உக்ரைனின் கொரோலிவ்கோவ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன் தரபால்கா. 29 வயது விமானப்படை மேஜரான இவர், உக்ரைனின் மிக துணிச்சலான போர் விமானியாகக் கருதப்படுகிறார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்-24-ம் தேதி போர்த் தொடுத்தது முதல், பல்வேறு ரஷ்ய விமானங்களை திறம்பட சுட்டு வீழ்த்தியவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மேஜர் ஸ்டீபன் தரபால்கா கடந்த மாதம் போரின்போது உயிரிழந்து விட்டதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக லண்டன் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ``உக்ரைன் போர் விமானி தரபால்கா கடந்த மாதம் 40 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய பின்னர் போரில் கொல்லப்பட்டுள்ளார். இவர் ‘Ghost of Kyiv’ என்று அழைக்கப்பட்டவர். இவருக்கு போரில் துணிச்சலுக்கான உக்ரைனின் சிறந்த பதக்கமான ‘Order Of The Golden Star’ வழங்கப்பட்டது. இவரது ஹெல்மெட் மற்றும் கண்ணாடிகள் தற்போது லண்டனில் ஏலம் விடப்பட உள்ளன. ரஷ்யப் போரின் முதல் நாளில் 10 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்திய பிறகு தராபால்கா உலகளவில் புகழ் பெற்றார். மார்ச் 13-ம் தேதி நடந்த தாக்குதலில் இவருடைய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது, இதுதொடர்பான விவரம் தற்போதுதான் தாமதமாக வெளியாகி இருக்கிறது’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
