Published:Updated:

`வுகான் ஆய்வகத்திலிருந்து வெளியானதா கொரோனா?’ - பத்திரிகையாளர்களின் கேள்வியும் ட்ரம்பின் பதிலும்

கொரோனா
கொரோனா

வுகானின் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வெளியானதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தி ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பலிகொண்டுள்ள கொரோனா வைரஸ், கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் உள்ள ஓர் இறைச்சி சந்தையிலிருந்து உருவானதாகக் கூறப்படுகிறது. இருந்தும் அதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் தற்போதுவரை கிடைக்கவில்லை. அதனால் வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது தற்போதுவரை புரியாத புதிராகவே உள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்த நிலையில், சீனாவின் ஹூபே மாகாண தலைநகர் வுகானில் உள்ள ஓர் ஆய்வகத்திலிருந்து வைரஸ் பரவியிருக்கலாம் என நம்பப்படுவதாக ஃபாக்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், வுகான் ஆய்வகத்தில் பணியாற்றிய ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதாகவும் அவர் இறைச்சி சந்தைக்குச் சென்றதால் அங்கிருந்து உலகம் முழுவதும் பரவியதாகத் தகவல் வெளியாகியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது பயோ வார் இல்லை என்றும் வைரஸ்களை அடையாளம் கண்டு போராடுவதற்கு அமெரிக்காவுக்கு இணையாக உருவாக வேண்டும் என்ற சீனாவின் முயற்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கோவிட்-19... இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகிறதா சீனா..?

இதற்கிடையில், கொரோனா தொடர்பான தகவல்களை வழங்க தினமும் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அப்படி நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவரிடம் வுகான் ஆய்வு மையம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த ட்ரம்ப், ``ஆய்வகம் பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. ஆனால், இதைப்பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டு வருகிறோம். வைரஸ் ஆய்வகத்திலிருந்து உருவானதா என்று எனது அரசு விசாரணை நடத்தி வருகிறது” என்பதுடன் முடித்துக்கொண்டார்.

சீனா
சீனா

பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸை `சீன வைரஸ்’ என விமர்சனம் செய்தது சர்ச்சையானது. தற்போது அமெரிக்காவுக்குத் தேவைப்படும் பல்வேறு மருத்துவ உபகரணங்களுக்கு அந்நாடு சீனாவையே நம்பியுள்ளதால் ட்ரம்ப் அவ்வாறு பேசுவதை நிறுத்திவிட்டார் எனக் கூறப்படுகிறது.

அதிபரின் பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு பேசியுள்ள வெள்ளை மாளிகையின் செயலர், ``கொரோனா வைரஸ் சீனாவின் வுகானில் இருந்துதான் உருவானது என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்த விஷயத்தில் சீன அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். உண்மையில் வைரஸ் எவ்வாறு தோன்றியது என்பதற்கு அவர்கள் விளக்கமளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு