Published:Updated:

`சுலைமானி கொல்லப்பட்ட அதே நாள்; ஏமனுக்கும் குறி!’ - அமெரிக்க ரகசியம் உடைத்த அதிகாரிகள்

சுலைமானி
சுலைமானி

சுலைமானி கொல்லப்பட்ட அதே நாளில் இரானைச் சேர்ந்த மற்றொரு ராணுவ அதிகாரியையும் கொல்ல திட்டம் தீட்டப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது கடந்த வாரம் இரான் ராணுவ அமைப்பு தாக்குதல் நடத்தியது. இந்தச் சம்பவம் நடந்த பிறகு தற்போதுவரை இரானில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. தூதரகம் தாக்கப்பட்டதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் வைத்து, இரான் ராணுவப்படை தளபதி காசிம் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் நடத்திக் கொன்றது அமெரிக்கா.

காசிம் சுலைமானி
காசிம் சுலைமானி

அவர், அமெரிக்கர்களைத் துன்புறுத்தியதாகவும் அமெரிக்காவுக்கு எதிராகப் பல சதிகளை நடத்தியதாகவும் சுலைமானியின் கொலைக்குக் காரணம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சுலைமானியின் கொலையினால் இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரான், இராக் ஆகிய இரு நாடுகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. சுலைமானியின் கொலைக்குப் பிறகு அமெரிக்க ராணுவப் படைகள் மீது இரண்டு முறை ஏவுகணை தாக்குதல் நடத்திவிட்டது இரான்.

`கரு நிறமாக மாறிய தெஹ்ரான்; கதறி அழுத மூத்த தலைவர்!' - மக்கள் வெள்ளத்தில் மிதந்த சுலைமானி உடல்

இந்நிலையில் சுலைமானி கொலை செய்யப்பட்ட அதே நாளில் இரானைச் சேர்ந்த மற்றொரு மூத்த ராணுவ அதிகாரிக்கும் குறி வைக்கப்பட்டதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத பென்டகன் அதிகாரிகள், வாஷிங்டன் போஸ்ட்டுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இரானின் ராணுவத் தலைமையை முடக்குவதற்காகத் திட்டம் தீட்டப்பட்டதா அல்லது அமெரிக்கர்களைப் பாதுகாப்பதற்காக சுலைமானி கொல்லப்பட்டாரா என்ற கேள்வியின் போதுஅதிகாரிகள் இந்தப் பதிலை அளித்துள்ளனர்

ட்ரம்ப்
ட்ரம்ப்

``அப்துல் ரேஸா ஷாஹ்லால் என்பவர் இரானின் குட்ஸ் ராணுவப்படையின் பொருளாளராகவும் முக்கிய தளபதியாகவும் உள்ளார். இவரைக் கொல்லவே ரகசியத் திட்டம் தீட்டினோம். ஆனால் அது தோல்வியில் முடிந்துவிட்டது. ரேஸா ஏமனில்தான் அதிகச் செயல்பாட்டில் உள்ளார். அதனால் சுலைமானி கொல்லப்பட்ட அதே நாள் அதே நேரத்தில் ரேஸாவைக் கொல்லவும் குறிவைக்கப்பட்டது. ஒருவேளை எங்கள் திட்டத்தில் ரேஸா இறந்திருந்தால் அன்றே நாங்கள் பெருமையாக அறிவித்திருப்போம். அமெரிக்காவின் திட்டம் தோல்வியடைந்ததால் இதை வெளியில் சொல்லவில்லை” என்று கூறியுள்ளார்.

சுலைமானி உடல் அடக்கம்; அடுத்த ஒரு மணிநேரத்தில் பறந்த ஏவுகணை! -அமெரிக்காவுக்கு அதிர்ச்சிகொடுத்த இரான்

மற்றொரு அதிகாரி, ``சுலைமானி மற்றும் ரேஸா ஆகிய இருவரைக் கொல்லும் திட்டமும் மிகவும் அதிகமாகக் கவனிக்கப்பட்டு வந்தது. ரேஸா தப்பிவிட்டார், வருங்காலத்தில் மீண்டும் அவர் மீது குறிவைக்கப்படலாம். சுலைமானி கொல்லப்பட்ட பிறகு அதிகரித்துள்ள பதற்றத்தைச் சரிசெய்ய அமெரிக்கா, இரான் ஆகிய இரு நாடுகளும் முனைப்புக் காட்டி வருகின்றன. சுலைமானி கொல்லப்பட்டதன் மூலம் நூற்றுக்கணக்கான அமெரிக்க உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. அதுவே ரேஸா மீதான தாக்குதல் இந்த வாதத்தைச் சிக்கலாக்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அறிவிப்பு
அமெரிக்க அறிவிப்பு

அப்துல் ரேஸா இருக்கும் இடத்தைப் பற்றித் தகவல் அளிப்பவர்களுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் எனக் கடந்த மாதம் அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பு அறிவித்திருந்தது. சவுதி தூதருக்கு எதிரான 2011-ம் ஆண்டு சதி, அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்துதல் போன்ற பல விஷயங்களில் ரேஸா மீது குற்றம் சுமத்தியுள்ளது அமெரிக்கா.

அடுத்த கட்டுரைக்கு