அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் கடந்த வியாழக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் நீண்ட துப்பாக்கியுடன் சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். அதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
குற்றவாளி இன்னும் கைதுசெய்யப்படவில்லை என்றும் தகவல்கள் கிடைக்கின்றன. அதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஆஸ்ப்ரே கோவ் டிரைவ் மற்றும் பே ஹார்பர் டிரைவ் அருகேயுள்ள நியூஸ் ரிவர் கிரீன்வே பகுதியில் ராலே காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், அந்தப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வடக்கு கரோலினா கவர்னர் ராய் கூப்பர் தனது ட்வீட்டர் பதிவில், "நான் மேயர் பால்ட்வினுடன் பேசியிருக்கிறேன். கிழக்கு ராலேயில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரைக் கைதுசெய்ய மாநில சட்ட அமலாக்கத்துக்கு உதவி வழங்குமாறு அறிவுறுத்தினேன். மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியவரிடமிருந்து மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்" எனப் பதிவிட்டிருக்கிறார். அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு சம்பவம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.