Published:Updated:

US Elections: `ம்யூட்'... அதிபர் தேர்தல் விவாதத்தில் புதிய அதிரடி; கொதிக்கும் ட்ரம்ப்

டொனால்டு ட்ரம்ப் - ஜோ பைடன்
டொனால்டு ட்ரம்ப் - ஜோ பைடன் ( AP )

ஒவ்வொரு 15 நிமிடங்கள் தொடங்கும்போதும், முதல் இரண்டு நிமிடங்கள் தலா ஒருவருக்கு எனப் பிரித்து அளிக்கப்படவிருக்கிறது. `ஒருவர் பேசும்போது மற்றொருவரின் மைக் `ம்யூட்’-ல் போடப்படும்’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நவம்பர் மாதம் 3-ம் தேதி நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் கொரோனா காலத்திலும் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. நாளொரு நய்யாண்டியும், பொழுதொரு புரளியுமாக ஒவ்வொரு மேடையிலும் பஞ்சமில்லாமல் அந்நாட்டு ஊடகங்களுக்கு தீனி போட்டுவருகிறார் அதிபர் ட்ரம்ப். இந்தநிலையில், அதிபர் வேட்பாளர்கள் இடையிலான நேரடி விவாதத்தில் புதிய விதிமுறை ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறது விவாதத்தை ஒருங்கிணைக்கும் அமைப்பு.

ட்ரம்ப்
ட்ரம்ப்
Evan Vucci

அமெரிக்க அதிபர் வேட்பாளர்களிடையே நடக்கும் விவாதத்தில், ஒவ்வொரு தலைப்புக்கும் 15 நிமிடங்கள் எனப் பிரிக்கப்பட்டு நடப்பது வழக்கம். அவ்வாறு ஒவ்வொரு 15 நிமிடங்கள் தொடங்கும்போதும், முதல் இரண்டு நிமிடங்கள் தலா ஒருவருக்கு எனப் பிரித்து அளிக்கப்படவிருக்கிறது. `ஒருவர் பேசும்போது மற்றொருவரின் மைக் `ம்யூட்’-ல் போடப்படும்’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. விவாதத்தின் மற்ற நேரங்களில் இருவரது மைக்குகளும் அணைத்துவைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

`தேர்தலில் தோற்றால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும்!’- பிரசாரத்தில் ட்ரம்ப்

`இது ஒருதலைபட்சமான முடிவு' என விமர்சித்திருக்கும் ட்ரம்ப் தரப்பு, `இருப்பினும் திட்டமிட்டபடி நேரடி விவாதத்தில் அதிபர் கலந்துகொள்வார்’ என்று தெரிவித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய அதிபர் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் இடையிலான நேரடி விவாதம் வரும் வியாழக்கிழமை நடக்கிறது. இருப்பினும், இந்த முடிவுக்கு அதிபர் ட்ரம்ப் எப்படி எதிர்வினையாற்றுவார் என்று இப்போதே அமெரிக்க ஊடகங்கள் விவாதம் நடத்தத் தொடங்கியிருக்கின்றன.

இவர்கள் இருவரிடையே கடந்த செப்டம்பர் 29-ம் தேதி நடைபெற்ற விவாதத்தின்போது, ஜோ பைடன் பேசுகையில், ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் கொரோனா பேரிடர் மேலாண்மைப் பணிகளிலிருந்த மெத்தனப்போக்கைச் சுட்டிக்காட்டிக் கூறினார். அப்போது, விதிகளை மீறி இடைமறித்து பேசத் தொடங்கிய ட்ரம்ப் அவர் கூறிய கருத்துகளை எதிர்த்துக் காட்டமாகப் பேசியிருக்கிறார். நெறியாளர் ட்ரம்ப்பைப் பலமுறை எச்சரித்தும், அதை ட்ரம்ப் கண்டுகொள்ளாமல் இடைமறித்துப் பேசிய நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்தியது.

ஜோ பைடன்
ஜோ பைடன்
Carolyn Kaster

இது தொடர்பாக, ஜோ பைடனின் செய்தித்தொடர்பாளர் டி.ஜெ.டக்லோ கூறுகையில் ,`அதிபர் ட்ரம்ப், தேர்தல் ஆணையம் அமல்படுத்தியிருக்கும் விதிகளில் காட்டும் அக்கறையை, நாட்டின்மீது காட்டியிருந்தால், இது போன்ற நெருக்கடியான சூழலில் மக்கள் சிக்கியிருக்க மாட்டார்கள்’’ என்றார். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் அமெரிக்க மக்களிடையே ட்ரம்ப் மீதான எதிர்ப்பலைகள் அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு