ச் மாதத்தில் உக்ரைனின் பொருளாதார அவசர நிலையை மீட்பதற்காக சுமார் 723 மில்லியன் டாலர் கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்தது. அக்டோபரில் உக்ரைனுக்கு வழங்கப்பட இருந்த 13 பில்லியன் டாலர்களில் 11 பில்லியன் டாலர்கள் முழுமையாக வழங்கப்பட்டிருப்பதாக உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. மேலும் கூடுதலாக 530 மில்லியன் டாலர்கள் கூடுதலாக வழங்குவதாக அறிவித்திருக்கிறது.

உலக வங்கி
உலக வங்கி

ராணுவத்தை வலிமையாக்க அதிதொழில்நுட்ப ஆயுத உதவிகள், காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ உதவிகள், சிதைக்கப்படும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நிதியுதவிகள், கடனுதவிகள் என உலக நாடுகள் உடனுக்குடன் உக்ரைனுக்கு வாரிவழங்கும் உதவிகள்தான், போர்க்களத்தில் ரஷ்யாவிடம் மல்லுக்கட்டும் வலிமையை அளித்திருக்கிறது என்கிறார்கள்.