Published:Updated:

ஒருபுறம் மோடிக்குப் புகழாரம்; மறுபுறம் இந்தியாவுக்கு எதிராகத் தீர்மானம்... அமெரிக்காவின் இரட்டை அரசியல்!

ட்ரம்ப் மற்றும் செனட்டர் கிரஹாம்
ட்ரம்ப் மற்றும் செனட்டர் கிரஹாம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவை பாராட்டிக்கொண்டிருக்க, அவருக்கு நெருக்கமான செனட்டர் லிண்ட்ஸே கிரஹாம், அமெரிக்க உள்துறை செயலர் மைக் பாம்பியாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்...

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தன் மனைவி மெலேனியாவுடன் வருகிற 24-ம் தேதி இந்தியா வருகிறார். இங்கு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள ட்ரம்ப், இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் பாராட்டும் விதமாகப் பல கருத்துகளை வெளியிட்டுவருகிறார். 'மோடி ஒரு ஜென்டில்மேன்' 'இந்திய சுற்றுப்பயணம் எனக்கு ஸ்பெஷலானது. அதற்காக நான் காத்திருக்கிறேன்' என்று ட்ரம்ப்பின் ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பதிவுகளைக் காண முடிகிறது.

ட்ரம்ப், மெலேனியா
ட்ரம்ப், மெலேனியா

கடந்த 1970-ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா, இந்தியாவுக்கு 'வர்த்தகத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் நாடு' என்ற அந்தஸ்தை வழங்கியிருந்தது. ட்ரம்ப் அதிபரான பிறகு, அந்த அந்தஸ்து பறிக்கப்பட்டது. இதனால், கடந்த ஓராண்டு காலமாக இந்திய அமெரிக்க வர்த்தகத்தில் பல்வேறு தடங்கல்கள். இத்தனைக்கும், இரு நாடுகளுக்கிடையே ஆண்டுக்கு 180 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. ட்ரம்ப்பின் இந்திய வருகையின்போது, இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று நம்பப்படுகிறது.

இதற்கிடையே, இந்தியாவுக்கு எதிராக அமெரிக்காவில் சத்தமில்லாமல் காய் நகர்த்திவருகிறார், ட்ரம்ப்புக்கு மிக நெருக்கமான குடியரசுக் கட்சி செனட்டரான லிண்ட்சே கிரஹாம். அமெரிக்காவைப் பொறுத்தவரை, அதிபருக்கு இணையான அதிகாரங்களைக் கொண்ட அமைப்பு, அமெரிக்கக் காங்கிரஸ். காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்கக் காங்கிரஸில் இந்தியாவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து உள்துறைச் செயலர் மைக் பாம்பியாவுக்கு, லிண்ட்சே கிரஹாம் உள்ளிட்ட நான்கு செனட்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அமெரிக்க காங்கிரஸ்
அமெரிக்க காங்கிரஸ்
`ராகுலால் ராஜினாமா முடிவெடுத்தாரா மன்மோகன்?’ - மான்டேக் சிங் அலுவாலியா புத்தகம் கிளப்பிய சர்ச்சை

அதில், ''காஷ்மீரில் இந்திய அரசு சுயாட்சியைப் பறித்துள்ளது. கடந்த 6 மாதங்களாக அங்கு, இணையதளச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில், இத்தனை நாள் இணையதளச் சேவையை முடக்கி வைத்திருப்பதால், மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், 70 லட்சம் மக்களுக்கு மருந்து மாத்திரைகள் கிடைப்பதில்லை. வர்த்தகம், கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். தனிநபர்களும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மத சுதந்திரமும் பாதிக்கப்பட்டுள்ளது. சி.ஏ.ஏ சட்டம் அமல் செய்யப்பட்டால், லட்சக்கணக்கான மக்கள் நாட்டை இழக்கும் அபாயம் ஏற்படும்'' என்று கூறியுள்ளனர்.

ட்ரம்ப் இந்தியா வரும் நிலையில், பிப்ரவரி 12-ம் தேதி, இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு செனட்டர்களில் இருவர், ஜனநாயகக் கட்சியையும் மற்ற இருவர், குடியரசுக் கட்சியையும் சேர்ந்தவர்கள். வரும் 30 நாள்களுக்கு இந்திய அரசு கீழ்க்கண்ட விஷயங்களில் நடவடிக்கை எடுக்க அமெரிக்கக் காங்கிரஸ் இந்தியாவை வலியுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ட்ரம்ப் மற்றும் லிண்ட்ஸே
ட்ரம்ப் மற்றும் லிண்ட்ஸே
  1. காஷ்மீர் முழுவதும் இணையதளச் சேவை மீண்டும் வழங்கப்பட வேண்டும். டெலிபோன் சேவையும் வழங்கப்பட வேண்டும்.

  2. ஊரடங்கு உத்தரவைத் தளர்த்த வேண்டும்.

  3. காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்துசெய்யப்பட்ட பிறகு, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.

காஷ்மீரில் இந்திய அரசாங்கம் மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், சில விஷயங்களில் ஈடுபட்டு வருகிறது. மதச்சார்பற்ற நாடான இந்தியாவில், மக்களை அச்சுறுத்தும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதும் இதில் அடங்கும். ஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசியலமைப்பின் 370-வது பிரிவை இந்தியா ரத்து செய்ததன் காரணமாக, அரசியல் நோக்கங்களுக்காக இந்திய அரசால் சிறை வைக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட வேண்டும். கைதிகள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் விளக்கப்பட வேண்டும். ஜம்மு - காஷ்மீரில் நிலவும் சூழலை அறிந்துகொள்வதற்காக சுதந்திரமான பார்வையாளர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், வெளிநாட்டு அமைப்புகளை அங்கு அனுமதிக்குமாறு இந்தியாவிடம் வலியுறுத்த வேண்டும்'' என்றும் கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

`3 மணி நேரம்; ரூ.100 கோடி; 10,000 போலீஸ்!' - ட்ரம்ப் வருகைக்காக அதகளமாகும் அகமதாபாத்

இணையதளச் சேவையைப் பொறுத்தவரை, காஷ்மீரில் ஃபேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைதளங்களுக்கு அனுமதியில்லை. பத்திரிகையாளர்களின் கோரிக்கையை ஏற்று, 481 இணையதளங்களுக்கு மட்டும் 2 ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு