Election bannerElection banner
Published:Updated:

`ஜோ பைடன் அதிபர் இல்லை’; மெலனியா விவாகரத்து?! - தேர்தலுக்குப் பிந்தைய ட்ரம்ப் சர்ச்சைகள்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( Evan Vucci )

ட்ரம்ப் சம்பாதித்திருந்த அதிருப்தியின் விளைவாக, கடந்த 30 ஆண்டுகளில் ஒரேயொரு முறை அதிபராக இருந்தவர்களின் வரிசையில் அவரும் இணைந்திருக்கிறார்.

உலகமே எதிர்பார்த்த ஒரு தேர்தல் திருவிழாவாக அமைந்தது அமெரிக்க அதிபர் தேர்தல். அமெரிக்க அதிபர் பதவிக்காக இந்த முறை குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிட்டனர். அவர்களை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் ஆகியோர் அமெரிக்கா அதிபர் தேர்தலில் களம்கண்டனர்.

அமெரிக்க தேர்தல்
அமெரிக்க தேர்தல்
Craig Ruttle

கடந்த ஆட்சியில் ட்ரம்ப் தனது வலதுசாரிய கொள்கைகளாலும், எல்லை மீறிய சில செயல்களாலும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியைச் சம்பாதித்திருந்தார். அதுபோக இந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதலில் அமெரிக்கா முழுவதும் பெரும் பாதிப்புகள் நேரிடவே, அது ட்ரம்ப் குறித்து மக்கள் மத்தியில் வளர்ந்திருந்த வெறுப்பில் மேலும் உரம் தூவியது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
Phelan M. Ebenhack

இந்தநிலையில், கடந்த நவம்பர் 3-ம் தேதி பல எதிர்பார்ப்புகளுடன் நிகழ்ந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தொடக்கம் முதல் முன்னிலை வகித்துவந்த ஜோ பைடன், இறுதியில் அதிபர் போட்டியின் முக்கிய மாகாணமான பென்சில்வேனியாவைக் கைப்பற்றி, மொத்தம் 284 வாக்குகள் பெற்று ட்ரம்ப் ஆட்சியை வீழ்த்தி வெற்றிபெற்றார்.

ட்ரம்ப் சம்பாதித்திருந்த அதிருப்தியின் விளைவாக கடந்த 30 ஆண்டுகளில் ஒரேயொரு முறை அதிபராக இருந்தவர்களின் வரிசையில் அவரும் இணைந்திருக்கிறார்.

ட்ரம்ப் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டாலும் அவர் ஏற்படுத்தும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் இழுபறி நிலை நீடித்ததால், வாக்கு எண்ணிக்கையின்போதே தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்வதாகக் குற்றம்சாட்டினார். வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி ட்ரம்ப் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றங்கள் நிராகரித்தன.

ஜோ பைடன்
ஜோ பைடன்

இறுதியில், ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அந்நாட்டுச் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. நாடே விழாக்கோலம் பூண்டது. ஆனால், ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்தார். ஏன்?

தேர்தல் முடிவுகளில் ஏன் இந்த தாமதம்?

தேர்தலின்போது மின்னணு வாக்கு இயந்திரங்கள் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுவதில்லை. வாக்குச்சீட்டின் மூலம்தான் தேர்தல் நடத்தப்பட்டுவருகிறது. அதனால் பொதுவாகவே வாக்கு எண்ணிக்கையில் தொய்வு ஏற்படும். அதுபோக, இ-ஓட்டு, ஃபேக்ஸ், இ-மெயில் ஆகியவை மூலம் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை செலுத்த அனுமதிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் 50 மாகாணங்களும் தேர்தல் நடத்துவதிலும், வாக்கு எண்ணிக்கையிலும் மாறுபட்ட விதிமுறைகளை வைத்திருக்கின்றன. வாக்கு எண்ணிக்கையை முடிக்க வேண்டிய காலக்கெடுவை நிர்ணயிப்பதில் மட்டுமே அங்கே பொதுவான சட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த மாதம் டிசம்பர் 8-ம் தேதிவரை ஓட்டு எண்ணிக்கையைத் தொடர முடியும் என்று கூறப்படுகிறது.

வாக்கு
வாக்கு
Mary Altaffer

இந்தத் தேர்தலில் குறிப்பாக 22 மாகாணங்கள் மற்றும் வாஷிங்டன் டி.சி-யில் நவம்பர் 3-ம் தேதிக்கு பின்னரும் தபால் வாக்குகள் அங்கீகரிக்கப்பட்டன. ஆனால், அவற்றில் நவம்பர் 3-ம் தேதிக்கு முன்னர் அனுப்பியதற்கான அஞ்சல் முத்திரை இருக்க வேண்டும்.

அதேசமயம், ஒரு சில நகரங்களில் தபால் வாக்கு எண்ணிக்கைக்காகப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் அகற்றப்பட்டதாகவும், பல இடங்களில் தபால் பெட்டிகளே அகற்றப்பட்டுவிட்டதாகவும் சர்ச்சைகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன!

இந்த முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்தலுக்கு முன்பாகவே இல்லாத வகையில், பத்துக் கோடிக்கும் அதிகமானோர் பலர் தங்கள் வாக்குகளை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல்
தேர்தல்
Julio Cortez

இவற்றைக் காரணமாகக்கொண்டே தேர்தல் முழுமையாக முடிவடைவதற்கு இன்னும் நிறைய காலம் இருப்பதாகவும், ஜோ பைடன் வெற்றிபெற்றுவிட்டதாக அவரது ஆதரவு ஊடகங்கள் அவரைத் தவறாக சித்தரிப்பதாவும் ட்ரம்ப் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

மேலும், இது தொடர்பாக இன்று நீதிமன்றத்தை நாடி, பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்து வெற்றியாளர் யார் என்பதை மக்களுக்குத் தெரியபடுத்தவிருப்பதாக ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

கோல்ஃப் விளையாடிய ட்ரம்ப்!

கடந்த சனிக்கிழமை (07.11.2020) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது உலகமே அமெரிக்காவை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்க, ட்ரம்ப் `மேக் அமெரிக்கா கிரேட் அகேய்ன்’ (Make America Great Again) என்ற வாசகத்துடன்கூடிய தொப்பியை அணிந்துகொண்டு `கோல்ஃப்’ (Golf) விளையாடிக்கொண்டிருந்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
Steve Helber

இந்தநிலையில், அந்நாட்டில் வசித்துவரும் அமெரிக்கவாழ் இந்தியர்கள் அந்நாட்டுச் செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ``ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்காவின் பொருளாதாரம் உயர்ந்தாலும், அவரின் செயல்பாடுகளால் அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. இதுவே ட்ரம்ப் அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி உருவாக ஓரு முக்கியக் காரணமாக அமைந்தது” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

ட்ரம்ப்- மெலனியா விவாகரத்து?

அதேபோல் ட்ரம்ப் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறிய பிறகு அவரின் மூன்றாவது மனைவியான மெலனியா அவரை விவாகரத்து செய்யவிருப்பதாக ட்ரம்ப்பின் முன்னாள் உதவியாளர் கூறியிருக்கிறார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் தேர்தல் முடிவுகளால் இந்தியாவுக்கு என்ன பயன்?

தேர்தலுக்கு முந்தைய விவாதங்களின்போதே இரு தரப்பு வேட்பாளர்களின் பார்வையும் அமெரிக்கவாழ் இந்தியர்களின் மீதும், அவர்கள் வாக்குகளின் முக்கியதுவத்தையும் சார்ந்தே இருந்தது. அமெரிக்கவாழ் இந்தியர்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் ஜோ பைடனுக்கே ஆதரவு தெரிவித்தனர்.

அமெரிக்கா
அமெரிக்கா
John Locher

அதுபோலவே தற்போது ஜோ பைடன் வெற்றி பெற்றிருப்பதால், இந்தியாவுக்கு உச்சபட்ச முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று நேற்று ஜனநாயகக் கட்சியினர் சமர்பித்திருக்கும் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் வரலாறு காணாத இந்த வெற்றிக்கு இந்தியாவிலும் பெரும் ஆதரவு நிலவுவதால், இனி நிகழும் மாற்றங்களுக்கும், ட்ரம்ப் முன்மொழியும் சர்ச்சைக் கருத்துகளுக்கும் காலத்திடம்தான் விடை இருக்கிறது!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு