Published:Updated:

‘தெரியாமல் நடந்திருந்தால் அது தவறு; ஆனால்...?’ - கொரோனா விஷயத்தில் சீனாவை எச்சரிக்கும் ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

கொரோனா உருவானதில் சீனா தெரிந்தே தவறு செய்திருந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸால் மொத்த மனித குலமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் சர்வதேச அளவில் 23,30,987 பேர் பாதிக்கப்பட்டு 1,60,757 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாது பல நாடுகளின் பொருளாதாரமும் கடுமையான வீழ்ச்சியை அடைந்துள்ளது. இந்நிலையில் முதன்முதலில் வைரஸ் உருவானது தொடர்பாகப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

கொரோனா
கொரோனா

சீனாவின் ஹூபே மாகாணத் தலைநகர் வுகானில் உள்ள ஒரு இறைச்சிச் சந்தையிலிருந்துதான் கொரோனா வைரஸ் உருவானதாக இதுநாள் வரை கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது புதிதாக, வைரஸ் இறைச்சிச் சந்தையிலிருந்து வெளிப்படவில்லை மாறாக வுகானில் உள்ள ஒரு வைரஸ் ஆய்வு மையத்திலிருந்துதான் வந்துள்ளது என உலக ஆராய்ச்சியாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர். அதற்கான ஆதாரங்களையும் சிலர் வெளியிட்டுள்ளனர். இதனால் இந்தப் பிரச்னை சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

சீனாவில் வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையிலும் இன்னும் எங்கிருந்து எப்படி வைரஸ் பரவியது என்பதற்கான முழு விளக்கத்தை அந்நாடு கொடுக்கவில்லை. இது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு வெள்ளை மாளிகையில் பதில் அளித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அவர் பேசும்போது, “ வைரஸ் பரவலை ஆரம்பகட்டத்திலேயே சீனா தடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. இதனால் தற்போது மொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

கொரோனா பரவல் தொடர்பான விசாரணையில் சீன அரசுக்குத் தெரியாமல் வைரஸ் பரவியிருந்தால் பரவாயில்லை. அது தெரியாமல் செய்த தவறாகிவிடும். ஆனால் ஒருவேளை சீன அரசுக்கு இது தெரிந்து வேண்டுமென்றே நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான கடும் விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும். தவறுதலாக வைரஸ் வந்ததற்கும் வேண்டுமென்றே பரப்பப்பட்டதுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சீனாவும் வைரஸ் பரவியது தொடர்பாக விசாரணை நடத்துவதாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள் விசாரணை முடிவுகள் எப்படி உள்ளது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

உலகறிந்த உண்மையை மறைக்கப்பார்க்கும் சீனா?! -கொரோனாவில் அடுத்த சர்ச்சை

நாங்களும் வைரஸின் தொடக்கம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். ஆனால் எங்களை அந்நாட்டுக்குள் விட சீன அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதில் ஏதோ மறைக்கப்படுவதாக சந்தேகம் தோன்றுகிறது. இருந்தும் சீனாவின் முடிவுக்காகக் காத்திருப்போம். மேலும் சீனாவில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களின் இறப்பு விகிதம் 0.33 மட்டுமே என அந்நாடு கூறுவதும் சந்தேகமாக உள்ளது” என்று பேசியுள்ளார்.

சீனா
சீனா

முன்னதாக வைரஸ் பரவல் தொடர்பான கேள்வி எழுந்தபோது, அதை அமெரிக்க ராணுவத்தினர்தான் சீனாவுக்குள் பரப்பியதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி அதை நிரூபித்து அமெரிக்கா பதிலடி கொடுத்தது. பிறகு கொரோனா வைரஸை சீன வைரஸ் என ட்ரம்ப் அழைத்தது சர்ச்சையானது. இப்படி கொரோனா விஷயத்தில் ஆரம்பம் முதலே இரு நாடுகளும் பனிப்போர் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு