Published:Updated:

`நானே சட்டம் ஒழுங்கு தலைவர்; அமெரிக்க நகரங்களில் ராணுவம்!’ - எச்சரிக்கும் அதிபர் ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

நாட்டு மக்களின் போராட்டங்களை ராணுவம் கொண்டு ஒடுக்குவேன் என அதிபர் ட்ரம்ப் பேசியது பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

கொரோனா வைரஸின் கோரப்பிடியில் இருந்து இன்னும் மீளாத அமெரிக்கா தற்போது பெரும் போராட்டங்களால் திணறி வருகிறது. மினசோட்டா மாகாணத்தில் இருக்கும் மின்னெபொலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற 42 வயது கறுப்பினத்தைச் சேர்ந்தவர் கடந்த வாரம் போலீஸ் பிடியில் இருக்கும்போது உயிரிழந்தார். ஜார்ஜை கீழே தள்ளி அவரின் கழுத்தில் ஒரு போலீஸார் தன் கால் முட்டியை வைத்து பலமாக அழுத்தியுள்ளார். ஜார்ஜின் மரணத்துக்கும் அதுவே காரணமாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாக, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

`நானே சட்டம் ஒழுங்கு தலைவர்; அமெரிக்க நகரங்களில் ராணுவம்!’ - எச்சரிக்கும் அதிபர் ட்ரம்ப்
AP

மின்னெபொலிஸில் தொடங்கிய போராட்டம், அமெரிக்காவின் பல மாகாணங்களுக்கும் பரவியுள்ளது. இன சமத்துவமின்மைக்கு எதிரான இந்தப் போராட்டத்துக்கு உலகம் முழுவதும் இருந்து ஆதரவு பெருகியுள்ளது. பல இடங்களில் போராட்டத்தில் வன்முறை வெடித்து கலவரமும் ஏற்பட்டது. இதனால் அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் போர்க்களம் போல் காட்சியளித்தன. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் நடைபெற்றன. என்றாலும் நாடு முழுவதும் போராட்டங்களின் வீரியம் சற்றும் குறையவில்லை. அதிபர் மாளிகையில் இருக்கும் பூங்கா வரை போராட்டம் சென்றது.

இதைத்தொடர்ந்து சில இடங்களில் போராட்டக்காரர்களை கண்ணீர்புகை குண்டு வீசியும், ரப்பர் குண்டுகள் மூலமும் கலைத்தனர் போலீஸார். இதனால் பாதுகாப்புத்துறை வீரர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடும் மோதல் வெடித்தது. இந்த நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், `நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்' என எச்சரிக்கை விடுத்தார்.

`நானே சட்டம் ஒழுங்கு தலைவர்; அமெரிக்க நகரங்களில் ராணுவம்!’ - எச்சரிக்கும் அதிபர் ட்ரம்ப்
AP

அமெரிக்காவில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பாக பேசிய ட்ரம்ப், நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு தான்தான் தலைவர் என்று அறிவித்தார். மேலும், ``மக்கள் நலனுக்காக தேசிய பாதுகாப்பு படையைக் கொண்டு ஆளுநர்கள் போராட்டங்களைத் தடுக்க வேண்டும். இல்லை என்றால், ஆயிரம் ஆயிரம் ராணுவ வீரர்கள் நகரில் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவார்கள்.

நமது நாடு முழுவதும் பரவியுள்ள கலவரங்களையும், அராஜகங்களையும் நாங்கள் முடிவுக்குக் கொண்டு வருவோம்’ என்றார் காட்டமாக. அவர் பேசுகையில், நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு தலைவர் என்றும் அமைதியாகப் போராடுபவர்களின் ஆதரவாளர் என்றும் தன்னைத்தானே குறிப்பிட்டார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

நாட்டு மக்களின் போராட்டங்களை ராணுவம் கொண்டு ஒடுக்குவேன் என அதிபர் ட்ரம்ப் பேசியது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனிடையே, போராட்டக்காரர்கள் இடையே பேசிய ஜார்ஜ் ஃப்ளாய்ட்-யின் சகோதரர், டெரென்ஸ் ஃப்ளாய்ட், `நமக்கு நீதி வேண்டும். ஆனால், அதை அமைதியான முறையில் போராடி பெறுவோம்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்த கட்டுரைக்கு