கடந்த பிப்ரவரி மாதம், 24-ம் தேதி ரஷ்யா-உக்ரைன் இடையே தொடங்கிய போர் இன்று வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, அப்பாவிப் பொதுமக்களையும் ரஷ்யப் படைகள் கொன்று குவித்துவருவதாக உக்ரைன், ரஷ்யாமீது தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது. பல்வேறு உலக நாடுகள் உக்ரைனுக்கு உதவிகள் செய்துவருகின்றன. ஆனால் இன்னும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. அண்மையில் ரஷ்யா உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரத்தைக் கைப்பற்றியதாக அறிவித்தது.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்த பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சந்தித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை தடுப்பதற்கும், முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் போதுமான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. அது, விரக்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. உக்ரைன் மக்கள் மிகக் கொடுமையான வலிகளை அனுபவித்துவருகின்றனர். உக்ரைனில் அமைதியை நிலைநாட்டி, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்'' என்றார்.
