Published:Updated:

`கொரோனா வைரஸை அமெரிக்க ராணுவம் கொண்டு வந்திருக்கலாம்!’ - சீன வெளியுறவுத்துறை அதிகாரி சர்ச்சைப் பதிவு

சீன அதிகாரி
சீன அதிகாரி

உலகை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலிருந்து உருவானதாக சீன வெளியுறவுத்துறை அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி மக்களைக் கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வுகானில் இருந்து பரவியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் அங்குதான் வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சீனாவிலிருந்துதான் வைரஸ் பரவியது என்பதற்கான உண்மையான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

கொரோனா
கொரோனா

இந்நிலையில், அமெரிக்க ராணுவம் கொரோனா வைரஸை சீனாவில் பரப்பியிருக்கலாம் என்று சீன உயர் அதிகாரி ஒருவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியன் தன் ட்விட்டர் பக்கத்தில், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அதில், `அமெரிக்கச் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், அமெரிக்காவில் சமீபத்தில் காய்ச்சல் காரணமாக இறந்தவர்களின் ரத்த மாதிரியைச் சோதனை செய்து பார்த்ததில் அவர்களுக்கு கோவிட் -19 பாதிப்பு இருந்தது தெரியவந்தது’ எனக் கூறுகிறார்.

மூடப்படும் சிறப்பு மருத்துவமனைகள்?; அதிபரின் வுகான் பயணப் பின்னணி! -  மீண்டுவிட்டதா சீனா? #Corona

இதனுடன், `பெரும் தொற்று நோயை வுகானுக்கு கொண்டு வந்தது அமெரிக்க ராணுவமாக இருக்கலாம். அமெரிக்காவில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் 20,000 பேர் உயிரிழந்தனர். அவர்களில் சிலருக்கு கோவிட் - 19 தொற்று இருந்தது. இந்தக் காய்ச்சலால் அமெரிக்காவில் 3.4 கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில் எத்தனை பேர் கோவிட் - 19 மூலம் இறந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், `அமெரிக்காவில் காய்ச்சல் நோயாளிகள் எப்போது முற்றிலும் குறைந்தார்கள். இதனால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைகளில் பெயர்கள் என்ன. வெளிப்படையாக இருங்கள்! உங்கள் தரவுகளைப் பகிரங்கப்படுத்துங்கள். இதற்கு அமெரிக்க விளக்கம் கொடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். இவரின் பதிவு சர்வதேச அளவில் அதிகம் கவனம் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு