உக்ரைன் ரஷ்யா இடையே இன்னும் யுத்தம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், இதுவரை 902 பொதுமக்கள், 112 குழந்தைகள் போரால் உயிரிழந்திருப்பதாக 10 மில்லியன் உக்ரேனிய பொதுமக்கள் தங்கள் நாட்டை விட்டு அகதிகளாக வெளியாகியிருப்பதாகவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பல நாடுகளிடம் உதவி கேட்டுவரும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி காணொலி காட்சி மூலம் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அதில் பேசிய அவர், ``உக்ரைனுக்கு இஸ்ரேலின் `அயர்ன் டோம் ஏவுகணை' பாதுகாப்பு அமைப்பை விற்க இஸ்ரேல் ஏன் தயக்கம் கொள்கிறது.

உங்கள் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் சிறந்தவை என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் நீங்கள் நிச்சயமாக எங்கள் மக்களுக்கு உதவ முடியும். உக்ரேனியர்கள், உக்ரேனிய யூதர்களின் உயிரை உங்களால் காப்பாற்ற முடியும். இப்போது இஸ்ரேல் தனது முடிவை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று யூத பாரம்பர்யத்தைச் சேர்ந்த ஜெலென்ஸ்கி பேசினார்.
இஸ்ரேலிய மக்கள் உக்ரைன் அதிபர் பேசும்போது உக்ரைன் நாட்டுக் கொடியை அசைத்து உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் உக்ரைன் தொடர்பாக இஸ்ரேலின் நடுநிலை போக்கிலிருந்து இஸ்ரேல் அரசு திடமான ஒரு முடிவெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
