Published:Updated:

சொந்த விமான தளத்தின் மீது குண்டு வீசிய அமெரிக்கா! - சிரியாவைக் காலி செய்யும் படைகள்

சிரியாவில் இருந்த அமெரிக்கப் படைகள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டதைப் பயன்படுத்திக்கொண்ட துருக்கி, சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது

சிரியா
சிரியா ( AP )

மத்திய தரைக்கடல் பகுதியின் கிழக்கில் அமைந்துள்ள `ரத்த பூமி’ சிரியா. பல வருடங்களாகக் குண்டு சத்தங்களும், மக்களின் அழுகை ஓலங்களும் இங்கு இடைவிடாது கேட்டுக்கொண்டே உள்ளன. இதுவரை உள்நாட்டுப் போராக நடந்துவந்த இது, கடந்த ஒரு மாதமாக இரு நாடுகளுக்கு இடையேயான போராக மாறியுள்ளது.

சிரியா
சிரியா
AP

அக்டோபர் 7-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ``துருக்கி-சிரியா எல்லைப்பகுதியிலிருந்து எங்கள் நாட்டுத் துருப்புகள் விலக்கிக்கொள்ளப்படுகின்றன. ஒரு முடிவே இல்லாத போருக்கு எங்கள் படைகளை அனுப்பமுடியாது” எனக் கூறினர். இதனால் சிரியா உட்பட மொத்த நாடுகளின் கண்டனங்களையும் பெற்றார் ட்ரம்ப்.

` ஆபரேஷன் அமைதி வசந்தம்!' - மீண்டும் சிரியாவை மிரட்டும் போர்; வெளியேறும் 2 லட்சம் மக்கள்

அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பினால் சிரியா அரசை விட அதிகம் பாதிப்புக்குள்ளானது அங்குள்ள குர்திஷ் அமைப்புகள்தான். இந்த அமைப்பு, அமெரிக்கப் படைகளுடன் இணைந்து சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழித்ததில் முக்கிய பங்காற்றியது. அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட மறுநாளே, குர்திஷ் அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டது துருக்கி. இதனால் சிரியா மீண்டும் ரத்த பூமியாக மாறியுள்ளது. சிரியாவில் அதிக செல்வாக்கு மிக்க அமைப்பாக விளங்கிய குர்திஷ் படை, தற்போது தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சிரியா
சிரியா
AP

துருக்கியின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இதைக் காதில் வாங்கிக்கொள்ளாத துருக்கி, தொடர்ந்து தங்கள் தாக்குதலை நடத்தி வருகிறது. அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் இதுநாள் வரை, வீரர்கள் சிரியாவிலேயே இருந்தனர். இந்நிலையில் அவர்கள் அனைவரும் நேற்று சிரியாவிலிருந்து புறப்பட்டு இராக் நாட்டுக்குச் சென்றுள்ளனர்.

அமெரிக்கப் படைகள் அனைத்தும் புறப்படுவதற்கு முன்னதாக சிரியாவின் அல் - ஹசாகா பகுதியிலிருந்த தங்கள் விமான தளங்கள் மீது தாங்களே குண்டு வீசி அனைத்தையும் அழித்து விட்டுச் சென்றுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தனை வருடங்களாக சிரியாவில் இருந்த அமெரிக்கப் படைகள் தங்கள் போக்குவரத்து, உணவு மற்றும் ஆயுதங்கள் இறக்குமதிகளுக்காக இந்த விமானப்படை தளத்தை பயன்படுத்தி வந்தனர்.

சிரியா
சிரியா
AP

அமெரிக்கப் படைகளும் குர்திஷ் படைகளும் ஒற்றுமையாக இணைந்து இத்தனை ஆண்டுகளாகப் போர் செய்தனர். தற்போது குர்திஷ் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் அவர்களின் பிடியில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெளியேறி மீண்டும் அசம்பாவிதங்களில் ஈடுபடவாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. குர்திஷ் படைகள் சிரிய அரசுப் படைகளின் ஆதரவை நாடியுள்ளதால், இரு படைகளும் இணைந்து துருக்கிக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதுவரை சிரியாவில் உள்நாட்டுப் போராக நடைபெற்று வந்த இந்தத் தாக்குதல் தற்போது சிரியா - துருக்கி இடையேயான இரு நாட்டுப் போராக வெடித்துள்ளது.