Election bannerElection banner
Published:Updated:

கொரோனா: `தக்க சமயத்தில் எங்களுக்கு உதவிய இந்தியாவுக்கு உதவுவோம்!’ - பைடன் அரசு உறுதி

தடுப்பூசி
தடுப்பூசி

பலகட்ட அழுத்தங்களுக்கு பிறகு அமெரிக்க அரசு இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்குத் தேவையான உற்பத்திப் பொருள்களைக் கொடுப்பதாகக் கூறியிருக்கிறது.

இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவரும் இந்த வேளையில், ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, இந்தியாவின் புனாவில் அமைந்துள்ள சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை சீரம் நிறுவனம் அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி - ஜோ பைடன்
மோடி - ஜோ பைடன்

முன்னதாக அமெரிக்க அரசின் மருத்துவத்துறை முதன்மை அதிகாரியாக இருக்கும் அந்தோணி பாசி, செய்தி நிறுவனங்களுக்கு அளித்த அறிக்கையில், ``இந்த வாரம் நாங்கள் இந்தியாவுக்கு எந்தெந்த வகையில் உதவிகள் தேவை என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். அதில் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் உதவி குறித்தும், மருந்துகளின் மூலம் சிகிச்சை அளிப்பது குறித்தும், சிகிச்சையளிப்பவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை விநியோகிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

அந்த ஆலோசனையின் அடிப்படையில், தடுப்பூசி உற்பத்திப் பொருள்களை இந்தியாவுக்குக் கொடுத்து உதவுவது, கொரோனா மருந்துகள், முன்களப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முக்கியமான கொரோனா பரிசோதனை கிட்கள் போன்றவை இந்தியாவுக்குத் தடையில்லாமல் கிடைப்பதற்கு வழிவகுப்பது, முக்கியமாக ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகாரிப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவது போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தடுப்பூசி
தடுப்பூசி

தொடர்ந்து 2022-ம் ஆண்டுக்குள் ஒரு பில்லியன் அளவிலான மக்களுக்குத் தடுப்பூசி கிடைக்கப் பெறச் செய்வது, இறுதியாக அமெரிக்காவிலுள்ள மருத்துவத்துறையில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இந்திய சுகாதார அமைச்சர்கள் வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்வது போன்ற மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்குத் தற்போதைய மிக முக்கியத் தேவையாக இருப்பது தடுப்பூசிதான் என்பதால், முதற்கட்டமாகத் தடுப்பூசி தயாரிப்பதற்குத் தேவையான உற்பத்திப் பொருள்களை அனுப்பவிருக்கிறோம். தற்போது மேற்கொண்டிருக்கும் இந்த ஒப்பந்தம் கொரோனா பேரிடர் காலத்தில் போராடிவரும் இந்தியாவின் மருத்துவத்துறை ஹீரோகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்” என்றார்.

முன்னதாக இந்தியா உதவி கேட்டபோது, `அமெரிக்கர்களுக்குத்தான் முன்னுரிமை’ எனச் சொல்லி அமெரிக்க அரசு மறுத்தது குறிப்பிடத்தக்கது. எனினும், உள்நாட்டிலேயே எழுந்த எதிர்ப்பு மற்றும் அழுத்தம் காரணமாக, இந்தியாவுக்கு உதவுவது என முடிவெடுத்திருக்கிறது அதிபர் பைடன் தலைமையிலான அரசு.

அமெரிக்க அதிபர் பைடன், ``கொரோனா உச்சத்தில் அமெரிக்காவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்தபோது, இந்திய அரசு நமக்கு வேண்டிய உதவிகளைச் செய்தது. அதேபோல தக்க சமயத்தில் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா உறுதியுடன் உள்ளது” என ட்வீட் செய்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு