பா.ஜ.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான நுபுர் ஷர்மா, அண்மையில் ஊடக விவாத நிகழ்ச்சியில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய கருத்து தெரிவித்தது உலக அளவில் இஸ்லாமியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி பா.ஜ.க தலைமை நடவடிக்கை எடுத்தது. இருந்த போதிலும் அவர்களை கைதுசெய்ய வேண்டும் என பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களும், பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் பா.ஜ.க-வையும், மத்திய அரசையும் கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், செய்தியாளர்களிடம் பேசும் போது, ``முகமது நபிகள் குறித்து அவதூறாகப் பேசிய பா.ஜ.க உறுப்பினர்களின் கருத்துகளுக்கு அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. அதே வேளையில், முகமது நபிகள் குறித்து தவறாகப் பேசியவர்கள் மீது இந்தியா நடவடிக்கை எடுத்திருப்பதை அமெரிக்கா வரவேற்கிறது.
இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்பான மனித உரிமை விவகாரங்கள் குறித்து அந்நாட்டு அரசாங்கத்திடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். மனித உரிமைகளை மதிக்க இந்தியாவை நாங்கள் ஊக்குவிக்கிறோம்" என்றார்.
