Published:Updated:

ஹாங்காங்:`அமெரிக்கா கேங்க்ஸ்டர்களைப் போல அச்சுறுத்துகிறது!’ - கொதிக்கும் சீனா

ஜி ஜின்பிங் மற்றும் ட்ரம்ப்
ஜி ஜின்பிங் மற்றும் ட்ரம்ப் ( AP )

``தேசிய இறையாண்மை மற்றும் பாதுகாப்பை பேணுவதற்கான சீனாவின் உறுதித்தன்மை மற்றும் நம்பிக்கையை வெளியில் இருந்து செயல்படும் எந்த சக்தியும் தடுக்க முடியாது.”

கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கிய நாள் முதல் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இதையடுத்து, ட்ரம்ப் சீனாவையும், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுபவர்களையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். அமெரிக்காவைத் தவிர்த்து இந்தியா, ஹாங்காங் மற்றும் தைவானுடனும் சீனாவுக்கு பிரச்னை நிலவி வருகிறது. இந்தப் பிரச்னைகளிலும் அமெரிக்கா தலையிட்டு, தனது கருத்துகளையும் சீனாவுக்கு எதிரான நாடுகளுக்கு தங்களது ஆதரவையும் தெரிவித்து வந்தது. இதற்கு சீனா அவ்வப்போது பதிலடிகளையும் கொடுத்து வந்தது. இந்தநிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஹாங்காங்குக்கு வழங்கப்படும் முன்னுரிமைகளை ரத்து செய்யும் ஆணையில் கையெழுத்திட்டார். இந்த விவகாரம் அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை அடக்கும் விதமாகப் புதிய பாதுகாப்பு சட்டம் ஒன்றை சீனா கொண்டுவந்தது. இதற்கு எதிராகவும் ஹாங்காங் மக்கள் தீவிரமாக போராட்டத்தை நடத்தி வந்தனர். இது ஹாங்காங்கின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என சீனாவுக்கு அமெரிக்கா உட்பட பல நாடுகளும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தன. இந்தச் சட்டத்தால் அமெரிக்க நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. விசா தொடர்பான பிரச்னைகள் இந்தச் சட்டத்தால் எழும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், சீனா கடுமையான நெருக்கடிக்கு ஆளானது. எனினும், சீனா அவற்றைக் கண்டுகொள்ளாமல் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வேலைகளைத் தொடர்ந்து செய்தது. இந்த விவகாரத்தில் வடகொரியா சீனாவுக்கு ஆதரவாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

`ஹாங்காங் போராட்டம்...புதிய சட்டம்... எதிர்க்கும் அமெரிக்கா!’ - சீனாவுக்குக் கரம்கொடுக்கும் வடகொரியா

இந்தநிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹாங்காங் தொடர்பான சட்ட மசோதா ஒன்றில் நேற்று கையெழுத்திட்டார். இதையடுத்து சீனா, அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடர்பாகத் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ``அமெரிக்கா நியாயமற்ற முறையில் உள்விவகாரங்களில் தலையிடுகிறது. கேங்க்ஸ்டர்களின் லாஜிக்கைப்போல வெட்கமில்லாமல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஹாங்காங்கின் வளர்ச்சி மற்றும் ஸ்திரமின்மைக்கு பயன்படும் வகையில் தேசிய இறையாண்மை மற்றும் பாதுகாப்பை பேணுவதற்கான சீனாவின் உறுதித்தன்மை மற்றும் நம்பிக்கையை வெளியில் இருந்து செயல்படும் எந்தச் சக்தியும் தடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளது.

அதிபர் ட்ரம்ப், ஹாங்காங்குக்கு அளிக்கப்பட்டு வந்த பொருளாதார முன்னுரிமைகளை ரத்து செய்யும் ஆணையிலும் கடந்த செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டார். சீனா எவ்வாறு நடத்தப்படுகிறதோ அதைப்போலவே ஹாங்காங்கும் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். இதனால், பொருளாதாரத் தடைகள் மற்றும் விசா கட்டுப்பாடுகள் தொடர்பான பிரச்னைகள் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதையடுத்து, அமெரிக்காவுக்கு எதிராக சீனா எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் ஆதரவு அளிப்பதாக ஹாங்காங் அரசு தெரிவித்தது. இதனால், ஹாங்காங் மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தங்கள் அதிகளவில் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங்

சீனாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது தொடர்பாக சீனா, ``மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சுயாட்சி போன்ற காரணங்களைக் கூறி ஹாங்காங்கில் பிரச்னைகளை உருவாக்கி சீனாவை தாக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா கையாள்வது பாசாங்குத்தனமானது” என்று கூறியது. அமெரிக்கா பிரச்னைகளில் தலையிடுவது தொடர்பாகச் சில கட்சிகள் அமெரிக்க தூதரகத்தின் முன்பு போராட்டங்களையும் நடத்தியுள்ளன. போராட்டத்தின் ஈடுபட்டவர்கள், ``அமெரிக்கா சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்” என்று கோரிக்கைகளை விடுத்தனர். இதனால், ஹாங்காங் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

`அமெரிக்கா.. இந்தியா.. தைவான்.. ஹாங்காங்!’ - போருக்குத் தயாராகச் சொல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்
அடுத்த கட்டுரைக்கு