Published:Updated:

சி.ஏ.ஏ வழக்கில் ஐ.நா தலையீடு... இந்தியாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி... பின்னணி என்ன?

ஐ.நா
ஐ.நா

இந்திய உச்சநீதிமன்றத்தில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நடைபெற்று வருகிற வழக்கில் சேர்ந்துகொள்ள ஐ.நா விருப்பம் தெரிவித்துள்ளது.

`சி.ஏ.ஏ - அரசியலமைப்புச் சட்டம்’ கடந்த மூன்று மாதங்களாக இந்திய ஊடகங்கள், போராட்டக்களங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள் இவைவே. மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) திரும்பப் பெறக்கோரி போராட்டங்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சி.ஏ.ஏ-வைத் திரும்பப்பெற வேண்டும் என கேரளா தொடங்கி பல்வேறு மாநில சட்டப்பேரவைகள் தீர்மானங்கள் இயற்றி வருகின்றன. இந்திய வரலாற்றில் இது முதல்முறை.

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்கள்
சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்கள்

இவ்வாறு சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு தளங்களில் நடைபெற்று வருகின்றன. ஐ.நா `சி.ஏ.ஏ பாகுபாடானது’ என அறிக்கை வெளியிட்டது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ தொடர்பான தீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்றன. அமெரிக்கா நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ பற்றி விவாதிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு சர்வதேச அழுத்தங்கள் தொடர்ந்து வலுத்து வருகின்றன. ஆனால், சி.ஏ.ஏ விவகாரத்தில் ஓர் அங்குலம் கூட பின்வாங்கப்போவதில்லை என பா.ஜ.க தெரிவிக்கிறது

இந்திய உச்சநீதிமன்றத்தில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலே இருக்கின்றன. சி.ஏ.ஏ இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக உள்ளது என்பதே எதிர்ப்பவர்களின் முதன்மையான வாதமாக உள்ளது.

இந்த நிலையில், சி.ஏ.ஏ தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிற வழக்கில் சேர்ந்துகொள்ள விரும்புவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் மிஷேல் பாக்லெட் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். சர்வதேச தளத்தில் இது ஓர் அரிதான நிகழ்வு. இதற்கு இந்திய அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

மிஷேல் பாக்லெட்
மிஷேல் பாக்லெட்
UN

`சி.ஏ.ஏ இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், இதில் தலையிட எந்த பன்னாட்டு அமைப்புக்கும் முகாந்திரம் கிடையாது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டுதான் சி.ஏ.ஏ இயற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் அதை ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறோம்’ என வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசு சம்பந்தப்படுகிற வழக்கில் ஐ.நா தலையிடுவது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே இந்தியாவில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை வலுக்கட்டாயமாக நாடுகடத்துவதற்கு எதிராக நடைபெற்று வருகிற வழக்கிலும் ஐ.நா தலையிட மனுத்தாக்கல் செய்துள்ளது. அதன் விசாரணை தற்போதும் நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30-க்குள் என்.பி.ஆர் கணக்கெடுக்க உத்தரவு... தயக்கத்தில் அரசு ஊழியர்கள்?!

இந்த நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விவாதப்பொருளாகியுள்ளது. சி.ஏ.ஏ உள்நாட்டு விவகாரம் என்றே மத்திய அரசு தற்போதுவரை தெரிவித்து வருகிறது. சி.ஏ.ஏ விவகாரம் நீறுபூத்த நெருப்பாக பற்றி எரிகிற நிலையில் ஐ.நா-வின் இந்த நடவடிக்கை மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

அந்த மனுவில் சொல்லப்பட்டிருப்பது என்ன?

  • சி.ஏ.ஏ வழக்கில் தானும் ஒரு பிரதிவாதியாக சேரவில்லை. இந்த மனுவின் நோக்கம் சர்வதேச சட்டங்கள் பற்றிய ஒரு தெளிவான பார்வையை நீதிமன்றத்தின் முன் வைக்க வேண்டும் என்பதே. இதுபோல பல்வேறு நாட்டின் நீதித்துறைக்கு ஐ.நா முன்வந்து உதவி செய்துள்ளது.

  • அண்டை நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து குடியுரிமை வழங்க வேண்டும் என்கிற இந்தச் சட்டத்தின் நோக்கம் சரியே. ஆனால், அதில் குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் விலக்கி வைத்திருப்பது ஏன்.. இது சர்வதேச சட்டங்களுக்கு எவ்வாறு முரணாக உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.

  • சர்வதேச சட்டங்களுக்கு இந்தியா அளித்துள்ள மதிப்பையும் உத்தரவாதத்தையும் உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம், சட்டத்தின் முன் அனைவருக்கும் பாகுபாடின்றி சமமான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டவை. அதற்கு எதிராக எந்தச் சட்டங்களும் இயற்றப்படக் கூடாது.

சாமான்யர்களின் ஆதரவு... பெர்னி சாண்டர்ஸ் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஆவாரா?
  • இந்தச் சட்டத்தின் பயன்களிலிருந்து முஸ்லிம்கள் மட்டும் விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு அந்த மூன்று நாடுகளும் இஸ்லாமிய நாடுகள் என்பதை காரணமாக இந்திய அரசு சொல்கிறது. ஆனால், அந்த நாடுகளிலும் அஹமதியா, ஹசாரா மற்றும் ஷியா முஸ்லிம் பிரிவினரும் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர்.

  • ஒரு நாட்டிலிருந்து பாதிக்கப்பட்டு தஞ்சம் தேடி பக்கத்து நாடுகளுக்கு வருபவர்களைப் பாரபட்சமாக நடத்தக் கூடாது என சர்வதேச சட்டம் சொல்கிறது.

  • ஐ.நா சட்டங்கள் உருவாக்கப்பட்டபோது சட்டத்தின் முன் அனைவரும் சமம், அனைவருக்கும் சமமான பாதுகாப்பு போன்ற பிரிவுகள் உருவாக்கப்படுவதில் இந்தியா மிக முக்கிய பங்காற்றியிருக்கிறது. தற்போது அதே பிரிவுகள்தான் உச்சநீதிமன்றத்தின் முன் விவாதத்திற்குள்ளாகியிருக்கிறது. இந்தப் பிரிவுகளை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

அடுத்து என்ன?

சி.ஏ.ஏ வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. சபரிமலை வழக்குக்குப் பிறகே சி.ஏ.ஏ வழக்குகள் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஐ.நா-வின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா, வழக்கின் விசாரணையில் அது தாக்கம் செலுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், ஐ.நா இதுபோன்று தலையிடுவது அரிதான நிகழ்வே. இந்திய அரசுக்கு இதனால் எந்த நேரடியான அழுத்தம் இல்லையென்றாலும், சி.ஏ.ஏ வழக்கின் மீதான முக்கியத்துவத்தை இது அதிகரித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு