Published:Updated:

US election 2020: `மிகப்பெரிய கௌரவம்!’ தேர்தல் வெற்றிக்குப் பின் ஜோ பைடன் #LiveUpdates

ஜோ பைடன்
ஜோ பைடன்

US election 2020: அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்த முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

04 Nov 2020 7 AM

தற்போதைய முன்னணி நிலவரம்:

அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற 270 இடங்களில் வெற்றி தேவை என்ற நிலையில் தற்போதைய முன்னணி நிலவரம்...

ஜோ பைடன் - 290

டொனால்டு ட்ரம்ப் - 214

Source - The Associated Press

07 Nov 2020 11 PM

மிகப்பெரிய கௌரவம்!

அமெரிக்க அதிபர் வேட்பாளர் வாக்கு எண்ணிக்கையில் பென்சில்வேனியாவில் 20 வாக்குகள் பெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், பெரும்பான்மைக்குத் தேவையான 270 வாக்குகளைக் கடந்து 290 வாக்குகள் பெற்றார். இதன்மூலம், அமெரிக்க அதிபராக அவர் வெற்றிபெற்றார்.

ஜோ பைடன் - கமலா ஹாரிஸ்
ஜோ பைடன் - கமலா ஹாரிஸ்

வெற்றிக்குப் பின்னர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜோ பைடன், ``நாட்டை முன்னின்று வழிநடத்த என்னைத் தேர்வு செய்ததை மிகப்பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். நமக்கு முன்பாக இருக்கும் பணி கடினமானது. ஆனால், நான் ஒன்றை மட்டும் உங்களுக்கு உறுதியாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எனக்கு வாக்களித்திருந்தாலும், இல்லாவிடினும் அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக நான் இருப்பேன். என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்’’ என்று பதிவிட்டிருக்கிறார். அதேபோல், ஜனநாயக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட இந்திய வம்சாவளி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றிருக்கிறார். இதன்மூலம், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் துணை அதிபர் உள்ளிட்ட பெருமைகளை கமலா ஹாரிஸ் பெறுகிறார்.

06 Nov 2020 3 PM

ஜார்ஜியாவில் முந்தியா பைடன்!

அமெரிக்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டுவருகின்றன. தொடர்ந்து இழுபறியாக இருக்கும் ஐந்து மாகாணங்களில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. தேர்தல் முடிவுகள் இன்று இரவு வெளியாகும் என நம்பப்படும் நிலையில், ஜார்ஜியாவில் முன்னிலையில் இருந்த தற்போதைய அதிபர் ட்ரம்ப் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். ஜார்ஜியாவில் தற்போது பைடன் சுமார் 1,000 வாக்குகள் முன்னணி பெற்றிருக்கிறார். இது சிறிய வித்தியாசம்தான். இன்னும் நிறைய வாக்குகள் எண்ணப்பட வேண்டியிருப்பதால், தொடர் இழுபறி நீடிக்கிறது.

ஜார்ஜியாவில் 16 தேர்வாளர்களின் வாக்கு இருப்பதால், இரு தரப்புக்கும் இங்கு வெற்றி பெறுவது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஒருவேளை பைடன் ஜார்ஜியாவைக் கைபற்றத் தவறினாலும், மீதமிருக்கும் ஐந்து மாகாணங்களில் இரண்டை கைப்பற்றினாலே அதிபர் பதவிக்கு முன்னறிவிடலாம். பைடன், தற்போது அரிஸோனா மற்றும் நெவேடா மாகாணங்களிலும் முன்னிலையில் இருக்கிறார்.

ட்ரம்ப் - பைடன்
ட்ரம்ப் - பைடன்

அதிபர் ட்ரம்ப், தற்போதய நிலவரப்படி, வடக்கு கரோலினா மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் முன்னிலையில் இருக்கிறார். இந்த இரு மாகாணங்களிலும் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார். மீதமிருக்கும் மூன்று மாகாணங்களில் (ஜார்ஜியா, அரிஸோனா, நெவதா) பைடன் முன்னிலையில் இருக்கிறார். இவற்றில் இரண்டில் பைடன் வெற்றி பெற்றாலும் ட்ரம்புக்கு அது சிக்கலை ஏற்படுத்தும்.

வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டுவருகின்றன. இந்த முறை ட்ரம்ப் மற்றும் பைடன் இடையே கடுமையான போட்டி நிலவுவதால், அனைத்து மாகாணங்களிலும் இருக்கும் இறுதி வாக்குச்சீட்டு எண்ணி முடியும்வரை விறுவிறுப்பு நீடிக்கும் என்கிறார்கள்.

05 Nov 2020 10 AM

ட்ரம்ப் Vs பைடன்... தொடரும் கடும் போட்டி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை நெருங்கிவிட்டாலும், இன்னும் எதுவும் முடிந்துவிடவில்லை என்கிறார்கள் ட்ரம்ப் ஆதரவாளர்கள். இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மாகாணங்கள் எவை... ட்ரம்ப் இன்னும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விகள்தான் இணையத்தில் விவாதமாகியிருக்கிறது.

தற்போது வாக்குகள் எண்ணப்படும் மாகாணங்களில் பென்சில்வேனியா ட்ரம்புக்கு மிக முக்கியமானது. ட்ரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற பென்சில்வேனியாவைக் கைப்பற்றுவது மிகவும் அவசியம். தற்போது அவர் அந்த மாகாணத்தில் முன்னிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பென்சில்வேனியாவை மட்டும் கைபற்றினால் போதாது. கூடவே ஜார்ஜியாவிலும், மீதமிருக்கும் மூன்று மாகாணங்களில் இரண்டையும் கைப்பற்ற வேண்டிய சூழல் ட்ரம்ப்-க்கு ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் 270 என்னும் மேஜிக் நம்பரை ட்ரம்ப் பெற முடியும்.

ட்ரம்ப் - பைடன்
ட்ரம்ப் - பைடன்

மறுபக்கம் பைடனுக்கும் வெற்றி சற்று கிட்டேதான் இருக்கிறது. பைடன் பென்சில்வேனியாவை மட்டும் கைப்பற்றினாலே அதிபராகிவிடலாம். ஒருவேளை பென்சில்வேனியாவைத் தவறவிட்டால். மீதமிருக்கும் நான்கு மாகாணங்களில் ஏதாவது இரண்டை கைப்பற்ற வேண்டும். இதில் நெவேடா (Nevada) மற்றும் அரிஸோனா (Arizona) பகுதிகள் பைடன் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. என்றாலும், பென்சில்வேனியாவின் இறுதி முடிவு வெள்ளிக்கிழமைதான் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே மூன்று மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் எனவும், தனது மேற்பார்வையில் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் எனவும் ட்ரம்ப் நீதிமன்றம் சென்றிருப்பதால், தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதமாகுமோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

05 Nov 2020 6 AM

வெற்றியை நெருங்கும் பைடன்!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் சில மாகாணங்களில் தொடர் இழுபறி நீடித்துவந்தது. இந்தநிலையில் தற்போது அதில் சில மாகாணங்களின் தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கியிருக்கின்றன. அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான 270 என்னும் மேஜிக் நம்பரை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பைடன் நெருங்கியிருக்கிறார். மிச்சிகன், விஸ்கான்சின் மாகாணங்களில் பைடன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தற்போது அவரின் கட்சி வென்றிருக்கும் இடங்களின் எண்ணிக்கை 264-ஆக அதிகரித்திருக்கிறது. டொனால்டு ட்ரம்ப்-ன் கட்சி தற்போது வரை 214 இடங்களில் வென்றிருக்கிறது.

ஜோ பைடன்
ஜோ பைடன்

வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நெவேடா மற்றும் அரிஸோனா பகுதிகளில் பைடன் முன்னிலையில் இருப்பதாகவும் பெனிசில்வேனியா, ஜார்ஜியா மற்றும் வடக்கு கரோலினா பகுதிகளில் ட்ரம்ப் முன்னிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து மோசடி நடப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டிவருகிறார். முன்னிலையில் இருக்கும் பைடன், ``நாம் வெற்றி பெறுவோம். ஆனால் இந்த வெற்றி எனக்கானது மட்டுமல்ல. இது அமெரிக்க மக்களின் வெற்றி” என ட்வீட் செய்திருக்கிறார்.

04 Nov 2020 1 PM

வாக்கு எண்ணிக்கையில் மோசடி! - ட்ரம்ப் அதிரடி

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் புதுப் புது தகவல்கள் வெளியாகிக்கொண்டேயிருக்கின்றன. ட்ரம்ப், பைடன் இடையே கடுமையான போட்டி நிலவிவந்த நிலையில், வெள்ளை மாளிகையில் தன் ஆதரவாளர்களிடம் உரையாற்றினார் அதிபர் ட்ரம்ப். அப்போது அவர், ``என்னைப் பொறுத்தவரையில் இந்த அதிபர் தேர்தலை நாம் ஏற்கெனவே வென்றுவிட்டோம். இந்த இரவில் மிகப்பெரிய கொண்டாட்டத்துக்குத் தயாராகிவந்தோம்.

ட்ரம்ப் - ஜோ பைடன்
ட்ரம்ப் - ஜோ பைடன்

நாம் வெற்றி பெறும் நிலையில் சில மோசடிகள் நடந்திருக்கின்றன. மூன்று மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை நாடவிருக்கிறோம்” என்றார் ட்ரம்ப். இந்தநிலையில் குறிப்பிட்ட மூன்று மாகாணங்களில் தபால் வாக்குகளால் ட்ரம்ப் பின்னடைவைச் சந்திப்பார் என்று கருதுவதால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தத் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

04 Nov 2020 11 AM

ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. பைடன் எண்ணிக்கை அடிப்படையில் தற்போது முன்னிலையில் இருந்துவந்தாலும், பல முக்கிய மாநிலங்களை ட்ரம்ப் கைப்பற்றி பைடனுக்கு கடும் போட்டி அளித்துவருகிறார் என்ற தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்தநிலையில் அதிபர் ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் ஜோ பைடன் கட்சியினர் சதி செய்ய முயல்வதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஜோ பைடன்
ஜோ பைடன்
Carolyn Kaster

இந்தநிலையில் மக்களிடையே உரை நிகழ்த்திய அதிபர் வேட்பாளர் ஜோ பைடன், ``அதிபர் தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதுவரை ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருக்கிறார்.

04 Nov 2020 10 AM

டெக்ஸாஸ், ஃபுளோரிடாவைக் கைப்பற்றிய ட்ரம்ப்!

டொனால்டு ட்ரம்ப் - ஜோ பைடன்
டொனால்டு ட்ரம்ப் - ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்ரன. பைடன் எண்ணிக்கை அடிப்படையில் தற்போது முன்னிலையில் இருந்துவந்தாலும், பல முக்கிய மாநிலங்களை ட்ரம்ப் கைப்பற்றி பைடனுக்குக் கடும் போட்டி அளித்துவருகிறார். டெக்ஸாஸ், ஃபுளோரிடா மாநிலங்களை ட்ரம்ப் கைபற்றியிருக்கிறார். டெக்ஸாஸிலுள்ள 38 வாக்குகளையும், ஃபுளோரிடாவிலுள்ள 29 வாக்குகளையும் ட்ரம்ப் கைபற்றியிருக்கிறார். நியூயார்க், நியூஜெர்ஸியைத் தொடர்ந்து கலிஃபோர்னியா மாநிலத்தை பைடன் கைபற்றியிருக்கிறார்.

04 Nov 2020 9 AM

முந்தும் பைடன்... சவாலளிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்படுவது ஏன்? - சுவாரஸ்யப் பின்னணி!

அமெரிக்காவில் நியூயார்க், நியூஜெர்ஸி உள்ளிட்ட சில மாநிலங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இண்டியானா, ஒக்லஹோமா உள்ளிட்ட பகுதிகளில் ட்ரம்ப் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருக்கிறார். தற்போதைய நிலவரப்படி ட்ரம்ப் 108 இடங்களிலும், பைடன் 135 இடங்களிலும் வெற்றியை நோக்கி நகர்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

04 Nov 2020 7 AM

தாமதமாகும் முடிவுகள்..?

அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல்
Twitter/ @Levent01Senturk

அமெரிக்காவில் நேற்று தேர்தல் நாள். கொரோனா அச்சம் காரணமாக இந்த முறை கிட்டத்தட்ட 10 கோடிப் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். தபால் வாக்குகள் இந்த முறை அதிகமாகப் பதிவான காரணத்தால், இந்த முறை தேர்தல் முடிவுகள் சில பகுதிகளில் தாமதமாகலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது!

04 Nov 2020 7 AM

ட்ரம்ப் Vs ஜோ பைடன்..

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். துணை அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நேற்று அமெரிக்காவில் வாக்குப்பதிவு தொடங்கியது, கொரோனா அச்சம் காரணமாக இந்த முறை கிட்டத்தட்ட 10 கோடிப் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். தேர்தல் நாளிலும் மக்கள் வரிசையில் நின்று தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.

டொனால்டு ட்ரம்ப் - ஜோ பைடன்
டொனால்டு ட்ரம்ப் - ஜோ பைடன்
AP

ஜோ பைடன், நியூ ஜெர்ஸி பகுதியில் வெற்றிபெற்றிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருப்பதாக ஏ.எஃப்.பி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும் பைடன் தனது சொந்த மாநிலமான டெலவேர் (Delaware) பகுதியிலும் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற 270 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் முடிவுகளின்படி, ஜோ பைடன் 85 இடங்களிலும், ட்ரம்ப்,55 இடங்களில் வெற்றியை நோக்கி முன்னேறி செல்கின்றனர். வாக்கு சதவிகிதம் அடிப்படையில் இருவருக்கும் கடுமையாகப் போட்டி நிலவுகிறது. தற்போதய நிலவரப்படி பைடனுக்கு ஆதரவாக 48.3% வாக்குகளும் ட்ரம்ப்-க்கு ஆதரவாக 50.2% வாக்குகளும் பதிவாகியிருப்பதாக ஏ.பி செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது ஆரம்பகட்ட நிலவரம் மட்டுமே!

அடுத்த கட்டுரைக்கு